Friday, June 5, 2015

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்


தமிழகத்தின் மதிப்பு மிக்க தலைவர்களில் ஒருவராக திகழந்த கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் குறித்த தகவல்கள் நம்மை மட்டும் அல்ல நாட்டையே பெருமை கொள்ள வைக்கின்றது. காயிதே மில்லத்தின் 118வது பிறந்த நாள் விழா இன்று சென்னையில் கொண்டாடப்பட்டது. கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று போற்றப்படும் முகம்மது இஸ்மாயில் 1896ம் ஆண்டு ஜூன் மாதம் 5ம் தேதி 1896 பிறந்தார். காயிதே மில்லத் என்ற உருதுச் சொல்லுக்கு வழிகாட்டும் தலைவர் என்று பொருள்படி அழகிய பெயர் வைக்கப்பட்டது. திருநெல்வேலி பேட்டையில் பிறந்த காயிதே மில்லத்தின் தகப்பனாரின் பெயர் மியாகான் ராவுத்தர். திருவாங்கூர் அரச குடும்பத்தினருக்கு துணிகள் விற்பனை செய்யும் வணிகராகவும், மதத் தலைவர் (மவுலவி) ஆகவும் இருந்தார். காயிதே மில்லத் தனது சிறு வயதிலேயே தனது தந்தையை இழந்தார். அவரது தாயாரே அவருக்கு அரபு மொழியும், மத நூலும் கற்றுக் கொடுத்தார். காயிதே மில்லத்தின் மனைவியின் பெயர் சமால் கமீதா பீவி. இவர்களுக்கு சமால் முகம்மது மியாகான் என்ற ஒரே ஒரு மகன் உள்ளார். காயிதே மில்லத் தனது பி.ஏ. பொதுத் தேர்வை எழுதாமல் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமைப் போராட்டத்தில் பங்கு கொண்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் உறுப்பினராகவும் காயிதே மில்லத் சிறப்பாக பணியாற்றினார். காயிதே மில்லத் நீண்ட காலம் முஸ்லிம் லீக் கட்சி தலைவராக இருந்தார். அனைத்து கட்சியினரும் மதிக்கத்தக்க தலைவராக விளங்கினார். இந்திரா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி, ஜாகீர் உசேன், ஈ.வெ.ரா. பெரியார், ராஜாஜி, காமராஜர், அண்ணா,தலைவர் கலைஞர் ஆகியோரின் மதிப்பு மிக்க தலைவர்களில் ஒருவராக பாராட்டப்பட்டார். 1962, 1967, 1971 தேர்தல்களில் கேரளா, மஞ்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்கு சென்று பணியாற்றினார். 1967ம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியை கைப்பற்ற முக்கிய பங்காற்றினார். அரசியலில் மட்டும் இன்றி தொழிற்துறையிலும் காயிதெ மில்லத் புகழ் பெற்று விளங்கினார். தோல் பொருட்கள் மற்றும் இறைச்சி ஏற்றுமதி மற்றும் விற்பனையில் கொடிகட்டி பறந்தார். தொழிற்துறையில் புகழ் பெற்றதால் சென்னை துறைமுக பொறுப்புக் கழகம், சென்னை வர்த்தகத் துறை, தென்னக ரயில்வே ஆலோசனைக்குழு, இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில், தொழில் திட்டக்குழு, சுங்கவரிக் கழகம், தென்னிந்திய தொழில் வர்த்தக சபை உட்பட ஏராளமான அமைப்புகளில் உறுப்பினராக பணியாற்றினார். காயிதே மில்லத் 1972ம் ஆண்டு மார்ச் மாதம் 25ம் தேதி திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு குடல் புண் நோய்க்காக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் ஏப்ரல் மாதம் 5ம் தேதி நள்ளிரவு 1.15 மணிக்கு அவர் காலமானார். அவரது உடல் பொது மக்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்கு வசதியாக ராயப்பேட்டையில் உள்ள புதுக் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டது. திராவிட கழக தலைவர் ஈ.வெ.ரா.பெரியார் தலைவர் கலைஞர் உட்படப் பல அரசியல் தலைவர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். காயிதே மில்லத்தை பெருமைப்படுத்தும் வகையில், தமிழக அரசு நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு காயிதே மில்லத் நாப்பட்டினம் மாவட்டம் என்று பெயர் சூட்டியது. பின்பு, 1996ல் அரசு பேருந்துக் கழகங்கள், மாவட்டங்களிலிருந்து தலைவர்களின் பெயர்கள் நீக்கப்பட்ட பின்பு அதன் பெயர் நாகப்பட்டினம் மாவட்டம் என்று மாற்றப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2003ம் ஆண்டு காயிதே மில்லத் நினைவாக தமிழக அரசு மணிமண்டபம் கட்டியது. மேலும், காயிதெ மில்லத்தின் பெயர் தற்போது தமிழகத்தில் பல கல்வி நிறுவனங்களுக்கு பெருமையோடு சூட்டப்பட்டுள்ளது. இன்று அவரது பிறந்த நாளில் அவரைப் போன்று மக்களுக்காகவும், நாட்டுக்காக வாழவும், அனைவரிடமும் அன்பும், சமாதானமும் கொண்டு பெருமை பொங்க வாழவும் சபதம் ஏற்போம்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval