Friday, June 12, 2015

வாக்களிக்க முன்பதிவு தேர்தல் கமிஷன் புதிய திட்டம்!

front.91131247_std

தேர்தலில் வாக்களிப்பது ஒவ்வொருவரது கட்டாய ஜனநாயக கடமை என்ற நிலையில், வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு வரவழைக்க தேர்தல் ஆணையம் எவ்வளவோ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
கிராமப்புறங்களிலாவது ஓரளவு கணிசமான வாக்கு சதவீதம் பதிவாகிறது. ஆனால் நகர்ப்புற வாக்காளர்கள்தான், குறிப்பாக படித்த மற்றும் மேல்தட்டு வர்க்க பிரிவினர், ” ஓட்டுப்போடவா… ஐயோ அந்த கியூவில யாரு மணிக்கணக்கில் காத்து நிக்கிறது…?” என்று சலிப்புடன் கேட்டு வாக்களிக்க செல்லாமல் இருந்துவிடுகின்றனர்.
இந்நிலையில் இத்தகையவர்களுக்காகவே தேர்தல் ஆணையம், தற்போது புதிய திட்டம் ஒன்றை கொண்டுவருவது பற்றி தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
இந்த புதிய திட்டத்தின்படி வாக்காளர்கள், தேர்தல் நாளன்று தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிக்கு தங்களுக்கு சவுகரியமான வசதிப்படும் நேரத்தில், அதாவது 10 – 11 மணி, 11 – 12 மணி அல்லது மாலை 2 – 3 மணி என எந்த நேரம் வசதிப்படுமோ அந்த நேரத்தை, தங்களுக்கான வாக்களிக்கும் நேரமாக முன்னரே பதிவு செய்துகொள்ளலாம். இதனால் பல மணி நேரம் வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இருக்காது. அதிகபட்சமாக ஒரு மணி நேரத்திற்குள் வாக்களித்துவிட்டு வந்துவிட முடியும்.
வாக்காளர்கள் தங்களது வாக்களிக்கும் நேரத்தை முன்பதிவு செய்வதன் மூலம் ‘வரிசை’ முறைம் நிர்வாகம் மேம்படுவதுடன், வாக்காளர்கள் வரிசையில் நிற்கும் நேரமும் குறையும். அத்துடன் இது வரிசையில் நிற்பதை நினைத்து வாக்காளிக்க செல்லாத வாக்காளர்கள் எண்ணத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி, அவர்களையும் வாக்களிக்க வைக்கும்.
அதே சமயம் இவ்வாறு வாக்களிப்பதற்கான நேரத்தை முன்கூட்டியே தேர்ந்தெடுப்பவர்கள், காலை 8 முதல் மாலை 3 மணி வரையிலான நேரத்தை மட்டுமே பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னரோ அல்லது பின்னரோ வாக்களிக்கும் நேரத்தை தேர்வு செய்ய முடியாது.
வாக்களிப்பதற்கான நேரத்தை முன்கூட்டியே பதிவு செய்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளில், குறிப்பிட்ட இடத்தில் அமர வைக்கப்படுவார்கள். பின்னர் டோக்கன் வரிசை எண் படி அவர்கள் முறை வரும்போது, அழைக்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
இதனிடையே தொழில் நிமித்தமாக சொந்த ஊரிலிருந்து இடம்பெயர்ந்து வாழும் மக்கள், வாக்களிக்கும் தங்களது ஜனநாயக உரிமையை நிலைநாட்டுவதில் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இத்தகைய மக்களை எவ்வாறு வாக்களிக்க வைப்பது என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், ஆனால் இவர்களின் எண்ணிக்கை குறித்த அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் இல்லை என்பதால், தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட சில துறைகளை தொடர்புகொண்டு பேசி வருகிறது.
அத்துடன் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கும் மற்றொரு நடவடிக்கையாக voter slips களை வாக்காளர்களின் மொபைல்போன் அல்லது இண்டர்நெட் முகவரிக்கு அனுப்பி வைப்பது குறித்த திட்டமும் தேர்தல் ஆணையத்தின் பரிசீலனையில் உள்ளதாக துணை தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval