Saturday, January 21, 2017

இனி பெப்சி, கோக் பானங்களை விற்க மாட்டோம்..! - வணிகர்கள், தியேட்டர்கள் அதிரடி

Image result for coke images
குளிர்பானங்களை விற்க மாட்டோம் என்று வணிகர் பேரவை தலைவர் த வெள்ளையன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள சில திரையரங்குகளும் இதே முடிவை அறிவித்து, பெப்சி, கோக் நிறுவனங்களுக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்துள்ளன. மாட்டுப் பொங்கலன்று ஆரம்பித்தது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம். ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும், அதற்கு ஒரு அவசரச் சட்டம் கொண்டு வரவேண்டும் என்றுதான் முதலில் ஆரம்பித்தது இந்தப் போராட்டம். ஆனால் அதுவோ, அந்நிய பொருள்களை பகிஷ்காரம் செய்யும் போராகவும் மாறியுள்ளது. பீட்டா என்ற வெளிநாட்டு நிறுவனம்தான் இன்று ஜல்லிக்கட்டுக்கு பெரும் வில்லனாக நிற்கிறது. எனவே அந்த பீட்டா நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் தயாரிக்கும் பெப்சி, கோக் போன்ற எந்த குளிர்பானத்தையும் இனி விற்கக் கூடாது, வாங்கவும் கூடாது என போராட்டக் களத்தில் உள்ள இளைஞர்கள் அறைகூவல் விடுத்துள்ளனர். அதுமட்டுமல்ல, பெப்சி, கோக், பான்டா போன்ற பானங்களை உடைத்து தரையில் கொட்டிவிட்டு, ஒரு டம்ளர் தண்ணீரைக் குடித்து இந்த பானம் போதும் என்று வீடியோவில் பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். இந்த காட்சிகள் மக்கள் மனதில் பெரும் மாற்றத்தை உருவாக்கியுள்ளது. இதைத் தொடர்ந்து, பெப்சி, கோக் பானங்களை இனி விற்க மாட்டோம் என பல வணிகர்கள் தன்னிச்சையாக அறிவித்துள்ளனர். சில ஹோட்டல்களில் இதற்கான அறிவிப்புப் பலகையே வைத்துள்ளனர். இதைக் கண்ட தமிழ்நாடு வணிகர் பேரவை, வரும் ஜனவரி 26-ம் தேதி முதல் தமிழகத்தில் கோக், பெப்சி, பான்டா உள்ளிட்ட அந்நிய நாட்டு குளிர்பானங்கள் விற்கப்படாது என்று அறிவித்துள்ளது. வணிகர் பேரவை தலைவர் த வெள்ளையன் இதுகுறித்து நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அடுத்து பெப்சி, கோக் பானங்கள் அதிகம் விற்பனையாகும் திரையரங்குகள் சிலவும் இந்த பானங்களை விற்கப் போவதில்லை என அறிவித்துள்ளன. ராமநாதபுரத்தைச் சேர்ந்த டி சினிமாஸ் உரிமையாளர் தினேஷ் பாபு இதனை வெளிப்படையாக அறிவித்துள்ளார். "இனி உள்ளூர் பானங்களை மட்டுமே விற்கப் போகிறேன். குறிப்பாக இளநீர், மோர் போன்ற பானங்களை தியேட்டரில் விற்க ஆர்வமாக உள்ளேன். பாப்கார்ன் போன்ற பொருட்களில் வெளிநாட்டு தயாரிப்புகளையும் நிறுத்திவிட்டு அதற்கு இணையான உள்ளூர் தயாரிப்புகளை பயன்படுத்த பரீசிலித்து வருகிறோம். படிப்படியாக ,வெளிநாட்டு தயாரிப்புகளை முற்றிலுமாக நிறுத்த முடிவெடுத்துள்ளதற்கு, ரசிகர்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு அளிப்பார்கள் என நம்புகிறேன்," என்றார். சென்னையில் ஏற்கெனவே சில அரங்குகளில் கோக், பெப்சி விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. இதைவிட முக்கியம், இந்தப் பானங்களை வாங்குவதில்லை என இளைஞர்கள் உறுதியாக நின்றாலே போதும். தெறித்து ஓடிவிடுவார்கள் பீட்டா பார்ட்டிகள்! 
courtesy;oneindia

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval