தமிழகத்தில் உள்ள 33,973 ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி, குறைந்த விலையில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில், மண்எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது, ரேஷன் கார்டுடன் குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் மற்றும் செல்போன் இணைக்கப்பட்டு, கார்டு தாரர்கள் வாங்கும் பொருட்கள் விவரம் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.
இதை வைத்து தாங்கள் என்னென்ன பொருட்கள் வாங்கி உள்ளோம் என்பதை குடும்ப அட்டைதாரர்கள் தெரிந்துகொள்ள முடியும். இந்த நடவடிக்கையால் ரேஷன் கடைகளில் உள்ள பொருட்கள் இடைத்தரகர்கள் மூலம் கள்ளச்சந்தைக்கு போவது தடுக்கப்படும் என்று கூறப்பட்டது. இந்நிலையில், பொருட்கள் வாங்காமலேயே சில குடும்ப அட்டைதாரர்களின் செல்போனுக்கு வாங்கி விட்டதாக எஸ்எம்எஸ் வருவது பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. திருவொற்றியூர், ராமானுஜம் தெருவில் உள்ள ஒரு ரேஷன் கடையில் இருந்து கடந்த சில தினங்களாக குடும்ப அட்டைதாரர்கள் சிலருக்கு பொருட்கள் வாங்காமலேயே குறிப்பிட்ட பொருட்கள் வாங்கி உள்ளதாக செல்போனுக்கு குறுந்தகவல் வந்ததாம்.
குறிப்பாக, 2 லிட்டர், 6 லிட்டர் மண்ணெண்ணெய் வாங்கி விட்டதாக பலருக்கு எஸ்எம்எஸ் வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று, ‘பொருட்கள் வாங்காமலேயே எங்களுக்கு வாங்கி விட்டதாக எஸ்எம்எஸ் வந்துள்ளதே எப்படி?’ என கேட்டு ஊழியர்களுடன் கடும் வாக்குவாதம் செய்தனர். ஆனால், அதற்கு சரியான பதில் அளிக்காமல் கார்டுதாரர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், இது குறித்த புகாரின் பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதுபோல பல ரேஷன் கடைகளில் நடந்துள்ளது. இதுபற்றி சம்பந்தப்பட்டவர்கள் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம் சாட்டினர்.
எனவே, இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சென்று அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
உள்தாள் ஒட்டுவதற்கு கெடுபிடி
தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் கார்டுகள் இன்னமும் தயாராகாததால் ரேஷன் கடைகளில் உள்தாள் ஒட்டும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம் பகுதி ரேஷன் கடைகளில் உள்தாள் ஒட்டுவதற்காக குடும்ப அட்டைதாரர்கள் சென்றனர்.
அப்போது அங்கு இருந்த அதிகாரிகள் ஸ்மார்ட் கார்டு திட்டத்தின்படி குடும்ப அட்டை எண் மற்றும் ஆதார் எண்ணை தவறாக பதிவு செய்துள்ளதாகவும், சோழிங்கநல்லூர் உணவு பொருள் வழங்கல் உதவி ஆணையர் அலுவலகத்தில் திருத்தம் செய்தால் மட்டுமே உள்தாள் ஒட்ட முடியும் என்று கூறி மக்களை திருப்பி அனுப்பினர். இதனால், உள்ளதாள் ஒட்டுவதற்காக ரேஷன் கடைகளுக்கு சென்ற பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். மேலும், உதவி ஆணையர் அலுவலகத்துக்கு சென்றபோது, அதிக கூட்டமாக இருந்ததால், முதியோர்கள் காத்திருக்க முடியாமல் வீடு திரும்பினர்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval