Thursday, July 13, 2017

மொபைல்போன் பேசிய போது வெடித்தது: மாணவன் கைவிரல் துண்டிப்பு; பறிபோன கண் பார்வை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே, மாணவர் ஒருவர் மொபைல்போன் பேசியபோது, திடீரென வெடித்ததில் கையில் உள்ள, நான்கு விரல் துண்டிக்கப்பட்ட நிலையில், கண் பார்வையும் பறிபோனது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அருகே, ஆராஞ்சி கிராம பஞ்.,க்கு உட்பட்ட அரசனாபுரம் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பூவரசன்,12. இங்குள்ள நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று இரவு, 7:30 மணி அளவில், வீட்டு வராண்டாவில் டி.வி.எஸ்.50 மொபட் மீது உட்கார்ந்து கொண்டு, மொபைல்போன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, லேசான மழை பெய்து கொண்டிருந்தது. இந்நிலையில், திடீரென போன் வெடித்தது. அப்போது பூவரசனின் அலறல் சத்தம் கேட்டு, அவரது பெற்றோர் வந்து பார்த்தபோது, இடது கையில் ஆள்காட்டி விரலை தவிர்த்து, மற்ற அனைத்து விரல்களும் துண்டானதும், மேலும் வலது கண் பார்வை பறிபோனதும் தெரியவந்தது. உடனடியாக மாணவனை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கீழ்பென்னாத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
courtesy;Dinamalar

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval