Sunday, March 2, 2014

முதுமை: சுமையா? சுகமா?


சென்னை அரசு பொது மருத்துவ மனையில் முதியோர் மருத்துவப் பிரிவைத் தொடங்கி 25 ஆண்டுகள் ஓடி விட்டன. இன்று மூப்பியல் மருத்துவம் ஓர் ஆல மரமாக வளர்ந்து அதில் பல்லாயிரக் கணக்கான மக்கள் பயன் பெற்று வருகிறார்கள் என்பது மகிழ்ச்சியான செய்தி தான். ஆனால் நாணயத்தின் அடுத்த பக்கத்தை (முதியவர்களின் மறுபக்கம்) திருப்பிப் பார்த்தால் நமக்குக் கிடைப்பது ஏமாற்றமும் மன வருத்தமுமே.



picture of depressed  - Dramatic close up portrait of depressed old man - JPG



மருத்துவ ரீதியாக முதியவர்கள் ஓரளவு விழிப் புணர்ச்சியுடன் தக்க வைத்தியமும் செய்து உடல் நலம் பேணுகிறார்கள். முதுமையில் நோயின்றி வாழ என்ன காரணம்? முதியோர் மருத்துவத்தில் எனது 25 ஆண்டு அனுபவத்தில் தோன்றிய கருத்துக்கள்.

பெற்றோர்களுக்கு இருக்கும் நோய் பிள்ளைகளுக்கும் வர வாய்ப்புள்ளது. உதாரணத்துக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய். இவற்றுக்குத் தக்க முன் தடுப்பு எடுத்துக் கொண்டால் மேற் கூறிய நோய்கள் வராமல் ஓரளவுக்குத் தடுக்க முடியும்.
இளமையிலேயே பழக்க வழக்கங்களைக் கடைப் பிடிப்பவர்கள் முதுமையிலும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள், சத்தான உணவு, உடற்பயிற்சி, நல்ல ஓய்வு, போதிய அளவுக்கு உறக்கம் அவசியம், புகைப் பிடித்தல், மது அருந்துதல், போதைப் பொருளுக்கு அடிமையாதல் போன்ற தீய பழக்கங்கள் இல்லாமல் இருக்க வேண்டும். அதாவது ஆரோக்கியமான இளைஞனே ஆரோக்கியமான முதியவராக இருப்பார் என்பது நிச்சயம்.

நல்ல உடல் நலம், நாம் வாழும் சுற்றுப் புறச் சூழ்நிலையைப் பொருத்ததே.

அமைதியான சூழ்நிலையில் நல்ல காற்றோட்டத்துடன் சுத்தமான குடி தண்ணீரும் கிடைக்கப் பெற்று ஒருவர் வாழ்ந்து வந்தால் முதுமையில் அவர்களிடம் நோய்கள் நெருங்குவதில்லை.

முதுமையில் வரும் முக்கிய நோய்களான உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, சர்க்கரை மற்றும் மூட்டு சம்பந்தப் பட்ட நோய்களுக்கு நல்ல சிகிச்சை உண்டு. ஆனால் ஒருசில நோய்கள் முதியவர்களை நேரிடையாகவோ அல்லது மறை முகமாகவோ தாக்கும் அபாயம் உள்ளது.

அதில் அறிவுத் திறன் வீழ்ச்சி (டிமென்ஷியா) எனும் பயங்கர நோய் நம் முதியவ்ரகளுக்கு வரலாம். இது மூளை சம்பந்தப் பட்ட நோய். இது வருவதற்கு என்ன காரணம் என்று தெரியாது. இந் நோயின் முக்கிய அறிகுறி ஞாபக மறதி. நிகழ் காலத்தை அறவே மறந்து விடுவார்கள்.

ஆனால் பழைய சம்பவங்கள் பசுமையாக நினைவில் இருக்கும். இதனால் தன் சொந்த வீடு, தெரு, உறவினர்கள், நண்பர்களின் பெயர்கள் ஆகியவற்றை மறந்து மனத்தளவில் இறந்து உடலளவில் உலாவுவார்கள். இந் நோய்க்குத் தக்க சிகிச்சை கிடையாது. முக்கியமாக 70 வயதைத் தாண்டிய பெண்களுக்கு இது அதிகமாக வருகிறது. நம் நாட்டில் 50 லட்சம் முதியவர்கள் இந் நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். 25 சதவீத
முதியவர்களுக்குப் பரம்பரையாக வர வாய்ப்புண்டு. இவர்களைக் கவனித்துக் கொள்ளுபவர்கள் படும் வேதனையைச் சொல்லி மாளாது.

முதியவர்களைத் தாக்கும் மற்றொரு கொடிய நோய் எலும்பு பலவீனமடைதல் (ஆஸ்டியோ பொரோஸிஸ்) ; வயதான காலத்தில் சில முதியவர்களுக்கு, முக்கியமாக பெண்களுக்கு எலும்பிலுள்ள சுண்ணாம்புத் சத்து மற்றும் சில ஊட்டச் சத்துகள் குறைவதால் எலும்புகள் வலிமை இழக்கின்றன. இதற்குண்டான அறி குறிகள் ஏதும் வெளியே தெரியாது.

சிறிது கீழே விழுந்தாலும் பல எலும்பு முறிவுகள் ஏற்பட்டு முதியவர்களைப் படுக்கையில் தள்ளி விடும். ஒரு சிலருக்கு அறுவைச் சிகிச்சை மூலம் நல்ல குணமளிக்க முடியும். ஆனால் பலருக்கு அது இயலாத ஒன்று. இதனால் படுக்கையிலே கிடந்து படுக்கைப் புண், மார்புச் சளி போன்ற பல தொல்லைகள் ஏற்பட்டு, இறுதியில் மரணம் ஏற்பட வாய்ப்புண்டு.

எல்லா வயதினருக்கும் புற்று நோய் ஏற்பட்டாலும் முதுமைக் காலத்தில் இந் நோய் வர வாய்ப்புகள் அதிகம். புற்று நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் தக்க சிகிச்சை அளித்து பூரண குணமாக்க முடியும்.

நோய்களையும் மிஞ்சி முதுமையில் அதிகம் தொல்லை தருவது குடும்பம், நிதி சார்ந்த பிரச்சினைகள். கூட்டுக் குடும்பங்கள் மறைந்து விடுகின்றன. 30 சதவீத முதியவர்கள் கூட்டுக் குடும்பத்தில் இல்லை. முதியோர் இல்லங்கள் புற்றீசல்கள் போல் புதிது புதிதாக ஆரம்பிக்கப் பட்டு வருகின்றன.

இதற்கு யார் காரணம் ? அயல் நாடுகளில் கிடைக்கும் வேலை வாய்ப்பு படித்த இளைஞர்களைச் சுண்டி இழுக்கிறது. பெண்களின் ஒற்றுமையின்மையால் கூட்டுக் குடும்பம் விரிசலைகிறது. இட வசதி மற்றும் நிதி வசதிக் குறைவினால் முதியவர்கள் வெளியே தள்ளப் படுகிறார்கள்.

குடும்பத்தார்களிடமிருந்தும் உறவினர்களிடமிருந்தும் அவர்கள் தனிமைப் படுத்தப் படுகிறார்கள். தனிமையின் விளைவு மனச் சோர்வு. தனியே வாழும் முதியவர்கள் தம் உடைமைக்கும் உயிருக்கும் பாதுகாப்பின்றி பயந்து வாழும் வாழ்க்கை நகர்ப் புறங்களில் அதிகம். இதோடு வறுமையும் முக்கியப் பிரச்சினையாக உள்ளது. நம் நாட்டில் 40 சதவீத முதியவர்களுக்கு எந்த வித வருமானமும் இல்லை.
இவர்களால் எப்படி வாழ்க்கையை நடத்த முடியும்?

பெண்களின் ஆயுள் அதிகரிப்பதால் விதவைகளின் எண்ணிக்கை பெருகியுள்ளது. நம் நாட்டில் 72 சதவீதம் முதியவர்கள் கிராமங்களில் வாழ்கிறார்கள்.

நல்ல உடல் ஆரோக்கியத்தோடு சற்று நிதி வசதியோடு இருந்தால் முதுமை ஒரு சுகம் தான். மாறாக பல நோய்களுடன் போராடிக் கொண்டு நிதி வசதியின்றி வாழும் முதியவர்களின் நிலை அவர்களுக்கு மட்டு மல்ல மற்றவர்களுக்கும் ஒரு சுமையே. இது ஒரு கசப்பான உண்மை.

Thank you : www.koodal.com

    தகவல் ;N .K .M .புரோஜ்கான் 
    அதிரை 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval