ஒரு மனநல மருத்துவரிடம் கேட்டார்கள். "நீங்கள் நூறு சதவிகித புத்தி சுவாதீனம் உள்ளவர்களைப் பார்த்தால் என்ன செய்வீர்கள்?" அதற்கு அவர் சொன்னார். "நிச்சயம் நாங்கள் அவர்களை குணப்படுத்துவோம்" என்று.
ஒரு வகையில் எல்லோரிடமும் சிறிதளவிற்குப் புத்தி சுவாதீனமற்ற தன்மை இருக்கிறது. வைரங்களைச் சேகரிப்பது போலப் புத்தகங்களைச் சேகரிப்பதும் ஒருவிதமான போதை. தபால் தலைகளைச் சேகரிப்பதைப்போல விதவிதமான செடிகளைச் சேகரிப்பதும் ஒரு விதமான போதை. காரணம் சேகரிக்க ஆரம்பிக்கின்ற போதெல்லாம் எதிர்பார்ப்பு கூடுகின்றது. நிகழ்காலத்தை நாம் தவற விடுகின்றோம். ஒவ்வொரு
நொடியிலும் பதற்றத்தை உருவாக்கிக் கொள்கின்றோம்.
உடல் இயற்கை தந்தது. நோய்கள் நாம் கண்டுபிடித்தவை. அவை உடல் ரீதியான நோயாக இருந்தாலும் சரி, மன ரீதியான நோயாக இருந்தாலும் சரி, நாம் நோய்களுக்குப் பெயர் வைத்த அளவிற்கு அவற்றிற்கு மருந்துகளைக் கண்டுபிடிக்கவில்லை.
பெயர் வைப்பது என்பது நாம் தெரிந்து கொண்டு விட்டோம் என்று சொல்வதற்குத் தானே தவிர அதிலிருந்து விடுபடுவதற்காக அல்ல. அதனால் இன்று நாம் பயங்களில் இருந்தும், சந்தேகளிலிருந்தும் விடுபட முடியாமல் இருக்கிறோம். உண்மையிலேயே தேடுதல் இருக்குமேயானால் நம்மால் உயரமான எல்லைகளைத் தொட முடியும். ஆனால் அது உலகத்திற்காக நிகழ்த்தப்படுகின்ற ஒரு சாதனையாக இருக்காது. தனக்குள்
நிகழக்கூடிய ஒரு பரிசோதனையாக இருக்கும்.
திபெத்தில் இருந்த ஒரு மன்னர் சமத்தன்மையை தன்னுடைய குடிமக்களிடத்தில் ஏற்படுத்த நினைத்தார். எல்லோருடைய செல்வத்தையும் ஒரு இடத்தில் குவித்து அந்த மக்களிடம் சமமாகப் பிரித்துக் கொடுத்தார். ஆனாலும் சில ஆண்டுகளிலேயே சிலர் பணக்காரர்களாகவும், சிலர் ஏழைகளாகவும் ஆகியிருப்பதைப் பார்த்தார். மீண்டும் ஒருமுறை செல்வத்தைச் சேர்த்து பகிர்ந்தளித்தார். இப்படி
மூன்றுமுறை செய்தார். அப்படியும் சில ஆண்டுகளில் சிலர் வறியவர்களாகவும் சிலர் செல்வந்தர்களாகவும் இருப்பதைக் கண்டு தன்னுடைய முயற்சியினைக் கைவிட்டார்.
வறுமை வெளியில் இல்லை உள்ளே இருக்கிறது. இன்பம் என்பது பிறரால் வருவது, மகிழ்ச்சி என்பது பிறவற்றால் வருவது. ஆனந்தம் என்பது தனக்குள் நிகழ்வது. எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாதவர்களால் தான் ஆனந்தத்தை அடைய முடியும்.
நாளையைப் பற்றிய பயம் இல்லாவிட்டால் நாம் ஆனந்தத்தில் திளைத்திருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ள முடியும். நாம் ஆனந்தத்திலே நிரம்பியிருக்கின்றோம் என்று நினைக்கின்ற போது வெளியிலிருந்து ஆனந்தம் வரவேண்டியதில்லை.
உபநிடதத்தில் இருந்து இனாயத்கான் என்பவர் ஒரு அழகான கதையை மேற்கோள் காட்டுவதுண்டு. ஒரு நாள், ஒரு குட்டி மீன், ராணி மீனிடம் சென்று நான் கடலைப் பற்றிய நிறையக் கேள்விப் பட்டிருக்கிறேன். கடல் என்பது என்ன? அது எங்கேயிருக்கின்றது? என்று கேட்டது. அதற்கு ராணி மீன் சொன்னது. "நீ வாழ்ந்து கொண்டிருப்பதும் கடல்தான். உன்னுடைய மையப் பகுதியும் கடல்தான், கடல் உனக்குள்ளேயும்
இருக்கிறது வெளியேயும் இருக்கிறது. நீ கடலினால் ஆக்கப்பட்டிருக்கிறாய். நீ கடலிலேயே முடிந்து போவாய். உன்னைக் கடல் எப்போதும் சூழ்ந்து கொண்டிருக்கின்றது" ஆனந்தத்தால் நிரம்பப் பெற்றதாக நினைப்பவன் நிகழ்காலத்தில் முழுவதுமாக இருக்கின்றார்கள். அவர்கள் "டயோஜினஸ்" என்கின்ற கிரேக்கக் துறவியைப் போல இருக்கின்றார்கள். கிரேக்கத்தில் இரண்டு டயோஜினல்கள்
இருந்தார்கள்.
அவர்கள்,
1. சினோப்பின் டையோ ஜினஸ் (Diogenes of sinope)
2. டையோஜினஸ் லேர்ஷியஸ் (Diogenes of laertius)
முதலாம் டயோஜினஸ் ஒரு விபரீதமான மனிதர். ஒருநாள் அவரை சிலர் பிடித்து அடிமையாக விற்க சந்தைக்கு அழைத்துச் சென்றார்கள். அவர் தப்பிவிடுவாரோ, என்று கயிறுகளால் கட்டி அவரை அழைத்துச் செல்ல முற்பட்டனர். "என்னை நீங்கள் விற்கத்தானே போகிறீர்கள் வாருங்கள் போகலாம். நான் தயாராக இருக்கிறேன்" என்றார். அவர் கைகளை வீசி கம்பீரமாக முன்னால் செல்ல அவரைப் பிடித்தவர்கள் பின்னால்
அடிமைகளைப் போல ஓடிக் கொண்டிருந்தார்கள். சந்தைக்குச் சென்றதும் அவர் சொன்னார். நீங்கள் என்னை ஏலம்போட வேண்டாம். நானே ஏலம் விட்டுக் கொள்கிறேன்" என்று ஏலமேடையின் மீது ஏறி நின்று ஒரு எஜமானன் விற்பனைக்குத் தயார் எந்த அடிமை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என்று கர்ஜித்தார்.
நம்மை எஜமான் ஆக்கிக் கொள்வதும் அடிமையாக்கிக் கொள்வதும் நம் மனப்பான்மையில் இருக்கிறது. நிகழ்காலத்தில் வாழ்பவர்கள் அந்த நொடியில் எஜமானர்களாக இருக்கிறார்கள். அவர்கள் எதிர்காலத்தை எண்ணித் தன் வாழ்க்கையை வீணடிப்பது இல்லை.
இன்று மட்டும் நிஜம் என்கிற கோட்பாடு தான் நம்மால் வலியுறுத்தப்படுகின்ற மிகப்பெரிய தத்துவம். அதனால் தான் நாம் சரித்திரத்தை எழுதி வைக்கவில்லை. நமது சுயசரிதைகளும் இல்லை.
சுயம் என்பது உள்ளே துழாவ வேண்டியது. அது இறந்த காலமும், எதிர்காலமும் அற்ற நிலை என்பதனால் தான் இங்கே வரலாற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. அது தனிமனித வரலாறாக இருந்தாலும் சரி, சாம்ராஜ்யங்களின் சரித்திரமாக இருந்தாலும் சரி, தேடல் மிகுந்திருந்தவர்கள் எல்லாம் தேடலைப் பற்றி எழுதினார்களே தவிர தன்னைப் பற்றி எழுதவில்லை. நான் என்பதே தன்னைக் காட்டிலும்
தனக்கு நிகழ்ந்த அதிசயங்களை தான் சந்தித்தவர்களின் தாக்கங்களை, தனது அனுபவத்தின் வெளிப்பாடாக, மின்னல் கீற்றுக்களாக வெளிவந்த வாசிப்புகளும் தான் என்கிற போது அதில் தான் காணாமல் போவது தான் மிகப்பெரிய சாதனையாகப் கருதப்பட்டது. அதனால் தான் இங்கே சிற்பிகளின் பெயர்கள் சிற்பங்களில் இல்லை. ஓவியர்களின் கையொப்பம் ஓவியத்தில் இல்லை. அவர்களுக்குப் பெயர்களைக்
காட்டிலும் கலை முக்கியமாக இருந்தது. கலை என்பது ஒரு குறிக்கோளைக் குறித்துச் செய்யப்பட்டது. ஒவ்வொரு சிற்பத்தோடும் தானும் செதுக்கப்படுவதாய் ஒரு சிற்பி நினைத்து சிற்பம் அழகாக வந்தபோது அவன் சிற்பத்துக்கு நன்றி சொல்வதுண்டு.
மிகத் தேர்ந்த நாட்டிய வல்லுநர்கள் எல்லாம் இருந்தார்கள். ஆனால் அவர்கள் நடனத்தைத் தேர்ந்தெடுத்தது. "ஒரு கணத்தில் தானே நடனமாகிப் போய்விட மாட்டோமா!" என்கிற ஆசையில் கலைஞனே கலையாக மாறுகிற அனுபவம் நடனத்தில் கிடைக்கும் என்பதாகும். "ஏட்ஸ்" கூறுவதைப் போல "நடனமாடுபவரையும், நடனத்தையும் ஒருபோதும் பிரிக்க முடியாது" என்பதால் இறைமையை நோக்கிச் செலுத்துகின்ற
விழிப்புணர்வு நடனம் மலர்ந்தது.
ஓவியம் முடிந்ததும், ஓவியனும், ஓவியமும், தனித்தனியாகி விடுகின்றன. கவிதையில் கடைசி முற்றுப்புள்ளி வைக்கின்ற போது கவிஞன் காணாமல் போய்விடுகிறான். கவிதை எழுதும்போது மட்டுமே அவன் கவிஞனாக இருக்கிறான். கவிதை முடிந்ததும் அவன் மனிதனாகி விடுகிறான்.
ஆனால் நடனமாடுபவர்களை நடனத்திலிருந்து பிரிக்க முடியாது என்பதனால் தான் உருவாகிற சக்தியை வளர்ப்பதற்காக இறைமையை காஸ்மிக் நடனமாக வடிவமைத்தார்கள். உருவாக்குதல் தான் உருவாக்குபவர்.... படைப்பு தான் படைப்பாளி என்கிற தத்துவத்தில் அது இழையோடுகிறது. Fritjif capra என்பவர் தன்னுடைய Tao of physics என்கிற நூலில் அணுக்களைக் பிரித்தால் அவற்றின் அசைவு காஸ்மிக் நடனத்தை ஒத்திருக்கிறது
என்று குறிப்பிடுகின்றார்.
காஸ்மிக் நடனம் என்னும் அந்த அற்புத சிற்பம் பல நேரங்களில் உங்கள் கண்களில் விழுந்திருக்கும். அது முழுமையாக உங்கள் இதயத்தில் நுழைந்திருக்கிறதா? என்பது கேள்வி. ஆடுகிற நடனத்தில் சுழற்சியில் கழுத்தில் இருக்கும் நாகமும், கையில் இருக்கிற நாகமும் வேகத்திற்கு இயைந்து வளைந்திருப்பதும், சடாமுடியும் இடுப்புத் துணிகளும், காற்றில் பறப்பதையும், ஒளியை உணர்த்த
தீப்பிழம்பும் ஒலியை வெளிப்படுத்த உடுக்கையும் சித்தரிக்கப்பட்டிருப்பதும் ஒரு கையில் அருளலும் ஒரு கையில் மறைத்தலும் வெளிப்படுவதையும் தீமையை முயலகனாகச் சித்தரித்து முழுவதுமாக அதை அப்புறப்படுத்தாமல் ஆனால் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கலாம் என்பதை உணர்த்துவதாய், இன்னொரு காலில் விடுத்தலை உணர்த்தி நிகழ்காலத்தை உணர்த்துவதாக இருக்கிறது அந்தச்
சிற்பம்.
நடனம் என்பதே நிகழ்காலக் கலை. நடனத்தைத் தரிசிக்க வேண்டுமானால் நடனம் ஆடுவதும், அதனைப் பார்ப்பதும் நிகழ்காலத்தில் நிகழவேண்டும். நமது தொல்பொருள் இலாகா பயன்படாது. நடனங்களை நாம் அரங்கேற்றலாமே தவிர சேமிக்க முடியாது.
உருவாக்குதல் மூலம் தான் உருவாக்கப்படுவதை அடைய முடியும். உச்சபட்ச விழிப்புணர்வை காஸ்மிக் நடனம் கற்றுத் தருகிறது. ஒவ்வொரு நொடியிலும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டுமென்பது தான் பழைய உபநிடதம் கூறுகின்ற உயர்ந்த நெறி. சென்னிலும் ஒவ்வொரு நொடியிலும் முழுமையாக வாழ் என்று கூறப்பட்டிருக்கிறது.
சோட்டோ சென்னைப் பொறுத்தவரையில் நொடிக்கு நொடி வாழ்வது மிகுந்த முக்கியமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. நாம் வடிக்கிற கலையிலும், செய்கிற செயலிலும், பார்க்கிற பார்வையிலும் நடக்கிற நொடியிலும் முழுமையாக இருப்போமேயானால் அது தியானம் செய்வதற்குச் சமம் Roshi Philip kapalaeu தன்னுடைய "Zen Dawn in the West" என்கின்ற நூலில் "ஜப்பானியர்கள் மிகச் சிறந்த பொருள்களைப் படைப்பதற்கு முக்கியக்
காரணம் அவர்கள் ஒவ்வொரு நொடியிலும் முழுமையாக வாழ்வது தான்" என்று குறிப்பிடுகின்றார்.
இந்த நொடியை முழுமையாக வாழவேண்டும் என்கிற எண்ணம் வருகிற போது விழிப்புணர்வு உயர்ந்த நிலைக்குத் தாவுகிறது. அப்போது கவனம் சிதறுவதில்லை. கான்சென்ட்ரேஷன் என்பது வேறு அட்டென்ஷன் என்பது வேறு. கான்சென்ட்ரேஷன் என்று சொல்கிற போது அது.. நாம் மிகுந்த பிரயத்தனம் செய்து கவனத்தைச் செலுத்துவது. அது நமது ஆர்வத்திற்கு விரோதமானதாக இருக்கிறது.
அப்போது தலை உயிர்க்கிறது. சக்தி செலவாகிறது, வெறுப்பு தோன்றுகிறது. அட்டென்ஷன் என்பது நாமாக விரும்பு கவத்தைத் செலுத்துவது, இது இயற்கையோடு இயைவது.
ஜப்பானியர்கள் அந்த நிமிடத்தில் வாழ்வதனால் அவர்கள் செய்வதை மகிழ்ச்சியோடு செய்கிறார்கள். அனுபவித்துச் செய்கிறார்கள். அவர்கள் செயலில் உற்சாகம் தொற்றிக் கொள்கிறது. ஒவ்வொரு பொருள் உருவாகும்போதும் அவர்கள் மனம் மகிழ்ச்சியால் நிறைகிறது. பொருள் அழகாக வருகின்ற போது அவர்களுக்குத் திருப்தி ஏற்படுகிறது. அந்த நொடியை முழுமையாகக் கழித்ததாக அவர்கள் நிறைவு
கொள்ளுகிறார்கள். ஆனால் நாம் ஒரே நேரத்தில் இரண்டு முயல்களைத் துரத்துவதால், நம் கைகளுக்கு ஆமைகள் மட்டுமே அகப்படுகின்றன. அப்படிப்பட்ட மனநிலையை அடைகின்ற போது நாம் சிறந்த பொருள்களைச் செய்ய முடியும். சிறந்த புன்னகையை உதிர்க்க முடியும். தூய்மையான உறவை ஏற்படுத்த முடியும். நம்முடைய உள்ளுணர்வு விழிப்புணர்வோடு இருக்கின்றபோது ஆழ்மனதிற்குள் கசிகிற எண்ணங்கள்
மிகவும் குறைவாக இருக்கின்றன. விழிப்புணர்வு மிகவும் குறைவாக இருக்கின்றன. விழிப்புணர்வு என்பதை எவ்வாறு மேம்படுத்துவது?
நன்றி: கூடல் மலர்
தகவல் N.K.M.புரோஜ்கான்
அதிரை
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval