அதிரை மெய்சா
இவ்வுலகில் ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்று ஒரு பழமொழி சொல்ல நாம் கேட்டிருப்போம். ஏமாற்றுவேலை என்பது பொருள்களை விற்பதில்,பணம்காசு கொடுக்கல்வாங்களில், கொடுத்தவாக்கை நிறைவேற்றுவதில், இப்படி இன்னும் எத்தனையோ வகையில் ஏமாற்றுவேலைகள் இவ்வுலகில் பலதரப்பட்ட வகையில் அனுதினமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பிறரை ஏமாற்றி பெறுவது அல்லது ஏமாற்றி அடைவது நல்ல பழக்கமல்ல. பிறரை ஏமாற்றும்போது எதையோ நாம் பெரிதாக சாதித்து விட்டது போல சந்தோசமாகத்தான் இருக்கும். ஆனால் அந்த ஏமாற்றுவேலை அதிகநாள் நீடிப்பதில்லை.என்றாவது ஒருநாள் அனைவருக்கும் அறியத்தான் செய்யும். அப்போது மிகுந்த தலைகுனிவை ஏற்படுத்தி தம்மீது உள்ள மரியாதையை, நம்பிக்கையை இழக்கச்செய்யும்.
சொல்லப்போனால் பிறரை ஏமாற்றி விற்பனை செய்யும் பொருளானாலும், செய்யும் தொழிலானாலும், பார்க்கும் வேலையானாலும் இன்று இல்லையேல் ஒருநாள் அதற்க்கான மாற்றுபலன் கிடைக்கத்தான் செய்யும். அந்த ஏமாற்றுவேலை வெளிச்சத்திற்கு வந்துதான் ஆகும். அப்படித்தெரியும் பட்சத்தில் ஏமாற்றி விற்கப்படும் தரம் குறைந்த பொருட்களை மக்கள் மீண்டும் அதை வாங்கப் போவதில்லை.அதுமட்டுமல்ல ஏமாற்றிய கடைக்காரரிடம் வைத்திருந்த நம்பிக்கையும் போய் மீண்டும் வேறு பொருட்களை அந்தக் கடையில் நம்பி வாங்க மனம்வராமல் போய் விடுகிறது. இப்படி ஏமாற்றுவதன் காரணமாக வாடிக்கையாளர்கள் குறைந்து வியாபாரம் பாதிப்புக்குள்ளாகி அத்தோடு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு அந்த ஸ்தாபனத்தை இழுத்து மூடும் சூழ்நிலை ஏற்ப்பட்டுப்போய் விடுகிறது. ஆகவே ஏமாற்றுவேலை வெகுநாட்கள் நீடிப்பதில்லை.
பார்க்கும் வேலையில் ஏமாற்றினாலும் இதேகதிதான். தம்மீதுள்ள நம்பிக்கை போய் விட்டால் அந்த நபரை நம்பி வேலையை ஒப்படைக்க மனமில்லாமல் போய்விடுகிறது. பிறகு அவருடைய வருமானத்திற்க்கே ஆபத்தாகிவிடும். இதை சிலர் உணர்வதில்லை. பாதிப்பு வரும்போதுதான் நினைத்து கவலை கொள்வார்கள்.
அதுபோல ஒரு அலுவலக பணியாளர் பொய்யான காரணங்கள் சொல்லி வேலையை ஏமாற்றிவருவது தெரியவந்தால் அவருக்கு பணிஉயர்வு, சம்பளஉயர்வு, பிறசலுகைகள் ஏதும் இல்லாமல் போய்விடுகிறது. வேலையை இழக்கவும் நேரிடுகிறது. அடுத்த நிறுவனத்தாரும் அவருக்கு வேலை வாய்ப்பளிக்க அச்சப்படுவார்கள்.
கெட்ட பெயர் ஒருபுறமிருக்க இருந்த வேலையையும் இழந்து நிம்மதியில்லாமல் மன நோயாளியாய் மாறும்நிலை உருவாகிவிடுகிறது. ஏமாற்று வேலை அதிகநாள் நீடிக்காது. ஏமாற்று வேலைக்கு ஆயுள் குறைவே. அது நிலைத்து நிற்ப்பதில்லை
சிலசமயம் சந்தர்ப்பசூழ்நிலையில் ஏமாந்து போவதும் உண்டு. அத்தருணத்தில் தான் ஏமாந்ததை சரிசெய்ய அடுத்தவர்களை ஏமாற்றுகிறார்கள். இதுபற்றி தெரிய வரும்போது தான் ஏமாந்த விஷயத்தை சொல்லி நியாயப்படுத்த முயற்சிப்பார்கள். அது ஒருக்கிலும் நியாயமாகாது. இப்படியும் ஒருசிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அடுத்து ஏமாறுபவர்கள் பக்கம் பார்க்கப் போனால் சரியான விழிப்புணர்வு இல்லாததே முதற்க்காரணமாக இருக்கிறது.
கவர்ச்சி,மோகங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்தக் காலத்தில் இவைகளைக் கொண்டு மக்களை எளிதில் ஏமாற்ற முடிகிறது. காரணம் இக்காலத்து மக்கள் கவர்ச்சியான விளம்பரங்கள், கவர்ச்சியான ஆடைகள், கவர்ச்சியான பேச்சுக்கள் என அனைத்திலும் கவர்ச்சியையே அதிகம் விரும்புகிறார்கள்.
அனைத்திலும் கவர்ச்சியே ஆக்கிரமித்து விட்டது. ஆதலால் கவர்ச்சியில் உலகே மயங்கிக்கிடக்கிறது. ஏமாற்றுபவர்களுக்கு இது மிகவும் நல்லதொரு சாதகமாகவும், சந்தர்ப்பமாகவும் அமைந்து விடுகிறது.
பெரும்பாலும் பொதுமக்கள் பொருளின் தரத்தைப்பார்ப்பதை விட அதனைப் பேக் செய்து வைத்திருக்கும் கவர்ச்சியைப் பார்த்துதான் வாங்குகிறார்கள்.
இன்னும் பார்ப்போமேயானால் சிறுதொழில் செய்பவர்கள் மலிவான விலையில் தரமான பொருளை நேர்மையாக விற்றாலும் அதை விரும்பி வாங்குபவர்கள் மிகக்குறைவே யாகும். அதேபொருளை பெரிய அங்காடிகளில் வண்ண வண்ண நிறத்துடன் பேக் செய்யப்பட்டு அதிக விலைக்கு விற்றாலும் அதைத்தான் வாங்கிச் செல்கிறார்கள்.
ஆக இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் மக்கள் விழிப்புணர்வு பெறாத வரை ஏமாற்று வேலைகள் முடிவில்லாமல் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கும்.
எனவே மக்கள் விழிப்புணர்வுடன் நடந்து கொள்வதுடன் ஏமாற்றுபவர்களும் மக்கள்நலன், நாட்டுநலன் கருதி பிறரை ஏமாற்றாது நேர்மையாக நடந்து கொண்டால் தமது தொழில் மட்டுமல்ல நம்நாடே நேர்மையான நாடென உலகநாட்டு மத்தியில் சிறந்த பெயருடன் தலைநிமிர்ந்து நிற்கும்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval