சென்னை : தம்பி வா தலைமை ஏற்க வா என்று ஒருவர் மட்டும் அழைத்தால் ஜெயித்துவிட முடியாது, மாற்றம் வேண்டும் என்பதே தேர்தல் தோல்வி உணர்த்துகிறது என்று முன்னாள் எம்பி மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
ஆர்கே நகர்தேர்தலில் திமுக டெபாசிட்டையே இழந்திருப்பதற்கு ஸ்டாலின் சரியாக செயல்படாததே காரணம் என்றும், ஸ்டாலின் செயல்தலைவராக இருக்கும் வரை திமுகவால் எந்தத் தேர்தலிலும் வெற்றி பெற முடியாது என்றும் மு.க.அழகிரி கூறியுள்ளார். புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள தொலைக்காட்சி பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கருணாநிதி உடல்நிலை சரியில்லாமல் போன 4 ஆண்டுகளில் திமுக எந்தத் தேர்தலிலுமே வெற்றி பெறவில்லை. தேர்தல்களில் திமுக வெற்றி பெறவில்லை என்றாலும் திடமான எதிர்க்கட்சியாக இருந்திருக்கிறது, ஆனால் இந்த முறை டெபாசிட்டே போயுள்ளது.
துரோகம் செய்தவர்கள்
அண்ணா காலத்தில் இருந்து உழைத்தவர்கள் தான் கட்சியில் இருக்கின்றனர். அவர்களைப் போய் பணத்திற்கு சோடை போய்விட்டார்கள் என்று சொல்வதை யாராலும் ஏற்க முடியாது. கட்சியில் நீண்ட நாட்கள் உழைத்தவர்கள் இருக்கும் போது நேற்று வந்த மதிமுக, அதிமுககாரர்கள் என துரோகம் செய்தவர்களை அருகில் வைத்துக் கொண்டு அவர்களுக்கு பதவிகளை கொடுப்பதை திமுகவில் காலம் காலமாக இருப்பவர்களால் ஏற்க முடியாது.
திறமை வேண்டும்
திமுகவில் மாற்றம் வரவேண்டும். தம்பி வா தலைமை ஏற்க வா என்று ஒருவர் மட்டும் அழைத்தால் ஜெயத்துவிட முடியாது. திறமை வேண்டும், வேனில் இருந்துகொண்டு பிரச்சாரம் செய்தால் ஓட்டு கிடைத்துவிடாது, களப்பணியாற்ற வேண்டும். கருணாநிதி மக்களுடன் மக்களாக களப்பணியாற்றினார். இவர் ஊர்ஊராக சுற்றுகிறார் ஆனால் அதனால் பயனில்லை என்றும் அழகிரி கூறியுள்ளார்.
துரைமுருகனை சீண்டும் அழகிரி
தம்பி வா தலைமை ஏற்க வா என்று துரைமுருகன் தான் ஸ்டாலினை செயல்தலைவராக அறிவிக்கும் முன் அழைத்தார். இதனை சுட்டிக்காட்டியே அழகிரி துரைமுருகனை சீண்டும் வகையில் இந்த கருத்தைக் கூறியுள்ளார்.
துரைமுருகனுக்கு எதிராக
கடந்த 2 தினங்களுக்கு முன்னர் அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி தனது டுவிட்டர் பக்கத்தில் திமுககாரர்களே காசு வாங்கி விட்டனர் என்று ஆர்கே நகர் தேர்தல் குறித்து கூறிய வீடியோவை பதிவிட்டிருந்தார். திமுகவினரே காசு வாங்கி விட்டதாக சொன்ன துரை முருகன் மீது தலைமை என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்றும் தயாநிதி அழகிரி கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
courtesy;One India
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval