Saturday, February 7, 2015

1 கோடி போலி கியாஸ் இணைப்புகள் கண்டுபிடிப்பு’ ஐகோர்ட்டில் மத்திய அரசு பதில் மனு


lpg-gas-cylinderநேரடி மானியத்திட்டம் கொண்டு வந்ததால் 1 கோடி போலி கியாஸ் இணைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு, மதுரை ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
ஐகோர்ட்டில் வழக்கு
கியாஸ் சிலிண்டர் மானியம் பெற, கியாஸ் சிலிண்டர் விநியோகஸ்தர்களிடம் பொதுமக்கள் ஆதார் அட்டை, வங்கிக்கணக்கு போன்ற விவரங்களை அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. கியாஸ் சிலிண்டர் மானியம் பெற ஆதார் அட்டை கேட்கக்கூடாது என்று உத்தரவிடக்கோரி விருதுநகரை சேர்ந்த வக்கீல் எஸ்.எம்.ஆனந்தமுருகன், மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தது. அந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி தமிழ்வாணன் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை துணை செயலாளர் உஷாபாலா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
கட்டாயம் இல்லை
அதில், கூறி இருப்பதாவது:-
கியாஸ் சிலிண்டருக்கான மானியம் பெற ஆதார் அட்டை கட்டாயம் இல்லை என்று ஏற்கனவே தெரிவித்துள்ளோம்.
வங்கிக் கணக்கு இருந்தால் மட்டும் போதும். கியாஸ் சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ளவர்களில் 91 சதவீதத்தினருக்கு வங்கிக் கணக்கு உள்ளது. மீதமுள்ள 9 சதவீதத்தினருக்கு மட்டும் வங்கிக் கணக்கு தொடங்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. புதிதாக வங்கிக்கணக்கு தொடங்குபவர்கள் எந்தவித பணமும் செலுத்தாமல்(‘ஜீரோ பலன்ஸ்’) வங்கி கணக்கு தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
1லு கோடி போலி இணைப்புகள்
அதன்படி, இந்தியா முழுவதும் இதுவரை 6 கோடியே 98 லட்சம் பேருக்கு இதுபோன்ற வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. 1 கோடியே 58 லட்சம் கியாஸ் இணைப்புகள் ஒரே நபர்கள் வெவ்வேறு முகவரிகளில் போலியாக பெற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், கியாஸ் சிலிண்டருக்காக அரசால் வழங்கப்படும் மானியத்தொகை 3,948 கோடி ரூபாய் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. கியாஸ் சிலிண்டருக்கான மானியத்தொகையை பொதுமக்கள் பெற எந்தவித சிக்கலும் இல்லாத வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval