Tuesday, February 24, 2015

குழந்தை இல்லாத தம்பதிகளை குறிவைத்து நடக்கும் நூதன மோசடி: தம்பதிகளே உஷார்!

Untitled-1 copyசென்னையில் குழந்தை இல்லாத தம்பதிகளை குறிவைத்து பெண்மணி ஒருவர் தலைமையில் நூதன மோசடி செய்யும் கும்பல் ஒன்று செயல்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னையில் செயல்படும் இந்த மோசடி கும்பலின் தலைவியாக உள்ள 40 வயது பெண்மணியின் பெயர் தனலட்சுமி.
அறந்தாங்கியை சேர்ந்தவரான இவர், குழந்தைகளை தத்து கொடுக்கும் தொண்டு நிறுவனத்தை சென்னையில் நடத்தி வருவதாக கூறிக்கொள்கிறார்.
இவரிடம், சங்கர் (47) – மாலதி (42) என்ற சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த தம்பதி ஏமாந்துள்ளனர்.
சங்கர் இதுபற்றி கூறுகையில், பத்திரிகை ஏஜெண்டாக பணியாற்றும் எனக்கு குழந்தை இல்லை. இதையடுத்து மருத்துவ ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் நாங்கள் எடுக்காத முயற்சியே இல்லை.
இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனலட்சுமியின் அறிமுகம் எங்களுக்கு கிடைத்தது.
எங்களுக்கு குழந்தை இல்லை என்பதை அறிந்து கொண்ட அவர், நிறைமாத கர்ப்பமாக இருந்த இளம்பெண்ணை எங்கள் வீட்டுக்கு அழைத்து வந்தார்.
அந்த இளம்பெண் வாலிபர் ஒருவரை காதலித்து, திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருப்பதாகவும், எனவே அந்த பெண்மணி பெற்றெடுக்கும் குழந்தையை எங்களுக்கு ரகசியமாக தத்து கொடுப்பதாக தெரிவித்தார்.
நாங்களும் இதற்கு சம்மதித்ததால், தனது தொண்டு நிறுவனம் மூலம், எங்களிடம் ஒப்பந்தமும் போட்டார். அந்த இளம்பெண்ணை எங்கள் வீட்டிலேயே சில நாட்கள் வைத்து நன்றாக உணவளித்து கவனித்தோம்.
பின்னர் குழந்தை பிரசவிக்கும் நேரத்தில், எங்கள் வீட்டுக்கு வந்த தனலட்சுமி, அந்த இளம்பெண்ணை அழைத்து சென்றதோடு குழந்தை பிறந்தவுடன் தகவல் சொல்வதாக கூறிச்சென்றார்.
ஒருநாள் கைப்பேசியில் அழைத்த தனலட்சுமி, அந்த இளம்பெண் ஆண் குழந்தை பெற்றெடுத்து விட்டாள் என்று தகவல் சொன்னதோடு, குழந்தையின் படத்தையும் கைப்பேசியில் அனுப்பினார்.
இதனால் நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தபோது திடீரென்று எங்கள் வீட்டுக்கு தனியாக வந்த தனலட்சுமி குழந்தை பெற்ற இளம்பெண் வேறு வாலிபரை திருமணம் செய்து கொண்டு புதுவாழ்க்கையை தொடங்கபோகிறார், எனவே ரூ.2 லட்சம் பணம் கொடுத்தால் குழந்தையை திருப்பிக் கேட்கமாட்டார் என தெரிவித்தார்.
குழந்தை கிடைக்கப்போகும் மகிழ்ச்சியில் நாங்களும் ரூ.2 லட்சத்தை கொடுத்தோம். அதை பெற்றுக்கொண்ட தனலெட்சுமி, சிறிது காலம் தாய்ப்பால் கொடுத்து குழந்தை வளரட்டும், ஒரு நல்ல நாளில் குழந்தையை உங்களிடம் கொடுக்கிறேன் என்று சொல்லி சென்றார்.
அதன்பிறகு, அவர் எங்களை தொடர்பு கொள்ளவும் இல்லை. கைப்பேசியையும் சுவிட்ச் ஆப் செய்துவிட்டார் என்று தான் ஏமாற்றப்பட்டதை தெரிவித்துள்ளார்.
மேலும், சங்கர்-மாலதி தம்பதியர் இது தொடர்பாக பொலிசில் புகார் அளிக்க விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval