Monday, April 24, 2017

வெளிநாட்டு வேலைவாய்ப்பு : எங்கே செல்லும் இந்தப் பாதை….

Work Abroad Signஅமெரிக்கா ஐ.டி. ஊழியர்களுக்கு விசா தருவதில் பல கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. சிங்கப்பூரும் அமெரிக்காவின் பாதையில் நடைபோட ஆரம்பித்துள்ளது. ஏறக்குறைய எல்லா நாடுகளுமே ‘மண்ணின் மைந்தர்’ கோஷத்தை நோக்கி நகர்கின்றன

பலரும் இது ஏதோ ஐ.டி.துறையை மட்டுமே பாதிக்கும் விஷயம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் ஐ.டி.துறையில் மட்டுமல்லாது, எல்லா துறைகளுமே இந்த நகர்வினால் கடும் பாதிப்புக்கு ஆளாகப் போகின்றன. வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் எல்லாமே அபாயகரமான கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றன.

அரபு தேசங்களில் அரசு வேலை என்பது நமக்கு எளிதாக கிடைத்துக்கொண்டிருந்தது. கடந்த ஐந்து வருடங்களில் வேறு வழியில்லை என்றால் மட்டுமே வெளிநாட்டவருக்கு அரசுவேலை எனும் நிலை வந்திருக்கிறது. ‘ஏன் வெளிநாட்டவரை எடுக்கிறோம்?’ என்று சம்பந்தப்பட்ட துறை அரசுக்கு விளக்கம் சொல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

அது இப்போது அடுத்த கட்டத்தை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. தனியார் கம்பெனிகளிலும் மண்ணின் மைந்தர்களை வேலையில் அமர்த்தும்போக்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இனி பத்து வருடங்களில் வெளிநாட்டு ஒயிட் கால்ர் ஜாப் என்பது அரிதான விஷயமாக ஆகப் போகிறது.
ஆயில் கண்டுபிடிக்கப்பட்டபோதும் சரி, கணிணித்துறை வளர்ச்சி ஆரம்பிக்கப்பட்டபோதும் சரி, போதுமான பணியாளர்கள் இந்த தேசங்களில் இல்லை. எனவே எல்லா நாடுகளுமே உலகில் உள்ள திறமைசாலிகளை எல்லாம் வரவேற்று, அரவணைத்தன. இப்போது உள்ளூரிலேயே எல்லோரும் படித்து, வேலை செய்ய தயாராக இருக்கிறார்கள்.

அரபிகள் தங்கள் குழந்தைகளை ஐரோப்பா/அமெரிக்காவில் படிக்க அனுப்புகிறார்கள். படித்து முடித்து வந்ததும், அவர்களுக்கு வேலை கொடுப்பது அரசாங்கத்தின் கடமை ஆகிறது. எனவே ஒரு வெளிநாட்டு ஆசாமி வேலையை விடுகிறார் என்றால், அந்த வேலையை தனது குடிமக்களுக்கு மாற்றிவிடவே அரசுகள் முனைகின்றன. இதை ஒரு தவறாக யாரும் சொல்ல முடியாது.

ஆனால் இது நம்மை மோசமாக பாதிக்கப்போகிறது என்றே அஞ்சுகிறேன். நமது தலைமுறைவரை, படித்தால் உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ வேலை செய்து பிழைத்துவிடலாம் என்பதே நிலை. தற்போது வெளிநாட்டு வேலை இல்லை என்று ஆகும்போது, அத்தனை மனிதவளமும் உள்ளூர் நோக்கித் திரும்பும். அவர்களுக்கு வேலை தருவதற்கான கட்டமைப்பு நம்மிடம் இல்லை.

ஜப்பான், சீனா நோக்கி பயணிக்கலாம் எனும் சிந்தனை விழித்துக்கொண்டோரிடம் வந்திருக்கிறது. ஆனால் எத்தனை நாள் ஓடிக்கொண்டே இருக்க முடியும்?
நமது மத்திய, மாநில அரசுகள் இந்த அபாயத்தை உணர்ந்திருக்கின்றனவா, அதற்கான தொலைநோக்குத் திட்டத்தை வைத்திருக்கின்றனவா என்றால் இல்லையென்றே சொல்ல வேண்டும். 

பள்ளி செல்லும் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோருக்கு இதுபற்றிய விழிப்புணர்வு வரவேண்டியது அவசியம், அவசரம். இனியும் கார்போரேட் அடிமைகளை மட்டும் உற்பத்தி செய்யாமல், சுய தொழில் பற்றிய ஆர்வத்தையும் நம் குழந்தைகளுக்கு ஊட்ட வேண்டிய நேரம் இது.

இந்தியாவில் அதிக வேலை வாய்ப்பைத் தரும் தொழில், விவசாயம். ஆனால் அதனை அழித்து ஒழிப்பதில் தான் நம் அரசுக்ள் முனைப்பாக இருக்கின்றன. எனவே விவசாயிகள் விவசாயத்தைக் கைவிட வேண்டியதாகிறது. பிள்ளைகளை படிக்க வைத்து ‘நீயாவது தப்பிச்சுப் போயிடு’ என்று அனுப்பி வைக்க வேண்டியிருக்கிறது. எனது அப்பாவே என்னை அப்படித்தான் அனுப்பி வைத்தார். ஆனால் இனி போக்கிடம் இல்லை என்று ஆகும்போது, விவசாயம் உள்ளிட்ட வேலைகளை லாபகரமாக ஆக்குவது எப்படி என்று நமது அரசுகள் அக்கறையுடன் யோசிக்க வேண்டிய நேரம் இது.

Inline image‘எப்படியாவது கஷ்டப்பட்டு பிள்ளைகளை படிக்க வச்சிட்டாப் போதும்..பிழைச்சுக்குவாங்க’ என்று நம்பும் அப்பாவி பெற்றோர்கள் கால மாற்றத்தையும் உணர வேண்டிய நேரம் இது. வளர்ந்த நாடுகளைப் போலவே இங்கும் டிகிரி படிப்பு என்பது எல்லோரிடமும் இருக்கும் அடிப்படை விஷயமாக ஆகிவிட்ட காலம் இது.எனவே அடிமைகளை மட்டும் வார்த்தெடுக்காமல், சொந்தக்காலில் நிற்கவும் பிள்ளைகளை பழக்குவோம்.
தகவல் ;இர்ஃபான்


No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval