Tuesday, April 25, 2017

மருத்துவ மாஃபியாவால் பலியானாரா மாணவர்?


மருத்துவ மாஃபியாவால் பலியானாரா மாணவர்?கோவை மாவட்டம் தெலுங்குபாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிமாறன். இவரது மூத்த   மகன் சித்தார்த் , 12 ஆம்  வகுப்பு பொதுதேர்வு எழுதிவிட்டு முடிவுகளுக்காக காத்திருக்கிறார். இவர்,  இரவு  உடற்பயிற்சி முடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் சுங்கம் வழியாக சென்றுகொண்டிருந்த போது திடீரென  சாலையில் வைக்கப்பட்டிருந்த டிவைடர் மீது மோதி விபத்துக்குள்ளானர்

இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் சித்தார்த் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதாக, அவரே பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் , காயமடைந்த  சித்தார்தை ,சாய்பாபா காலனி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாகவும், சித்தார்த்தின் பெற்றோர்களுக்கு ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, உறவினர்கள்  தனியார் மருத்துவமனைக்கு சென்ற போது, சித்தார்த் இதய துடிப்பு மிகவும் குறைத்துவிட்டதாக கூறி, மீண்டும் அரசு மருத்துவமனையில் தனியார் மருத்துவ நிர்வாகம் கொண்டு சேர்த்துள்ளது. அப்போது ,அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

பெற்றோர்கள் அனுமதி இல்லாமல், யாரோ ஒரு நபர் உறவினர் எனக் கூறி மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு எப்படி கொண்டு செல்ல முடிந்தது , மருத்துவ நிர்வாகம் எந்த ஒரு ஆதரமின்றி தனி நபரிடம் எப்படி ஒப்படைத்தது என உறவினர்கள் கேள்வி எழுப்பினர்.அருகில் மிக பெரிய தனியார் மருத்துவமனைகள் இருக்கும் நிலையில் அந்த குறிப்பிட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்ல என்ன காரணம், தங்கள் மகனின் உடல் உறுப்புகளை திருடி உள்ளனரோ என்ற அச்சம் ஏற்படுவதாகவும் கூறுகின்றனர் சித்தார்த்தின் உறவினர்கள்.

அதிக காயமடைந்த மாணவன் , அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இருந்தாலே உயிர் பிழைத்து இருக்கலாம் எனவும், அவனை இடம் மாற்றியதும் உயிரிழப்பிற்கு காரணம் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கோவை அரசு மருத்துவமனையில் விபத்து பிரிவில் அனுமதிக்கப்படுபவர்களை சில தனியார் மருத்துவமனைகளை சேர்ந்த ஏஜெண்டுகள் , தங்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக அவர்களே உறவினர்கள் போல் கையெழுத்திடுவதாகவும், இதற்கு விபத்து பிரிவில் இருக்கும் சில மருத்துவர்களும் உடந்தையாக செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது..

மேலும் , பெற்றோர்கள் அனுமதி இல்லாமல் அழைத்து சென்ற நபர் மீது மருத்துவ நிர்வாகத்திலும் ,பந்தையை சாலை காவல்நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.இது மட்டுமின்றி ஏஜெண்டுகளாக செயல்படும், மருத்துவர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இறந்த மாணவரின் பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து மருத்துவ நிர்வாகம் கூறுகையில் உறவினர் என்ற கையெழுத்திட்டதின் காரணமாகவே சிகிச்சைக்காக எடுத்து செல்ல அனுமதித்தோம் என விளக்கம் அளித்துள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக சித்தார்த்தை கோவை அரசு மருத்துவனையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவிய ஜீவ சாந்தி டிரஸ்ட்டை சேர்ந்த சபிக் என்பவரையும் , உறவினர் என கையெழுத்திட்ட ஒன் கேர் மருத்துவமனையை சேர்ந்த முன்னாள் ஊழியரான  கபிலேஷ்யிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
courtesy;News7

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval