Thursday, April 20, 2017

பொண்ணு ஆபரேஷனுக்கு சம்பாதிக்க சவூதி போனேன். ஆனா, அங்க....!" - ஒரு தந்தையின் கண்ணீர் கதை

சவூதி
'அவனுகென்னப்பா சவூதில வேலை பாக்குறான்' - இப்போதும் நமது ஊர்ப்புறங்களில் வளைகுடா நாடுகளில் வேலைசெய்பவரைப் பற்றி இப்படிக் கூறக் கேள்விபட்டிருப்போம். வளைகுடா நாடுகளில் வேலை செய்வது என்ன அவ்வளவு பெரிய கௌரவமா? ஒருவேளை, நன்றாகப் படித்து நல்ல வேலையில் சேர்ந்து லட்சம்லட்சமாச் சம்பளம் வாங்குபவருக்கு வேண்டுமானால் அது கௌரமாக இருக்கலாம். ஆனால், ஏழ்மையில் வாடும் குடும்பத்தைக் காப்பாற்ற, வேலை வேண்டி வளைகுடா நாடுகளுக்குப் பயணப்படும் கூலித் தொழிலாளிகளுக்கு என்றுமே அது ஒரு சாபம்தான்.
மற்ற நாடுகளுக்குச் செல்வதைக் காட்டிலும் வளைகுடா நாடுகளுக்குச் செல்வது செலவுக் குறைவு என்பதால், பெரும்பாலானோர் சவூதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஓமன் ஆகிய நாடுகளுக்குப் பிழைப்புத் தேடிச் செல்கின்றனர். வளைகுடா நாடுகள் அனைத்தும் கூலித் தொழிலுக்காக இந்தியர்களையே அதிலும் குறிப்பாகத் தமிழர்களையே குறிவைக்கின்றன. குறைவான சம்பளத்தில் அதிக வேலை வாங்கிக்கொள்வதற்கும், அவர்கள் சொல்லும் வேலையை அடிமை முறையில் செய்யவும் தொழிலாளி தேவைப்படுகிறான். அதற்காக ஏழ்மையில் வேலை தேடிச் செல்லும் நம் ஊர் நபர்களை அவர்கள் தேர்ந்தெடுத்துக்கொள்கின்றனர். வளைகுடா நாடுகளுக்கு, வேலைக்கு ஆள்பிடித்து அனுப்பும் ஏஜென்டுகளின் பித்தலாட்டம் பலரின் வாழ்க்கையையே தொலைத்துப்போகச் செய்கிறது. இவர்கள் நமது ஊர் ஆட்களிடம் நல்ல சம்பளம், எட்டுமணி நேரம் பணி என்று சொல்லி... எங்கோ ஒரு மூலையில் உயிரைக் கரைந்துபோகச் செய்யும் பாலைவனத்தின் நடுவில் ஒட்டகம் மேய்ப்பதற்கும், பணக்காரர்களின் வீடுகளில் அடிமையாக வேலை செய்வதற்குமான வேலையை ஏற்பாடு செய்துகொடுக்கின்றனர். அவர்களும் நம் ஊர் ஏஜென்ட்களின் சதி புரியாமல் வளைகுடா நாடுகளில் சென்று மாட்டிக்கொள்கிறார்கள். 
ஒட்டகம்
நினைத்துச் சென்ற வேலையில்லாமல் கஷ்டப்படுவது ஒருபுறம் என்றால்... மறுபுறம், உடல்ரீதியான பல கொடுமைகளுக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள். அப்படிக் கொடுக்கப்படும் வேலையை பல மணிநேரங்கள் செய்தாக வேண்டிய கட்டாயத்துக்கு நம்மூர் ஆட்கள் தள்ளப்படுகிறார்கள். தாம் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என அந்த நாட்டு உரிமையாளர்களிடம் கேட்கும்போது அவர்களின் மிரட்டலுக்கு ஆளாக்கப்படுகின்றனர். மேலும், சிலரோ நம் விதி இதுதான் என தம் வீட்டுக் கஷ்டங்களை நினைத்து அங்கேயே கிடந்து வாழ்வைத் தொலைக்கின்றனர். அப்படியான நிலைமைக்குத் தள்ளப்பட்டவர்தான் ராமநாதபுரம் களத்தாவூரைச் சேர்ந்த பழனிக்குமார் கருப்பையா. இவர், கடந்த 2014-ம் ஆண்டு சவூதி அரேபியாவுக்கு கொத்தனார் வேலைக்குச் சென்று... அங்கு நிறுவன உரிமையாளரால் கொடுமைப்படுத்தப்பட்டு 10 மாதங்கள் சிறைத் தண்டனை பெற்றிருக்கிறார். பலதடவை இந்தியத் தூதரகத்துக்குத் தன்னை மீட்கும்படி மனு அனுப்பியிருக்கிறார். ஆனால், இந்தியத் தூதரகம் அந்த மனுவைக்கூட வாங்கிக்கொள்ளவில்லை. கடைசியில், 'மக்கள் பாதை' இளைஞர்களுக்குத் தகவல் தெரிய, பல போராட்டங்களுக்குப் பிறகு... ஒருவழியாக அவர்கள் பழனிக்குமார் கருப்பையாவை சிறையில் இருந்து மீட்டு தமிழ்நாடு கொண்டுவந்து சேர்த்துள்ளனர். இன்று (20-04-2017) அதிகாலை சென்னை விமான நிலையத்துக்கு வந்த பழனிகுமார் கருப்பையா நம்மிடம் பேசியபோது...
பழனிக்குமார் கருப்பையா
"எனக்குச் சொந்த ஊரு ராமநாதபுரம் களத்தாவூர். கல்யாணமாகி மூணு பொம்பளை புள்ளைங்க இருக்குது. முதல் பிரசவத்துல ரெட்டை குழந்தைங்க பொறந்தாங்க. அதுல ஒரு புள்ளை மாற்றுத்திறனாளியா பொறந்திடுச்சி. 'ஆபரேஷன் பண்ணினா சரியாயிடும்; ஆனா, அதுக்குக் கொஞ்சம் பணம் அதிகமா செலாவாகும்'னு டாக்டர்ங்க சொன்னாங்க. அதனால வெளிநாட்டுக்குப் போயி ரெண்டு வருஷம் சம்பாதிச்சா, அதில் கிடைக்கும் பணத்துல பாப்பாவைக் குணப்படுத்தலாம்னு நினைச்சி சவூதிக்கு போகலாம்னு முடிவெடுத்தேன். 'எட்டு மணி நேரம் வேலை, நல்ல சம்பளம், நல்ல முதலாளி, ஒரு பிரச்னையும் இருக்காது'னு ஏஜென்ட் சொல்ல... நானும் 2014-ம் வருஷம் சவூதிக்குப் போனேன். ஆனா, அங்கே எனக்கு இங்கே சொன்ன மாதிரி வேலை தரல. 12 - 14 மணி நேரம் வேலை செய்யச் சொல்லிக் கட்டாயப்படுத்தினாங்க. களைப்புக்குக் கொஞ்சம் ஓய்வெடுத்தாலும் கேவலமாக திட்டுவாங்க. சொன்ன சம்பளமும் தரலை. எதிர்த்து கேள்வி கேட்டா அடிப்பாங்க. எம்பொண்ணுக்கு ஆபரேஷன் பண்ண வேணும். அதனால, எல்லாத்தையும் தாங்கிக்கிட்டேன். அதற்காக இன்னும் அதிகமா வேலை கொடுக்க ஆரம்பிச்சாங்க. ரொம்ப கஷ்டமா இருக்கும். நேரத்துக்குச் சாப்பிட முடியாது. பல்லைக் கடிச்சிக்கிட்டு 15 மாசம் ஓட்டினேன். இதுக்கு மேல இங்க இருந்தா செத்துருவோம்னு நெனச்சி ஊருக்குப் போலாம்னு முடிவு பண்ணேன். ஆனா, விடமாட்டேன்னு சொல்லிட்டாங்க. எனக்கு வொர்க் பர்மிட் முடியலை. ஆனாலும், எப்படியோ கஷ்டப்பட்டு பாஸ்போர்ட் வாங்கிட்டு ஊருக்குக் கெளம்பலாம்னு முடிவு செஞ்சப்போ போலீஸ்காரங்க, 'உனக்கு வொர்க் பர்மிட் எப்பவோ முடிஞ்சிருச்சி. ஆனா, நீ இன்னும் இங்கேயே சுத்திக்கிட்டு இருக்கியா'னு சொல்லி கைதுபண்ணிட்டாங்க. 'எனக்கு இன்னும் வொர்க் பர்மிட் முடியல; என்ன விட்ருங்க; என் ஊருக்கு போகணும்'னு எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். ஆனா, அவங்க யாருமே காதுல வாங்கலை. 
பழனிக்குமார் கருப்பையா மற்றும் மக்கள் பாதை இயக்கத்தினர்
ஊர்ல என் தம்பிக்கு போன் பண்ணிச் சொன்னேன். அவனும் யார்யாரையோ பார்த்துப் பேசினான். எவ்வளவோ முயற்சி செஞ்சான். ஆனா, ஒண்ணும் பண்ண முடியலை. சவூதில இருக்குற இந்தியத் தூதரகத்துக்கு, 'என்மேல எந்தத் தப்பும் இல்லை; என்னைக் காப்பாத்துங்க'னு பலமுறை மனுக் கொடுத்தேன். அவங்க அந்த மனுவைப் படிச்சாங்களா, இல்லையானுகூட எனக்குத் தெரியாது. இப்படியே சவூதி ஜெயில்ல பத்து மாசம் ஓடிருச்சி. நான் ஜெயில்ல இருந்தபோது என்னோட கவலை ஒண்ணேஒண்ணுதான். எம்பொண்ணுக்கு நான் எப்படி ஆபரேஷன் செய்யப்போறேன்? என்னை நம்புன குடும்பத்துக்குக் கொஞ்சமாவது சந்தோஷம் கொடுக்கத்தான் சவூதி வந்தேன். ஆனா, என் நிலைமையால என் குடும்பமே இப்ப நிலைகுலைஞ்சி போச்சுனு நினைக்கும்போதுதான்..." என்று அவர் கண்களில் பெருக்கெடுத்த கண்ணீரைத் துடைத்தபடி மீண்டும் பேச ஆரம்பித்தார். ''அப்புறம் ஜெயிலுக்கு வந்த ஒருத்தர்கிட்ட இருந்து போனை வாங்கி, 'என்னைக் காப்பாத்துங்க'னு பேசி வாட்ஸ்அப்ல போட்டேன். அதை, 'மக்கள் பாதை' இளைஞர்கள் கேட்டுட்டு என்னை வெளியில் கொண்டுவர சவூதில இருந்த யார்யாரையோ பிடிச்சி முயற்சி பண்ணாங்க. அவங்கமூலமா சமூக நல ஆர்வலரான வாசு சிதம்பரம் சார் என்னைவந்து பார்த்தாங்க. 'எப்படியாவது உன்னை வெளியில கொண்டு வர்றேன்'னு சொல்லி எனக்காக அந்த நாட்டு போலீஸ்கிட்ட பேசினார். 35,000 ரியால் பணம் ஃபைன் கட்டணும்னு போலீஸ்காரங்க சொல்லியிருக்காங்க. அப்புறம் போலீஸ், கோர்ட்டுன்னு அலைஞ்சி வாசு சிதம்பரம் சார் என்ன ஃபைன் கட்டாம வெளியில கொண்டுவந்துட்டாங்க. கையில சுத்தமா பணம் இல்லை. எப்படி ஊருக்குப் போறதுனு வழிதெரியாம தவிச்சப்பதான் மக்கள் பாதை இளைஞர்கள் எனக்கான எல்லாச் செலவையும் ஏத்துக்கிட்டு என்னை ஊருக்குக் கொண்டு வந்தாங்க. என்னை மீட்டு ஊருக்குக் கொண்டுவந்த அனைவரையும் நான் எப்பவும் மறக்கமாட்டேன். 
வாசு சிதம்பரம் மற்றும் பழனிக்குமார் கருப்பையா
என்னை மாதிரி பலபேர் வெளியில தெரியாம அங்கே பல கொடுமைகளைச் சந்திச்சிக்கிட்டு எப்படா நம்ம ஊருக்குப் போவோம்னு தவம் கெடக்குறாங்க. இந்திய அரசாங்கம் அவங்களுக்கு நல்ல வேலை எல்லாம் வாங்கித் தர வேணாம். அங்கே சிக்கித் தவிக்கிற நம்ம ஆளுங்கள பத்திரமா மீட்டுக்கொண்டு வந்தாலே புண்ணியமா போகும்'' என்றவர், ''ஆசை ஆசையா சவூதி போனேன். இரண்டரை வருஷம் வீணா போச்சி; பணமும் சம்பாதிக்கலை மனசும் தளர்ந்துடுச்சி. எம்பொண்ணு ஆபரேஷன் எப்படிப் பண்றதுன்னு தெரியலை. ஒரு மாதிரி வலிக்குது" என்று சொல்லிமுடிக்கும் முன்பே கண்ணீர் மீண்டும் பெருக்கெடுத்தது.  
பெற்ற மகளை குணமாக்க சவூதி அரேபியா சென்றவர், 10 மாதம் சிறையையும் சித்ரவதையையும் மட்டுமே அனுபவித்துவிட்டு திரும்பி உள்ளார். வெறும் கையோடு திரும்பியவரின் வேதனைக்கு தீர்வு, அவர் மகள் குணமடைவதில்தான் இருக்கிறது. அவர் மகள் குணமாவதற்கு பணம் மட்டுமே தடையாக இருக்கிறது... தடை தகருமா? தந்தையின் வேதனை தீருமா?

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval