Saturday, April 15, 2017

மருத்துவத்துறையின் அவலம்!: கையும் களவுமாய் சிக்கிய மருத்துவர்கள்(படம்)


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மருத்துவத்துறையில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகளை சென்னை மருத்துவத்துறை இயக்குநர் விசாரணைக்குழு வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது. இதுகுறித்து விசாரித்தபோது பல முக்கிய தகவல்கள் நமக்குக் கிடைத்தன.

கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை மருத்துவமனை ஜெ.டி-யாக இருப்பவர் அசோக்குமார். இவர் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு உறவினர் என்று கூறிக்கொண்டு, மருத்துவத்துறையில் தற்காலிக பணியாளர்களை நியமனம் செய்ததிலும், மருந்துகள் மற்றும் மருத்துவக் கருவிகள் கொள்முதல் செய்ததிலும் பல்வேறு முறைகேடுகள் செய்ததையும் மருத்துவத்துறை இயக்குநர் விசாரணைக்குழு கடந்த ஏப்ரல் 12 விசாரணையின் போது பல முக்கிய ஆவணங்களை எடுத்து சென்றுள்ளது.

இது மட்டும் இல்லாமல் அன்று காலையே சென்னை மருத்துவத்துறை இயக்குநர் குழு, திடீரென்று தேன்கனிகோட்டை அரசு மருத்துவமனைக்குச் சென்று ஆய்வு செய்தபோது பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. காரணம், மருத்துவமனையில் ஒரு டாக்டர் கூட இல்லை, அரசு மருத்துவமனையில் பணியாற்றும் தலைமை மருத்துவர் பூபதி அரசு மருத்துவமனைக்கு வராமல் ஓசூரில் தனியாக கிளினிக் நடத்தி வருவதும், அதேபோல மற்ற டாக்டர்க்ள் ராஜ்குமார், அரிகரன், பரிமளாதேவி ஆகிய மூன்றுபேரும் தேன்கனிகோட்டையில் ஜீவன் மருத்துவமனையை தனியாக நடத்தி வருவதும் தெரிய வந்துள்ளது.

ஏப்ரல் 12-ஆம் தேதி காலை 11 மணி ஆகியும் மருத்துவர்கள் யாரும் மருத்துவமனைக்கு வராமல், அவர்கள் சொந்தமாக நடத்தும் ஜீவன் மருத்துவமனையில் இருந்துள்ளனர். பின் தகவல் அறிந்து ஓடிவந்த மருத்துவர்களைப் பிடித்து நடத்திய கடுமையாக விசாரணையில், தேன்கனிகோட்டையில் பணியாற்றும் நான்கு மருத்துவர்களும், அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளைத் தங்களின் கிளினிக்கிற்கு வரவழைத்து சிகிச்சை செய்துள்ளது தெள்ளத் தெளிவாக விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு, அதற்கான ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இது மட்டுமல்லாமல் தேன்கனிகோட்டையில் இயங்கி வரும் பிஎம்கே ஸ்கேன் சென்டருக்கு, விசாரணைக்குழுவினர் சீல் வைத்துச் சென்றுள்ளனர். மேலும், பிஎம்கே ஸ்கேன் சென்டரில் கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றில் உள்ளது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என்ற ரகசியத்தை வெளிப்படையாகவே சொல்லி வந்த, அந்த ஸ்கேன் சென்டருக்கு சீல் வைத்துச் சென்றுள்ளது மருத்துவத்துறை இயக்குநரின் விசாரணைக்குழு என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள்.

- எம்.வடிவேல்
courtesy Nakkeeran

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval