அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள்தான்… ஆனால், அவற்றின் அபாயத்தை நாம் அறிவதில்லை. வழக்கமாகச் செய்கிற நல்ல விஷயமாகக்கூட இருக்கும்… அதனால் ஏற்படும் பக்க விளைவுகளை அறிந்திருக்க மாட்டோம். அப்படி நல்லது என நாம் நினைத்துச் செய்யும் 10 தவிர்க்கவேண்டிய விஷயங்கள்… அவற்றின் பக்க விளைவுகள்!
ஆன்டிபாக்டீரியல் சோப்
கையைச் சுத்தமாக வைத்துக்கொள்ள உதவும் ஆன்டிபாக்டீரியல் சோப்கள், சானிடைசர்கள் இன்று கடைகளில் அதிகம் கிடைக்கின்றன. ஆன்டிபாக்டீரியல் சோப்கள், பாக்டீரியாக்களுக்கு எதிராகச் செயல்படும் தன்மை உடையவை. ஆனால், இருமல், ஜலதோஷம், வாந்தி ஆகியவற்றை ஏற்படுத்தும் வைரஸ்களுக்கு எதிராகச் செயல்படாது. இந்த சோப்பில், ட்ரைக்ளொசான் (Triclosan)எனும் புற்றுநோய் காரணியான கெமிக்கலும் கலக்கப்படுவதால் இந்த வகை சோப்களைத் தவிர்த்துவிடலாம். இந்த கெமிக்கல் சுற்றுசூழலையும் கெடுக்கும்.
டங் கிளீனர்
சூப்பர் மார்கெட்டுகளில் குறைந்த விலையில், தரமற்ற தகரத்தால் தயாரிக்கப்பட்ட டங் கிளீனர்களும் கிடைக்கும். இவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இதைப் பயன்படுத்துவதால், நாக்கில் எரிச்சல், வலி ஏற்படலாம். நாக்கில் சேர்ந்துள்ள வெள்ளைப் படலத்தை அகற்ற, டங் கிளீனருக்கு பதிலாகப் பல் தேய்க்கும் பிரஷ்ஷின் பின்புறம் இருக்கும் டங் கிளீனரை பயன்படுத்தலாம்.
நாற்காலியில் நெடுநேரம் அமர்ந்திருப்பது…
ஒரே இடத்தில் 10 மணி நேரம் அமர்ந்திருந்தால், டைப் 2 சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பல வருடங்களுக்குப் பின்னர் மலக்குடல், மார்பகப்புற்றுநோய் ஏற்படவும் இது காரணமாகலாம். உடலுழைப்பு இல்லாததால், உடல்பருமனாக மாறுவர். நாளடைவில் லைப்ஸ்டைல் நோய்களாலும் பாதிப்புகள் வரும்.
ஆன்டிபாக்டீரியல் மென்தால் டூத் பேஸ்ட்
பெரும்பாலான ஃப்ளோரைடு கலந்த டூத் பேஸ்ட்டுகளில் மென்தாலும் கலக்கப்படுகிறது. அதிலும், சில டூத் பேஸ்டுகளில் அதிக அளவு மென்தால் சேர்க்கப்படுகிறது. இவற்றால் வாய் புத்துணர்ச்சி பெறும் என நினைத்துப் பலர் பயன்படுத்துகின்றனர். இது தவறு. அதீத மென்தால், வாய்ப்புண் ஏற்பட வழிவகைச் செய்யும். இவற்றைப் பயன்படுத்தாமல் இருப்பதே சிறந்தது.
காது குடையும் பட்ஸ்
காதில் சுரக்கும் மெழுகு, பசைத்தன்மை உடையது. நம் காதுக்குள் புகும் நுண்ணியத் தூசுக்களை, உட்பகுதிக்குள் செல்லவிடாமல் தடுக்கும். இந்தத் தூசுக்கள் மெழுகில் ஒட்டிக்கொள்ளும். புதிய மெழுகு சுரக்கும்போது, தூசுள்ள பழைய மெழுகு, காதின் வெளிப்புறத்தை நோக்கி நகரும். குளிக்கும்போது இவற்றைத் தேய்த்துச் சுத்தம் செய்துகொள்ளலாம். காது குடைய பட்ஸ், குச்சி, ஹேர் பின், காட்டன் துணி ஆகியவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும்.
லூஃபா (Luffa)
சமீப காலங்களில் அழுக்கு தேய்த்து குளிக்க `லூஃபா’ என்னும் மலிவான பிளாஸ்டிக்கால் ஆன வலை, அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. பல மாதங்களுக்கு இவற்றைத் தொடர்ந்து பயன்படுத்துவதால், அவற்றில் பாக்டீரியா, பூஞ்சைக் காளான்கள் உண்டாகும். உடலில் வெட்டுக் காயம், ஒவ்வாமைத் தடிப்பு இருந்தால், அவற்றில் உரசும் இந்த வலையின் மூலமாக பூஞ்சைக் காளான்கள் உடலில் தொற்றிக்கொள்ளும். மேலும், சருமத்தில் உள்ள நல்ல பாக்டீரியாக்களையும் சேர்த்து நீக்கிவிடுவதால், லூஃபா பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. சோப்பைத் தொட்டு, கைகளால் தேய்த்துக் குளிப்பதே சரியான முறை.
பிளெண்டர்
பழச் சாறு, ஸ்மூத்தி தயாரிக்க நம் வீடுகளில் மிக்ஸி பயன்படுத்தப்படுகிறது. மிக்ஸியை நன்கு கழுவி பயன்படுத்தாவிட்டால், சால்மோனெல்லா (Salmonella), ஈ-கோலை (E Coli) உள்ளிட்ட பாக்டீரியாத் தொற்று ஏற்படும். எப்போதும் மிக்ஸியைச் சுத்தமாக வைத்திருக்கவேண்டியது அவசியம். பழங்களை மிக்ஸியில் அரைப்பதால் அவற்றில் உள்ள நார்ச்சத்து நீங்கிவிடும். முடிந்தவரை பழங்களை அப்படியே சாப்பிட வேண்டும்.
நெயில் கட்டர்
நெயில் கட்டரை நகம் வெட்டப் பயன்படுத்திய பின்னர், சுத்தமாகக் கழுவி வைக்க வேண்டும் அல்லது வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் தங்களுக்கெனத் தனியாக நெயில் கட்டரைப் பயன்படுத்த வேண்டும். ஒரே நெயில் கட்டரை குடும்பத்தில் உள்ள அனைவரும் பயன்படுத்தும்போது ஒருவருடைய நகத்தில் உள்ள கிருமிகள், மற்றொருவருக்குப் பரவும் வாய்ப்பு உண்டு.
நான்-ஸ்டிக் தவா
நான்-ஸ்டிக் பாத்திரங்களை அதிக சூட்டில் வைக்கும்போது, பெர்ஃபுளூரோக்டானாய்க் அமிலம் (Perfluorooctanoic acid -PFOA) வெளியாகும். இதை ஒவ்வொரு முறை சுவாசிக்கும்போதும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும். நாளாக ஆக, நுரையீரல் புற்று ஏற்பட வழிவகுக்கும். இதனைக் கட்டாயம் தவிர்க்கவேண்டும். மேலும், நான் – ஸ்டிக்கில் கீறல் விழுந்தால், இதில் வெளியேறும் நஞ்சானது உணவிலும் கலந்துவிடும்.
குழந்தைகள் விளையாடும் பொம்மைகள்
நைலான், பாலியஸ்டர் நூலால் செய்யப்பட்ட டெடி பியர் உள்ளிட்ட பொம்மைகளில் இருந்து அழுக்கு, நுண்கிருமிகள் ஆகியவை எளிதில் குழந்தைகளுக்குத் தொற்றிக்கொள்ளும். இந்த பொம்மைகள் குழந்தைகளின் மூக்கு, வாய் அருகே செல்லும்போது சளித்தொற்று, தும்மல் ஏற்படும். பொம்மைகளைப் பிளாஸ்டிக் கன்டெய்னர்களில் குவித்துவைப்பதால், கிருமித் தொற்று அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. தரையில் குழந்தைகள் பொம்மைகளோடு விளையாடும்போது, தரையைச் சுத்தமாக வைத்திருக்கவேண்டியதும், பொம்மைகளைக் குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை மாற்றவேண்டியதும் அவசியம்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval