Wednesday, May 6, 2015

3 மாநிலங்களில் தாக்குதல் நடத்த திட்டம்: கோவையில் கைதான மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் வாக்குமூலம்

saina_2396508gதமிழகம், கேரளம், ஆந்திர மாநிலங்களில் மிகப் பெரிய தாக்குதல்களுக்கு திட்டம் தீட்டிய பெண் உட்பட 5 மாவோயிஸ்ட்கள் கோவையில் கைது செய்யப் பட்டனர். அவர்களை ஜூன் 3-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோவை நீதிமன்றம் நேற்று உத்தர விட்டது.
கோவை மாவட்டம், கருமத்தம் பட்டி பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் இருந்த ஒரு பெண் உட்பட 5 பேரை தமிழக கியூ பிராஞ்ச் போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அப்போது ஆந்திர மாநில சிறப்புப் புலனாய்வுப் பிரிவு போலீஸாரும் உடன் இருந்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் கோவை பீளமேடு பகுதியில் உள்ள கியூ பிராஞ்ச் அலுவலகத்துக்கு விசார ணைக்காக அழைத்து வரப் பட்டனர். அங்கு, அவர்களிடம் நேற்று மாலை வரை விசாரணை நடைபெற்றது. தமிழகம், கேரளம், ஆந்திரம் ஆகிய மாநில போலீஸார் விசாரணையின்போது உடனிருந்தனர்.
விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் மதுரை பழைய குயவர்பாளையத்தைச் சேர்ந்த சந்திரன் மகன் கண்ணன் (46), கேரள மாநிலம் கொச்சியை அடுத்துள்ள குஷத் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் ரூபேஷ் (எ) பிரவீன் (எ) பிரகாஷ் (எ) பிரசாந்த் (45), இவரது மனைவி சைனா (எ) சைனி (42), கேரளம், பத்தனம்திட்டா கும்பளபொய்கா பகுதியைச் சேர்ந்த ஜார்ஜ் மகன் அனுப் (31), கூடலூர் காட்டுமன்னார்குடி, கொள்ளுமேடு பகுதியைச் சேர்ந்த சின்னப்பிள்ளை மகன் வீரமணி (எ) ஈஸ்வர் (எ) சர (எ) சுனில்குமார் (60) என்பது தெரிய வந்தது.
அவர்களிடமிருந்து 27 செல்போன்கள், ஒரு கார்பன் டேப், 2 பென் டிரைவ், ரூ. 30 ஆயிரம், தமிழ், மலையாளம், கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் கையால் எழுதப்பட்ட மற்றும் பிரிண்ட் எடுக்கப்பட்ட 50 பக்க ஆவணங்கள், 5 பைகள், ஒரு சாவி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
அவர்கள் தமிழகம், கேரளம், ஆந்திரம் ஆகிய மாநில எல்லைகளில் உள்ள வனப் பகுதி களில் அரசால் தடை செய்யப் பட்ட மாவோயிஸ்ட் இயக்கச் செயல்பாடுகளை வளர்ப்பதற் காகவும், இந்த மாநிலங்களில் மிகப் பெரிய தாக்குதல்களுக்கு திட்டமிட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து 120 (பி) – குற்றம் செய்வதற்கு கூட்டுச் சதி, 124 (ஏ) தேசதுரோகம் உள்ளிட்டவை மூலமாக வன்முறையைத் தூண்டுதல் மற்றும் சட்ட விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம், 1967 ஆகிய பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டது.
பின்னர், கோவை முதன்மை நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) எம்.பி.சுப்ரமணியம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, குறிப்பிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் 5 பேரையும் கைது செய்வதாக நீதிபதி அறிவித்தார்.
இதற்கிடையே, தாங்கள் எவ்வித குற்றமும் புரியாமல் போலீஸார் கைது செய்துள்ளனர். விசாரணையின்போது சித்ர வதைக்கு உள்ளாக்கினர். தங்களை தமிழக போலீஸார் கைது செய்யவில்லை. ஆந்திர மாநில சிறப்புப் பிரிவு போலீஸார்தான் கைது செய்தனர் என கைது செய்யப்பட்டவர்கள் நீதிபதியிடம் தெரிவித்தனர்.
தான் ஒரு பெண் என்றும் பாராமல், ஆண் போலீஸார் தன்னை வலுக்கட்டாயமாக கைது செய்தனர். வயிற்றுப் பிரச்சினை இருப்பதால் மருத்துவ சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும் என ரூபேஷின் மனைவி சைனா முறையிட்டார்.
போலீஸார் மீது அவர்கள் தெரிவித்த புகார்களை குறித்துக் கொண்ட நீதிபதி, சைனா கோரி யுள்ள மருத்துவ சிகிச்சையை சிறை கண்காணிப்பாளரிடம் கோரிக்கை வைத்து பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்தார். மேலும், அவர்கள் 5 பேரையும் வரும் ஜூன் 3-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தர விட்டார்.
சம்பந்தப்பட்டவர்களை போலீ ஸார் கைது செய்யும்போதும், நீதிமன்றத்துக்கு அழைத்து வரும்போதும் ‘இன்குலாப் ஜிந்தாபாத்’, ‘சிபிஐ மாவோ யிஸ்ட் ஜிந்தாபாத்’ என கோஷமிட்டவாறு இருந்தனர். இதனிடையே, நீதிமன்றத்துக்குள் மாவோயிஸ்ட்கள் கொண்டு வரப்பட்ட பின்னர் நீதிமன்றத்தின் நுழைவு வாயில் கதவை போலீஸார் பூட்டினர். இதற்கு வழக் கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval