Friday, May 1, 2015

ஆராய்ச்சியாளர்கள் ‘திடுக்’ தகவல் வடதிசை நோக்கி இந்திய நிலத்தட்டு தள்ளப்படுவதால் தமிழகத்தில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு

Tamil_Nadu_topஇந்திய நிலத்தட்டுகள் வடதிசை நோக்கி தள்ளப்படுவதால் தமிழகத்தில் சில முக்கிய நகரங்களில் நில நடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆசிய கண்டத்தை மையமாக கொண்டு கடந்த 2000ம் ஆண்டுக்கு பின்னர் தொடர்ச்சியாக நில அதிர்வுகள் ஏற்படுகின்றன. 2004ல் கடலில் பெரிய அளவில் ஏற்பட்ட நில அதிர்வால் சுனாமி ஏற்பட்டு ஆசியாவின் பல நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தியது. தொடர்ந்து சிறிய அளவிலான நில அதிர்வுகள் பதிவான நிலையில் கடந்த சனிக்கிழமை நேபாள நாட்டில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். ரிக்டர் அளவில் 7.9ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள், பழங்கால நினைவுச் சின்னங்கள் சீட்டுக்கட்டு போல் சரிந்து தரைமட்டமாகி விட்டன. இந்தியாவிலும் சில மாநிலங்களில் பாதிப்பை ஏற்படுத்தியதோடு சென்னையிலும் இது உணரப்பட்டது.
ஆசியாவில் தொடரும் இந்த நில நடுக்கங்களுக்கான காரணங்கள் குறித்து புவி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்த கருத்துப்படி மத்திய இந்துமகா பெருங்கடலில் புவித்தட்டு (டிரஸ்ட்) சிதைவது தெரிய வந்துள்ளது. இந்த சிதைவு அதிக அளவில் உருவாகும்போது இந்திய நிலத்தட்டு வடதிசை நோக்கி தள்ளப்படுகிறது. இது இமயமலை மீது மோதி நில அதிர்வுகள் உருவாக காரணமாக அமைகிறது. இதுபோல் ஆழ்கடலில் நில அதிர்வுகள் மையம் கொள்ளும்போது கடலோர இந்திய பகுதிகள், தமிழகத்தில் சென்னை, நாகப்பட்டினம், குமரி கடற்கரை பகுதிகள் மற்றும் கடலோர உள்பகுதிகளான நெல்லை, மதுரை, திண்டுக்கல், கோவை, சேலம், வேலூர் மாவட்டங்களில் நில நடுக்க அதிர்வுகள் அவ்வப்போது உணரப்படுகிறது.
2 ரிக்டர் அளவிற்கு குறைவான இந்த நில அதிர்வுகள் அவ்வப்போது செஸ்மா மீட்டர் உள்ளிட்ட ஆய்வு கருவிகளில் பதிவு செய்யப்படுகின்றன. தமிழகத்தில் காவிரி பிளவுகளுக்கும் பாலாறு பிளவுகளுக்கும் இடைப்பட்ட பகுதிகள் நில அதிர்வு மண்டலமாக கருதப்பட்டு 3 நில மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் சங்கரன்கோவில் பிளவுகள் மணப்பாடு முதல் நெல்லை வழியாக செங்கோட்டை வரை செல்லும் பிளவு பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளில் சிற்சில அதிர்வுகள் ஏற்படுவதை உணரமுடிகிறது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
முன்கூட்டியே அறிய முடியுமா?
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக புவிதொழில்நுட்பவியல் துறைத்தலைவர் பேராசிரியர் சந்திரசேகர் கூறியதாவது: புவி ஆராய்ச்சியாளர்கள் நிலநடுக்க பாதிப்புள்ள இடங்கள் குறித்து தெரிவித்துள்ள தகவல்கள் உண்மையானது தான். நிலநடுக்கம் வந்தால் என்ன செய்வது என்ற விழிப்புணர்வு ஜப்பான் மக்களிடம் இருக்கிறது. இங்குள்ள மக்களிடமும் இந்த விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக கடந்த 2007ல் மத்திய அரசு நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு நில அதிர்வு குறித்து கண்டறிய உதவும் சீஸ்மா மீட்டர் கருவியை வழங்கியது. நெல்லை, குமரி, தூத்துக்குடி, திண்டுக்கல் ஆகிய இடங்களில் உள்ள 8 பள்ளிகளில் இந்த கருவி அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
இதன் மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வும் அளிக்கப்பட்டது. ஆனால், 5 ஆண்டுத் திட்டம் முடிந்த பின்னர் தொடர்ந்து நிதி கிடைக்காததால் இக்கருவியை பராமரித்து செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. நெல்லை பல்கலைக்கழகத்தில் எங்கள் துறை சார்பில் முடிந்தளவுக்கு இக்கருவியை பராமரித்து வருகிறோம். இதேபோல் 3 கல்வி நிறுவனங்களில் இக்கருவி பராமரிக்கப்படுவதாக தெரிகிறது. இதை மேலும் செம்மையாக அனைத்து இடங்களிலும் பராமரிப்பது அவசியம். நிலநடுக்கம் வராமல் தடுக்க நிலத்தடி நீரை பாதுகாப்பது அவசியம். நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்பு அறிகுறிகள் தென்படுவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval