சென்னை ஆர்.கே.நகர் சட்டபேரவை தொகுதி இடைத்தேர்தலில் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடப்போவதாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி அதிரடியாக அறிவித்துள்ளார்.
சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதிக்கு ஜூன் 27ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. அ.தி.மு.க. வேட்பாளராக முதல்வர் ஜெயலலிதா போட்டியிட உள்ளார். இதற்கான அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகிறது. தி.மு.க.வும், விடுதலை சிறுத்தை கட்சிகளும் போட்டியிடவில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டன. காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் வரும் 3ஆம் தேதி முடிவு எடுக்கிறது. மற்ற கட்சிகளும் விரைவில் முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். 82 வயதாகும் இவர், தற்போது மக்கள் பாதுகாப்பு கழகம் என்ற அமைப்பின் தலைவராக இருக்கிறார். சென்னை நகரின் போக்குவரத்து பிரச்னைகளுக்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடர்ந்தவர். பொது இடங்களில் போஸ்டர்கள், பேனர்கள் கட்டப்படுவதை எதிர்த்து தனி ஆளாக பல போராட்டங்கள் நடத்தி இருக்கிறார்.
தமிழக அரசு திட்டங்களில் ‘அம்மா’ என்ற பெயரை நீக்க கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதே போல் முதல்வர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டதை உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார்.
கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி நடந்த ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் டிராபிக் ராமசாமி சுயேச்சையாக போட்டியிட்டு, 1167 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்ததுடன், டெபாசிட்டும் இழந்தார்.
இந்நிலையில் தற்போது ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலிலும் போட்டியிட டிராபிக் ராமசாமி முடிவு செய்துள்ளார்.
இது குறித்து விகடன் டாட் காமிற்கு அவர் அளித்த பேட்டியில், “ஒரு வாரத்திற்கு முன்பு ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் மதுரையை சேர்ந்த பாத்திமா என்ற பெண்ணை நிறுத்த முடிவு செய்திருந்தேன். தற்போது நிலைமை சரியில்லாததால் நானே போட்டியிடுகிறேன்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், பா.ஜனதா தலைவர் தமிழிசை செளந்தரராஜன், காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்பேன்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனை சந்தித்து ஆதரவு கேட்டுள்ளேன். மற்ற கட்சிகள் தேர்தலை புறக்கணித்தாலும் நான் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன்” என்று உறுதியாக கூறினார்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval