Tuesday, May 12, 2015

ஹனீபாவிற்கான முக்கியத்துவம் எப்போதும் குறைந்ததில்லை!

நிச்சயம் மரணம் வரும், நீ ஒரு நாள் இறந்திடுவாய்
நேசரெல்லாம் அழுத பின்னே, நீ சந்தூக்கு ஏறிடுவாய்”

என்ற வரிகளைப் பாடிய, வெண்கலக் குரலை மரணம் தழுவிச் சென்றுவிட்டது.

அரசியலுக்கு தமிழ் ஆர்வத்தால் வந்தேன் என்று சொன்னவர். எடுத்த முடிவிலும், கொண்ட கொள்கையிலும் எந்த சமரசமும் செய்து கொள்ளாதவர். தமிழ் முஸ்லீம் சமூகத்தினரிடையே இசையால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். இசுலாமியர்கள் அல்லாதோர் வீடுகளிலும், தனது சமத்துவப் பாடல்களால் குடியேறியவர். தி.மு.கழகத்தின் கொள்கைகளை தனது குரலால் பாமர மக்களிடம் கொண்டு சேர்த்தவர். பெரியார் தொட்டு பேரறிஞர் அண்ணா என கலைஞர் கருணாநிதி வரை பயணித்த, அரை நூற்றாண்டிற்கும் மேலான திராவிட இயக்கத்தின் வரலாறு, “இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபா”.

1938 தொட்டு 2006 வரை, சுமார் 68 ஆண்டு காலம் இடைவிடாது இசைப் பயணம் செய்த கம்பீரக் குரல், கடந்த 08.04.2015-ல், தனது 90-ம் வயதில் நிரந்தர ஓய்வில் நம்மிலிருந்து விடைபெற்றுச் சென்றுவிட்டது.

”வேளை உதவி தாளை தருவீர், வேந்தர் யா முஹம்மதுவே”

என்கிற பாடலை, தான் படித்த நாகூர் செட்டியார் பள்ளிக் கூடத்தின், இறை வணக்கப் பாடலின் போது 11-வயதில் பாடினார் இசைமுரசு. அது தொட்டு 13-ம் வயதில் கெளதிய்யா பைத்து சபாவின் குழுவில் ஒருவராய் இணைந்து திருமண வீடுகளில் ஒலிக்கத் தொடங்கியவர், பின்னர் அந்தக் குழுவின் முதன்மைப் பாடகராய், தனித்த அடையாளம் பெற்று முன்னேறினார். இரண்டே வருடங்களில் அவரின் அசாத்திய குரல் வளத்தால், பக்க வாத்தியங்களின் நடுவில் அமர்ந்து கச்சேரி செய்யும் நிலையை அடைந்தார் நாகூர் ஹனீபா. அதற்கு அடுத்த ஆண்டிலேயே, அதாவது அவருடைய 16-வயதிலேயே, முறையாகப் பணம் பெற்றுக் கொண்டு வெளியூர் கச்சேரிகள் செய்யவும் தொடங்கிவிட்டார்.

அது தொட்டு மூஸ்லீம்களின் இல்ல நிகழ்வுகளிலும், விழா மேடைகளிலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மேடைகளிலும் தொடர்ச்சியாய், அயற்சி இன்றி, தனது கம்பீரத் தொனியில் சிறிதும் தளர்ச்சி இன்றி, 2006 வரை இசை முழக்கம் செய்து, தனிப்பெரும் ஆளுமையை நிகழ்த்திச் சென்றிருக்கிறார், இரும்புக் கடை வியாபாரியின் மகனாய் எளிய குடும்பச் சூழலில் பிறந்து வளர்ந்த நாகூர் ஹனீபா.

இஸ்மாயீல் முஹம்மது ஹனீபா என்கிற பெயர் கொண்டவராய், 25.12.1925-ல், முஹம்மது இஸ்மாயீல் – மரியம் பீவி என்கிறவர்களுக்கு மூன்றாவது மகனாய் பிறந்தார் இவர். காலப் போக்கில் இசைப்பயணத்தின் வழியால் ”இ.எம்.ஹனீபா” என்று சுருக்கியும், பின்னர் அதே நீரோட்டத்தில் புகழ் பல காணக் காண “இசைமுரசு” என்று மரியாதைப் பெயர் கொண்டும் அழைக்கப்பட்டார்.

இராமநாதபுரத்தின், வெளிப்பட்டிணம் எனும் கிராமத்தில் பிறந்த இவர், வளர்ந்த ஊர்தான் நாகூர். ஆனால், தனது தந்தையின் பூர்வீக ஊர் நாகூர் என்பதினால், இவரும் நாகூரோடு சேர்ந்தே அடையாளப்பட்டுப் போனார். நாகூரில் உள்ள செட்டியார் பள்ளிக் கூடத்தில் ஏழாம் வகுப்பு வரை படித்ததுவே இவரின் கல்வி நிலையாகும். அதற்குப் பிறகு, ”சைகால், கே.பி.சுந்தாராம்பாள், இசுலாமியப் பாடகர் காரைக்கால் தாவூத், பி.யு.சின்னப்பா, தியாகராச பாகவதர், கிட்டப்பா” போன்ற கலைஞர்களின் பாடல்களால் உந்தப் பெற்றவர், முறையாக சங்கீதம் கற்காமலேயே தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கிக் கொண்டு, இசைப் பயணத்தைத் துவக்கினார். இவர் அமைத்துக் கொடுத்த பாணிதான், இசுலாமியப் பாடலின் பாணியாக இன்று பலராலும் தமிழகத்தில் பின்பற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஏறக்குறைய 5000-க்கும் அதிகமான இசைக் கச்சேரிகளை நிகழ்த்திய இவர், சுமார் 300-க்கும் அதிகமான பாடல்களைப் பாடியிருக்கிறார். 290 பாடல்கள் இசைத் தட்டில் ஏறியும், 40-க்கும் மேலான பாடல்கள் மேடை வடிவிலேயே நின்றும் ஒலித்திருக்கின்றன.

என்று இவரின் இசைப் பயணம் துவங்கியதோ, அன்றிலிருந்தே இவரின் அரசியல் பயணமும் துவங்கிவிட்டது. 1939-ம் ஆண்டில் திருமண வீடுகளில் இவரின் குரல் ஒலிக்கத் தொடங்கிய அதே ஆண்டில்தான், இவர் முதன் முதலாக அரசியலில் சிறை வாசத்தையும் கண்டார்.

தான் கொண்டிருந்த தமிழ் பற்றினால், அன்றைய தினம் தமிழகத்தில் எழுந்திருந்த இந்தி எதிர்ப்பு உணர்வு இவரிடமும் அதிகமாக மேலோங்கி இருந்தது. இந்த நிலையில் அப்போதைய முதல்வர் ராஜாஜி, நாகூருக்கு வருகை தந்தார். இவரின் வருகையைக் கண்டித்து நாகூரில் நான்கு நபர்கள், கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்புக் காட்டினர். அந்த நால்வரில் ஒருவர் நாகூர் ஹனீபா ஆவார். இந்த நால்வருமே கைது செய்யப்பட்டனர். அப்போது ஹனீபாவின் வயது 13.

இதன் பிறகு நீதிக் கட்சியின் பக்கம் ஈர்க்கப்பட்ட நாகூர் ஹனீபா அவர்கள், அதில் தீவிரமாய் ஈடுபட ஆரம்பித்தார். திருவாரூரில் உள்ள ஓடம் போக்கி ஆற்றங்கரையில் நீதிக் கட்சியின் கூட்டம், தோழர்.ஜீவானந்தம் தலைமையில் நடைபெறுவது வழக்கம். இந்தக் கூட்டங்களில் நாகூர் ஹனீபாதான் முதலில் மேடை ஏறி தனது கணீர் குரலால் பாடி மக்களைத் திரட்டுவார். இதன் பிறகே, அரைக்கால் சட்டையுடன் கலைஞர் ஏறி, சொற்பொழிவாற்றுவார்.

கலைஞர் கருணாநிதிக்கும், ஹனீபாவிற்கும் இடையிலான நட்பு என்பது இதிலிருந்தும், இதற்கு சற்று முன்னரான, ‘கவிஞன் குடிசை’ வாழ்வில் இருந்துமே தொடங்கிற்று. புலவர் ஆபீதீன் அவர்களிடம் உலகப் பயிற்சிகளைப் பெற அந்நாளில் பலர் நாகூர் வந்து, ‘கவிஞன் குடிசை’ எனும் இடத்தில் தங்கி உரையாடுவதுண்டு. புலவரின் பட்டறையில் உருவானவர்தான் நாகூர் ஹனீபா. இதே புலவரின் பட்டறையில் பாடம் படிக்க ஆர்வம் கொண்டு, இரயில் ஏறி பயணித்து வந்து சென்றவர்தான் கலைஞர் கருணாநிதி.

1940-ம் ஆண்டில் தஞ்சை நகரில், மாநிலம் தழுவிய அளவில் பிரம்மாண்ட மீலாது விழா நிகழ்வு ஒன்று நடந்தது. இந்த விழாவில் பங்கெடுத்து இசைக் கச்சேரி செய்ய, பல ஊர் கச்சேரிக் குழுக்கள் சென்றனர். அதிலொரு குழுவாக, நாகூர் ‘கெளதிய்யா பைத்து சபாவும்” சென்றது. இந்த கச்சேரிக்கு, புலவர் ஆபீதினிடம் விரும்பிக் கேட்டுக் கொண்டு கலைஞரும் உடன் சென்றார். கச்சேரியின் போது, கெளதிய்யா சபாவின் சீருடையை அணிந்து கொண்ட கலைஞர், ஹனீபாவின் பாடலுக்கு தப்ஸ் ஒலிக்கும் குழுவோடு சேர்ந்து, அவரும் தப்ஸ் ஒலித்துக் கொண்டிருந்தார். இதிலிருந்து துலங்கிய இருவரின் நட்பும், ஹனீபாவின் இறுதிக் காலம் வரை, ஏறத்தாள 77 ஆண்டுகளாய் எந்த முரண்களற்றும் தொடர்ந்தது. ஹனீபாவிற்கும், கலைஞருக்கும் இடையிலான இந்த நட்பினை எந்த அரசியல்வாதிகளின் வரலாற்றிலும் பார்த்திட இயலாது.

இந்த நட்பின் உணர்வை அப்படியே பிரதிபலித்தது, ஹனீபாவின் மரணித்த உடலை நேரில் சென்று பார்த்தப் பின்னர், ”எனது ஆருயீர் நண்பனை இழந்து தவிக்கிறேன். வாழ்க ஹனீபாவின் புகழ்” என்று நாவு தழுவ, கலைஞர் வழங்கிய இரங்கல் உரை.

”சின்னச் சின்னப் பாலர்களே சிங்காரத் தோழர்களே” என்று ஹனீபா பாடிய இந்த இசுலாமியப் பாடல்தான் முதன் முதலில் இசைத் தட்டில் ஏறி, உலகம் பரவியது.

இதே இசைத் தட்டின் இன்னொரு புறத்தில் ஒலித்ததுதான்,

“எங்கள் நாடும், எங்கள் வளமும்; மங்காத தமிழென்று சங்கே முழங்கு” என்கிற பாவேந்தர் பாரதிதாசனின் வரிகளில் எழுந்த பாடலுமாகும். இதன் பிறகு ஹனீபா, பெரியாரைக் குறித்து ஒரு பாடலைப் பாடினார். “தூங்கிக் கிடந்த உனைத் தூக்கி, துடைத்தணைத்து; தாங்கித் தரைமேல் இட்டார் – தமிழர் தாத்தாவாம் ஈ.வெ.ரா” என்ற பாடல்தான் அது. இதிலிருந்து தான் களம் கண்ட இயக்கத்தின், கட்சியின் கொள்கைகளைத் தாங்கிய பல பாடல்களைப் பாடி, உலக அரங்கில் அவைகளைக் கொண்டு சேர்த்திருக்கிறார் ஹனீபா.

பெரியாரிடம் இருந்து அண்ணா பிரிந்து, தி.மு.க-வினை துவக்கியதும், ஹனீபா, அண்ணாவின் தி.மு.கழகத்தில் பயணிக்கத் தொடங்கினார். அன்றிலிருந்து தனது இறுதி வரையில், தி.மு.க-வைத் தவிர்த்து அவர் வேறு ஒரு கட்சியை அறிந்திடவே இல்லை எனலாம்.

இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, துபாய், பஹ்ரைன் போன்ற உலக நாடுகள் பலவற்றிலும் கச்சேரி செய்து, தனது பாடல்களின் மூலம் உலகப் புகழ் பெற்ற ஹனீபா, பெரிய அளவில் அரசியல் அரங்கில் அறியப்படாமலிருந்த அண்ணா-வின் தலைமையில் கட்சி கண்டார்.

“அழைக்கின்றார், அழைக்கின்றார், அழைக்கின்றார் அண்ணா; அருமை மிகும் திராவிடத்தின் துயர் துடைக்க இன்றே” என்று ஹனீபா பாடிய பாடல்தான் அண்ணாவும், அவர் தன் கழகமும் மாநிலம் முழுமைக்கும் பரவிச் செல்லக் காரணமாய் அமைந்தது. இந்தப் பாடலை H.M.V  நிறுவனத்தார், பதிவு செய்ய முதலில் மறுத்துவிட்டனர். ஆனால் கொள்கையில் தீரம் கொண்ட ஹனீபா, இதனை பதிந்தால்தான் வேறு பாடல்கள் பாடுவேன் என்று உறுதியாய் நின்றார். இதனால் அந்நிறுவனம் இப்பாடலை இசைத் தட்டிலேற்றி, வெளியிட்டது. அவர்கள் வியக்கும் வண்ணம் இந்தப் பாடல் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று, வசூலில் சாதனையையும் படைத்தது.

இந்த நிலையில் 1957-ல் முதன் முதலில், தேர்தலைச் சந்தித்தது தி.மு.கழகம். இத்தேர்தலில் நாகையின் வேட்பாளராக நிறுத்தப்பட்டார், ஹனீபா. ஹனீபாவை வேட்பாளராய் நிற்க வைத்ததற்கு அண்ணா சொன்ன காரணம், “ஹனீபா புகழ் மிக்கவர். அவர் நின்றால் கட்சியின் பெயர் பரவும்” என்பதுதான். இத்தேர்தலில் துரதிர்ஷ்டவசமாக ஹனீபா தோற்றுப் போனார்.

ஹனீபா-வினுடைய குரலின் வலிமையைக் குறித்து அண்ணா ஒருமுறை கூறுகிறபோது, “ஹனீபாவைப் பாட வைத்து, அதனைப் படமெடுத்து திரையிட அரசின் சென்சார் துறை அனுமதித்தால், நான் திராவிட நாடு பெற்று விடுவேன்” என்றார். இந்தக் கூற்றைக் கொண்டு, கலைஞரின் முயற்சியால் எடுக்கப்பட்ட ஒரு படத்தில், ‘அழைக்கின்றார் அண்ணா’ என்கிற ஹனீபாவின் பாடலை இடம்பெறச் செய்தனர். ஆனால் அரசு அதற்கு அனுமதிக்கவில்லை. அந்த அளவிற்கு பெரும் அதிர்வலையைக் கொண்டதுதான் ஹனீபாவின் குரலும், அவரின் பாடல்களும்.

பேரறிஞர் அண்ணாவின் மரணத்திற்குப் பிறகு, தி.மு.கழகம் இரண்டாக உடைந்து போனது. இந்த நிலையிலும் தி.மு.கழகத்தில், கலைஞரின் தலைமையின் கீழ் தடுமாற்றங்களின்றி தொடர்ந்தார் ஹனீபா. ஹனீபாவின் பலமறிந்த எம்.ஜி.ஆர், பலமுறை ஹனீபாவை அழைத்துப் பார்த்தார். ஆனால் ஹனீபா தனது நிலையில் உறுதியாய் இருந்து, எம்.ஜி,ஆரின் அழைப்புகளை மறுத்துவிட்டார்.

ஹனீபா அரசியல் ரீதியாக சில தலைவர்களைப் புகழ்ந்து பாடியிருக்கிறார். அப்படி அவர் பாடியது முதலில் பெரியாரைக் குறித்தப் பாடல்தான். அதன்பிறகு அண்ணாவைக் குறித்து ஹனீபா பாடிய பாடலைப் போலவே அவர் கலைஞரைக் குறித்து பாடிய பாடல்களும், பெரும் வரவேற்பை பெற்றது. இதன் நீட்சியாக அவர் பாடிய கழகப் பாடல்கள் ஒவ்வொன்றும், சாமானிய மக்களின் மனதிலும் ஒரு கலகத்தை ஏற்படுத்தின. குறிப்பாக அவர் பாடிய, “தன் மானம் காக்கும் கழகம், கள்ளக்குடி கொண்ட கருணாநிதி, ஓடி வருகிறான் உதய சூரியன், கம்பீரக் கலைஞர் கருணாநிதி, உடன் பிறப்பே கழக உடன் பிறப்பே” போன்ற பாடல்கள் பலரை தி.மு.கழகம் நோக்கி இழுத்தவை எனலாம்.

ஹனீபா தான் கொண்ட கொள்கைக்காகவும், அதன் நீட்சியாய் பங்கு கொண்ட கட்சிக்காகவும், வெறும் மேடைக் கச்சேரிகளில் மட்டும் பாடிச் செல்பவராய் இல்லாமல், களத்தில் இறங்கிப் பணி செய்தவராயும் திகழ்ந்திருக்கிறார்.

சுயமரியாதை இயக்கம் தொட்டு, தி.மு.கழகம் வரை துவக்க காலங்களில் நடைபெற்ற கூட்டங்களிலும், மாநாடுகளிலும் ஓடி ஓடி உழைத்திருக்கிறார். மாநாட்டில் புல் தரைகளில் படுத்துத் தூங்கியிருக்கிறார். கலைஞர்கள் போராட்டக் களங்களுக்கு வர வேண்டாம் என அண்ணா விலக்கு அளித்த போதும், “அது கோழைகளுக்குச் சொல்லப்பட்டது. நான் வீரன்” என்று கூறியபடியே பல போராட்டங்களில் பங்கெடுத்து, 13 முறை சிறைவாசமும் பெற்றிருக்கிறார். 1983-ம் ஆண்டு தமிழகத்தில் ஏற்பட்ட நெசவுத் தொழிலின் நலிவினால், நெசவாளர்களுக்கு ஆதரவாக, கைத்தறிகளை வீதி தோறும் இறங்கி கூவிக் கூவி விற்றிருக்கிறார் ஹனீபா.

தி.மு.கழகம் ஆரம்பித்த நாட்கள் தொட்டு இன்றளவும், அதன் மாநாட்டு மேடைகளில் ஹனீபாவின் இடத்தை, அக்கட்சி வேறு யாருக்கும் அளித்தது கிடையாது. ஹனீபாவிற்கு மேலவை உறுப்பினராக பதவி கொடுத்துள்ளது. கட்சித் தலைவரின் தோள் மீது, கை போட்டு நிற்கும் உரிமையை அளித்துள்ளது.

ஒரு நிழ்வில், ஹனீபா பாடிக் கொண்டிருக்க இடையிலேயே, கலைஞரும், பிற பொறுப்பாளர்களும் நிகழ்ச்சிக்கு வருகை தந்துவிட, அவைகளைப் பொருட்படுத்தாது தொடர்ந்து பாடியிருக்கிறார் ஹனீபா. ஹனீபா பாடி முடிக்கும்வரை கலைஞர் கீழே அமர்ந்து காத்திருந்துவிட்டுத்தான் மேடை ஏறியிருக்கிறார். இந்த முக்கியத்துவம் ஹனீபாவிற்கு எப்போதும் அங்கு குறைந்ததில்லை.

“இறைவனிடம் கையேந்துங்கள், அவன் இல்லையென்று சொல்லுவதில்லை” என்கிற ஒரு பாடலை அமைத்து, முஸ்லீம்களைக் கடந்து அனைத்து மதத்தினர் மத்தியிலும் அதனைக் கொண்டு போய்ச் சேர்த்து, சமத்துவத்தை உண்டு பண்ணியிருக்கிறார் ஹனீபா. இந்தப் பாடலுக்கு, பக்கம் பக்கமாக சிலேடை வாசித்திருக்கிறார், கிருபானந்த வாரியார். சென்னையில் இந்துப் பண்டிதர்கள் நூற்றுக் கணக்கில் கூடிய ஒரு அவையில், அரங்கேறியது இந்தப் பாடல், அதுவும் இந்து மதப் பண்டிதர்களின் வாய்களினாலேயே.

கடந்த 2012 செப்டம்பரில், ஹனீபாவின் இல்லம் தேடிச் சென்று பார்த்த மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், ஹனீபாவிடம் இந்தப் பாடலைப் பாடச் சொல்லிக் கேட்கிறார். தனது 7-வயதில் இருந்தே, தவறாது இசுலாமிய மாண்பான நோன்பைக் கடைபிடிக்கும் ஹனீபா, 87-வயதான அந்த நிலையிலும் நோன்பு நோற்றிருந்தார். தன்னுடைய நண்பரின் வேண்டுகோளுக்கிணங்க, வயதின் முதிர்ச்சியினாலும், நோன்பு பிடித்திருக்கும் சோர்வினாலும் தட்டுத் தடுமாறு பாடுகிறார். இதனைக் கண்ட ஆதீனம், ஹனீபா நிறுத்தியதும், தானே அந்தப் பாடலைப் பாடுகிறார். இதன் காணொளியை, யூடியூப் இணையப் பக்கத்திலே இன்றும் நம்மால் பார்க்க முடியும். ஹனீபாவின் ஒரு பாடல் ஏற்படுத்திய சமூக நல்லிணக்கத்தை, நம்மால் ஏற்படுத்திவிட இயலுமா?
Courtesy: ilakkiyam. nakkeeran
தகவல் ;சவ்கத் அலி 
BOSTON U,S,A

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval