Tuesday, December 27, 2016

ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பழிதீர்த்த வீரன் உத்தம் சிங் பிறந்த நாள் சிறப்புப் பகிர்வு!

உத்தம் சிங்
ருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்திய விடுதலை வரலாற்றை புரட்டிப்போட்ட ஒரு நிகழ்வு, அதனால் உருவான ஒரு நாயகன் குறித்துக்காண்போம்.
ஆங்கிலேயரே ஆண்டிருக்கலாம் என்பவர்கள், ஜாலியன்வாலாபாக் சம்பவத்தையும்,
அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளையும் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும். 
ஆங்கிலேய அரசு 1919இல் ரவுலட் சட்டத்தைக் கொண்டு வந்தது. விசாரணையே இல்லாமல், காரணமே சொல்லாமல் இந்தியர்களைக் கைது செய்ய முடியும் எனக் கொடிய நடைமுறையை ஆங்கிலேய அரசு அறிவித்தது. பஞ்சாபில் முக்கியமான தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். ரவுலட் சட்டத்தைப் பயன்படுத்தி 581 பேர் கைது செய்யப்பட்டார்களை; நூற்று ஏழு பேருக்கு தூக்குத் தண்டனை 
விதிக்கப்பட்டது, 264 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. கூடவே ஆங்கிலேயர் ஒரு தெருவில் தோன்றினால் அவருக்குத் தலை குனிந்து வணக்கம் செலுத்த வேண்டும்; தவழ்ந்தும் செல்ல வேண்டும். தவறினால் கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டது. சில இடங்களில் வன்முறைகளும் வெடித்தன. காந்தியடிகள் அமிர்தசரஸ் நகருக்குள் நுழைய தடை வேறு விதிக்கப்பட்டு 
இருந்து. சத்யபால் கிட்ச்லு எனும் இரு தலைவர்களை நாடு கடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அதை எதிர்த்து ஜாலியன் வாலா பாக்கில் கூட்டம் நடந்தது.
அன்றைக்குச் சீக்கியர்களின் பண்டிகையான பைசாகி திருநாள் அதற்காகவும் எண்ணற்ற மக்கள் கூடியிருந்தார்கள். பஞ்சாபில் நிலைமை கொதிநிலையில் இருக்கிறது புரட்சி வர வாய்ப்பிருக்கிறது என அம்மாகாணத்தின் காவல் துறை அதிகாரி ரெஜினால்ட் ஓ டயர் முடிவு செய்தான். பார்க்கில் 20,000 மக்கள் கூடியிருந்தார்கள். தொன்னூறு பேர் கொண்ட படைகளோடு வாகனங்களில் மெஷின் கன்களை எடுத்துக்கொண்டு வந்தது அவன் படை. வெளியேற வழியாக இருந்த ஒரே குறுகலான பாதையை அடைத்துக் கொண்டார்கள்.
எந்த வித எச்சரிக்கையும் கொடுக்காமல் எந்த அறிவிப்பும் இல்லாமல் இந்தியர்களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு ரெஜினால்ட் ஒ டயர் உத்தரவு தர, ஐம்பது பேர் கொண்ட படை அப்பாவி மக்கள் நோக்கி 1,650 ரவுண்டுகள் சுட்டது. மக்கள் செத்து விழுந்தார்கள். பல பேர் கிணற்றில் விழுந்து இறந்து போனார்கள். நெரிசலிலும் பலபேர் இறந்து போனார்கள். அதிகாரப்பூர்வ மதிப்பீடு 379 பேர் இறந்தார்கள்; ஆயிரத்தி இருநூறு பேர் காயமடைந்தார்கள் என்றது. ஆங்கிலேயே மருத்துவரே எண்ணிக்கை ஆயிரத்துக்கு மேல் இருக்கும் என்றார். 
மாகாண ஆளுநர் மைக்கேல் டயர் ரெஜினால்ட் டயர் செய்ததைச் சரி என்று ஆதரித்தான். ”நீங்கள் செய்த செயல் சரியானது. அதை நான் அங்கீகரிக்கிறேன்’’ என்று சொன்னான். ஹண்டர் கமிஷன் இந்நிகழ்வை விசாரிக்க அமைக்கப்பட்டது. ‘‘நான் மக்களைச் சுட வேண்டும் என்று முடிவு செய்துகொண்டுதான் வந்தேன். மெஷின் கன்களை வைத்திருந்த வாகனங்கள் உள்ளே வரும் அளவுக்கு இடமில்லை. இல்லையென்றால் இன்னமும் பல பேரை கொன்றிருப்பேன். மேலும், இதில் எந்த வருத்தமும் இல்லை. அவர்களை நான் எச்சரித்திருக்கலாம். ஆனால் ,அப்படி எச்சரித்துத் துரத்தி இருந்தால் மீண்டும் வந்து என்னைப் பார்த்து சிரித்து இருப்பார்கள். அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு போக நான் எண்ணவில்லை. அது என் வேலையும் இல்லை. சுட்டேன் சுட்டேன் இந்தியர்களை இந்திய மண்ணிலேயே சுட்டேன்’’ என டயர் கொக்கரித்தான். மேலும் குண்டுகள் தீர்ந்து போய் விட்டதாலேயே இவ்வளவு கம்மியான மக்களைக் கொல்ல முடிந்ததாக வருத்தமும் தெரிவித்தார் டயர்.
பெரும் நெருக்கடியின் காரணமாக வெறுமனே பதவியை விட்டு மட்டும் டயரை  அனுப்பினார்கள். பதவியை விட்டு நீக்கப்பட்ட பொழுதும் பல லட்சம் ரூபாயை அவன் செய்த அற்புத செயலுக்கு ஆங்கிலேயர்கள் நிதி திரட்டி கொடுத்தார்கள். மார்னிங் போஸ்ட் பத்திரிக்கை 26,000 பவுண்டுகள் திரட்டி அந்தக் கொலை பாதகத்தைக் கொண்டாடியது. இங்கிலாந்து நாடாளுமன்றம் அச்செயலை ஆதரித்துத் தீர்மானம் வேறு போட்டது.
உத்தம் சிங்:
இந்தப் படுகொலையை நேரில் பார்த்த உத்தம் சிங் இரு அதிகாரிகளையும் கொல்ல உறுதி பூண்டான். நேரடியாக இங்கிலாந்து போகாமல் கென்யா, ஆஸ்திரியா, அமெரிக்கா, ஜெர்மனி என அலைந்து அவனைக் கொல்ல இங்கிலாந்து சென்றார். பன்றி தொழுவத்தில் வேலை பார்த்தார். பசி வாட்டி எடுக்க இருபாதாண்டு கால வெறியை அடக்கி வைத்திருந்தார். ரெஜினால்ட் ஒ டையர் ஏற்கனவே இறந்து போக இயற்கை முந்திக்கொண்டது என வருத்தப்பட்டார்.
காக்ஸ்டன் ஹாலுக்கு மைக்கேல் டயர் மற்றும் ஜெட்லாண்ட் எனும் இந்திய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் ஆகியோரை வந்ததும் குறிபார்த்து ஆறு முறை சுட்டார். இறந்து போனான் டயர் . அந்த வேலை முடிந்ததும் கம்பீரமாக ஓடாமல் அங்கேயே நின்ற உத்தம் சிங் ,"என்னுடைய வேலை முடிந்தது ; என் நெஞ்சின் கனல் தணிந்தது !" என்று அறிவித்தார்.
கோர்ட் படியேறிய பொழுது ,"டயர் தூக்கு தண்டனைக்கு உரியவன் அதைத்தான் நான் தந்தேன் !" என்று உறுதிபடச் சொன்னார் உத்தம் சிங். தன் பெயரை கேட்டபொழுது “ராம் முகம்மது சிங்” எனச் சொல்லி மதங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் நாங்கள் எனப் புரியவைத்தான்.
‘‘சுட்டேன் சுட்டேன்… ஆங்கிலேயனை ஆங்கிலேய மண்ணில் சுட்டேன்!”என்று சொல்லி கம்பீரமாகத் தூக்கு மேடை ஏறினான் அந்த வீரன். தன்னுடைய பிணம் ஆங்கிலேய மண்ணில் புதைக்கப்படக்கூடாது என்கிற அளவுக்குத் தேசபக்தி ஊறியிருந்தது அவரிடம். டைம்ஸ் பத்திரிக்கை சுதந்திர போராட்ட வீரன் அவர் என்று புகழாரம் சூட்டியது. யானை போலப் பழி வாங்காமல் ஓயமாட்டார்கள் இந்தியர்கள் என்று ஜெர்மனி வானொலி அறிவித்தது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval