பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை 5 ஆயிரத்துக்கும் அதிகமாக வங்கிகளில் டெபாசிட் செய்ய ரிசர்வ் வங்கி புதிய நிபந்தனைகளை விதித்து உள்ளது.
பழைய நோட்டு செல்லாது
கடந்த மாதம் 8-ந் தேதி உயர் மதிப்பு கொண்ட ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். கருப்பு பணத்தை ஒழிப்பதற்காகவும், கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தை தடுக்கவும் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக மத்திய அரசு கூறியது.
உயர் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களில் டிசம்பர் 30-ந் தேதி வரை டெபாசிட் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதில் ரூ.2½ லட்சத்துக்கும் அதிகமாக பழைய ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்யப்படும்போது, வரிவிதிப்பு முறை பின்பற்றப்படுவது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு இருந்தன.
புதிய நிபந்தனைகள்
இந்த நிலையில் கருப்பு பணத்துக்கு எதிரான நடவடிக்கையை இன்னும் தீவிரப்படுத்தும் விதமாக பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கு ரிசர்வ் வங்கி நேற்று மேலும் சில கடுமையான நிபந்தனைகளை விதித்தது. வங்கி கணக்குகளில் கருப்பு பணம் டெபாசிட் ஆகாமல் தடுப்பதற்காக இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக ரிசர்வ் வங்கி கூறி உள்ளது.
இதுபற்றி ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ரூ.5 ஆயிரம் டெபாசிட்
பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வைத்திருக்கும் வங்கி வாடிக்கையாளர் ஒருவர் இனி நாள் ஒன்றுக்கு தனது கணக்கில் அதிகபட்சமாக ரூ.5,000 வரை டெபாசிட் செய்யலாம்.
அது குறித்து எந்த கேள்வியும் வங்கியால் கேட்கப்படமாட்டாது. அறிவிக்கப்பட்டு உள்ள காலக்கெடுவான டிசம்பர் 30-ந் தேதிக்குள் இதுபோல் பணத்தை செலுத்தலாம். இந்த தொகை அதுவரை வரவில் மட்டுமே வைக்கப்படும்.
ஒரே ஒரு முறைதான்
அதே நேரம், ரூ.5 ஆயிரத்துக்கும் அதிகமான தொகையை பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வாடிக்கையாளர் தனது கணக்கில் இனி டெபாசிட் செய்தால் டிசம்பர் 30-ந் தேதிக்குள் அவரால் ஒரே ஒரு முறை மட்டுமே இதுபோல் பணத்தை செலுத்த முடியும்.
தவிர, ரூ.5 ஆயிரத்துக்கும் அதிகமான தொகையை பழைய ரூபாய் நோட்டுகளாக டெபாசிட் செய்யும்போது அந்த பணத்தை அதுவரை மாற்றிக்கொள்ளாததற்கு உரிய காரணத்தையும் வாடிக்கையாளர் வங்கி அதிகாரிகளிடம் தெரிவிக்கவேண்டும்.
அந்த காரணத்தை வங்கி அதிகாரிகள் இருவர், வாடிக்கையாளரிடம் இருந்து எழுத்துப்பூர்வமாக பதிவு செய்து கொள்வார்கள். பின்வரும் காலங்களில் தணிக்கை பரிசோதனைக்கு இந்த விளக்கம் உதவுவதாக அமையும்.
ஒட்டுமொத்த கணக்கு
ரூ.5 ஆயிரத்துக்கும் குறைவான தொகைக்கு பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யும்போது, டிசம்பர் 30-ந் தேதி வரை அதுபோல் அடுத்தடுத்து டெபாசிட் செய்யும் பணத்துடன் அந்த தொகை ஒட்டுமொத்தமாக சேர்த்து கணக்கிடப்படும்.
இதில் பழைய ரூபாய் நோட்டுகளாக செலுத்திய மொத்த தொகை ரூ.5 ஆயிரத்துக்கும் மேற்பட்டு இருந்தால், அது தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் ரூ.5 ஆயிரத்துக்கும் அதிகமாக டெபாசிட் செய்த தொகையாக கணக்கிடப்படும்.
3-வது நபர் அவசியம்
அதேபோல் 3-ம் நபர் கணக்கில் பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யும்போது அது 3-வது நபரின் ஒப்புதலுடன் செய்யப்பட வேண்டும். இப்படி பணம் டெபாசிட் செய்யும்போது 3-வது நபரும் உடன் இருக்கவேண்டும்.
பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தை முறையாக செயல்படுத்துவதற்கும், ஊக்கப்படுத்துவதற்கும் ஏதுவாக இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த திட்டத்தின் கீழும் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை பட்டியலிடப்பட்ட 29 வங்கிகளில் டெபாசிட் செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருக்கிறது.
கரிப் யோஜனா திட்டம்
பிரதம மந்திரி கரிப் யோஜனா திட்டத்தின்படி கணக்கில் காட்டாத தொகையை மார்ச் 31-ந் தேதி முடிய டெபாசிட் செய்து 50 சதவீதம் வரி மற்றும் அபராதம் செலுத்தி அந்த தொகையை வெள்ளையாக மாற்றிக்கொள்ள முடியும்.
இதன் மொத்த தொகையில் 25 சதவீதத்தை 4 ஆண்டுகளுக்கு வட்டி இல்லாத டெபாசிட்டாக வாடிக்கையாளர்கள் வைத்திருக்கவேண்டும். வரி ஏய்ப்பு செய்து பதுக்கிய கருப்பு பணத்துக்கு மட்டுமே இந்த விதிமுறை பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
--தினத்தந்தி
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval