வங்கிகளில் வரிசையில் நிற்பதை தவிர்க்கவும், பணம் இருக்கும் ஏடிஎம் மையங்களை தேடி அலைவதை தவிர்க்கவும் ஸ்னாப்டீல் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவின் முன்னணி இணையதள மார்கெட்களில் ஒன்றான ஸ்னாப்டீல் நிறுவனம் (Snapdeal) ‘கேஷ்@ஹோம்’ (Cash at Home) என்ற புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.
இந்த வசதி மூலம் வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் 2000 ரூபாய் நோட்டை ஆர்டர் செய்து தங்களது வீட்டிலேயே அதனை பெற்றுக்கொள்ளலாம். இந்த சேவை தற்போது கோர்கான் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சேவை விரைவில் மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது எனவும் மக்களின் கருத்துக்களின் அடிப்படையிலும், 2000 ரூபாய் நோட்டுகளின் இருப்பையும் பொறுத்து இச்சேவையை விரிவுபடுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மற்ற பொருட்களை டெலிவரி செய்யும்போது கேஷ் ஆன் டெலிவரி (Cash on Delivery) வசதி மூலம் பெறப்படும் நோட்டுக்களையே இச்சேவைக்கு பயன்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்த அடுத்த நாள் அவர்களுக்கு 2000 ரூபாய் நோட்டுகள் டெலிவரி செயப்படும். மேலும் வாடிக்கையாளர்கள் ஒருமுறைக்கு, 2000 ரூபாய் மட்டுமே ஆர்டர் செய்ய முடியும். இதற்கு சேவை கட்டணமாக 1 ரூபாய் வசூலிக்கப்படும் எனவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
ஆர்டர் செய்த வாடிக்கையாளர்கள் 2000 ரூபாய் நோட்டை கொண்டுவருபவரிடம் உள்ள ஸ்வைப்பிங் மிஷினில் அவர்களது டெபிட் கார்டுகளை பயன்படுத்தி பணம் செலுத்தலாம் அல்லது ஃப்ரீசார்ஜ் (FreeCharge) கணக்கு மூலமாகவும் பணம் செலுத்தலாம். மேலும் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த அனைத்து வங்கி டெபிட் கார்டுகளையும் பயன்படுத்தலாம் என்றும் ஸ்னாப்டீல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தங்களின் அன்றாட தேவைக்கான பணத்தை பெறுவதற்கு மக்கள் ஏடிஎம் வாசல்களிலும், வங்கிகளிலும் நீண்ட வரிசையில் காத்து நிற்கும் அவல நிலையை கண்டு அவர்களின் சிரமத்தைக் குறைக்கும் நோக்கிலும், பண நெருக்கடியில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு உதவவும் இந்த சேவையை அறிமுகப்படுத்தியுள்ளதாக ஸ்னாப்டீலின் இணை நிறுவனர் ரோஹித் பன்ஸால் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval