நூற்றாண்டுகளாக புகழின் உச்சியில் இருந்த நகரம் இது. சிறந்த துறைமுக நகரம், தீர்த்த யாத்திரை தலம் என பெருமைகளை நிரம்பக்கொண்டிருந்த நகரம் இது. இன்று யாருமில்லாத, சொல்லப்போனால் முழுமையாக மறைந்து போன நகரமாக காட்சியளிக்கிறது. புயலின் அசுர தாக்குதலில் தன் சிறப்பை எல்லாம் தொலைத்து விட்டு, சிறுசிறு குவியல்களாய் பல நூறு மணல் மேடுகளில் புதைந்து கிடக்கிறது தனுஷ்கோடி நகரம். தனுஷ்கோடி புயலின் அசுர தாக்குதலுக்குள்ளாகி காணமால் போன தினம் இன்று.
ஆங்கிலேயர்களின் ஆட்சியின் போது அதிகம் புழக்கத்தில் இருந்தது கடல் வழி பயணங்கள் மட்டுமே. அதன் பயணாக இந்தியாவில் இருந்து இலங்கை உள்ளிட்ட கீழ்திசை நாடுகளுக்கு எளிதாக செல்ல ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட நகரம் தனுஷ்கோடி. 1964-ம் ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி தெற்கு அந்தமானில் உருவான புயல் வழுவிழந்து இலங்கையை நோக்கி திரும்பியது. டிசம்பர் 22-ம் தேதி இலங்கையில் உள்ள தமிழர்பகுதிகளை சூறையாடிய அந்த புயல் தனது அகோர பசிக்கு தனுஷ்கோடியை விழுங்கியது டிசம்பர் 23 நள்ளிரவில்.
கடும் மழைக்கு மத்தியில் தங்கள் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்த தனுஷ்கோடி மீனவர்களும் மற்றவர்களும் தங்களை விழுங்க காத்திருக்கும் ஆழிப்பேரலை பற்றி அறிந்திருக்கவில்லை. அதன் விளைவே நள்ளிரவில் நல்ல உறக்கத்தில் இருந்த மக்கள் குடும்பம் குடும்பமாக ஜலசமாதி ஆகிபோன சோகம். அந்த ஆழிப்பேரலையில் சிக்கிய பாம்பன் தனுஷ்கோடி (வண்டி எண்:653) பயணிகள் ரயிலில் பயணித்த 115 உயிர்களையும் உள்வாங்கி கொண்டது. 7அடி உயரத்துக்கு எழும்பிய அலைகள் தனுஷ்கோடி ஊருக்குள் புகுந்து ஆயிரக்கணக்கான உயிர்களை அள்ளிகொண்டு போனது. அங்கிருந்த அத்தனை கட்டடங்களும் பொங்கிவந்த கடல் அரசனுக்கு தலைவணங்கிப் போனதால் அந்த கட்டடங்களில் வாழ்ந்தவர்களின் உயிரற்ற சடலங்களையும், மூழ்கிபோன கட்டடங்களின் மிச்சசொச்சங்களையும் மட்டுமே புயல் விட்டு வைத்தது. மனிதர்கள் இனி வாழ தகுதி இல்லாத தனுஷ்கோடியாக மாற்றிச் சென்ற அந்த கோர புயலின் இரவினை நேரில் கண்டவர்கள் காதல்மன்னன் ஜெமினிகணேசன் நடிகையர் திலகம் சாவித்திரி தம்பதிகள்.
வர்தா புயலின் வேகத்தை பார்த்திருப்பீர்கள். 53 ஆண்டுகளுக்கு முன் துறைமுக நகரமான தனுஷ்கோடியை துடைத்தெறிந்த ஆழிப்பேரலையின் ஆவேசத்தை அறிந்திருக்கிறீர்களா? இதோ நடிப்புலகின் ஆளுமைகளாக திகழ்ந்த தம்பதியர் தங்களை நடுங்க வைத்த அந்த இரவை பற்றி இங்கே விவரிக்கின்றனர்.
பெரும் கண்டத்திலிருந்து தப்பிப் பிழைத்த ஜெமினிகணேசன் ‘‘சென்னையில் இருந்து படப்பிடிப்புக்காக கிளம்பியபோது ராமேஸ்வரம் செல்ல திட்டமிடவில்லை. கொடைக்கானலில் தங்கியிருக்கும் போதுதான் ‘ராமேஸ்வரம் போய்ட்டு வருவோமா’ என சாவித்திரி கேட்டாள். ஒரு நாளில் ராமேஸ்வரம் போய்விட்டு திரும்பிவிடலாம் என எண்ணிக்கொண்டு ராமேஸ்வரம் புறப்பட்டோம். நான், சாவித்திரி, மகள் விஜயா மற்றும் பேமிலி டாக்டர்ஸ் ராமகிருஷ்ணா, லீலாவதி, ஜெயம்மா ஆகிய 6 பேரும் 22-ம் தேதி காலை ராமேஸ்வரம் வந்தடைந்தோம். அன்று காலை ராமேஸ்வரம் கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு தனுஷ்கோடி சென்று கடலில் குளித்தோம். குளித்து முடித்ததும் ராமேஸ்வரம் திரும்பத் தயாராகுமாறு சாவித்திரியிடம் கூறினேன். அவளோ ‘மேலும் ஒரு நாள் தனுஷ்கோடியிலேயே தங்கிவிட்டு ராமேஸ்வரம் போகலாம்’ என்றாள். ஏனோ அதனை ஏற்க மறுத்த நான் வேண்டாம் இன்றே திரும்பி விடுவோம் என பிடிவாதமாக சொல்லி பிற்பகல் தனுஷ்கோடியில் இருந்து கிளம்பிவிட்டோம். அன்று இரவு விரைவாகவே தூங்கிவிட்டேன்’’ என்றார்.
நடந்ததை நடிகை சாவித்திரியும் பதிவு செய்திருக்கிறார். ‘‘அன்று இரவு 8 மணிக்கு மேல் பெரும் சத்தத்துடனும், காற்றின் இரைச்சலுடனும் புயல் அடிக்க துவங்கியது. காற்று இவ்வளவு பலமாக வீசுகிறதே என்ன நடக்குமோ? என நானும் டாக்டர்களும் கவலையோடு பேசிக் கொண்டிருந்தோம். இரவு முழுவதும் எனக்கு தூக்கமே வரவில்லை. காற்றின் வேகமும் அதிகரித்து கொண்டே இருந்தது. இதனால் அவரும் (ஜெமினி) விழித்து கொண்டார். நள்ளிரவு 3 மணி இருக்கும். நரிகள் ஒன்று சேர்ந்து ஊளையிடும் சத்தம் கேட்டபடி இருந்தது. பயங்கரமாக சுழன்றடித்த சூறாவளி காற்றின் ஓசையும், நரிகளின் ஊழை சத்தமும் சேர்ந்து எங்களை நடுநடுங்க செய்து விட்டது. சினிமாவில் நடப்பது போன்ற சம்பவம் நேரடியாக வாழ்க்கையிலும் நடக்கிறதே என எண்ணிணேன். அதன் பின் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு பயங்கர புயல் வீசியது. ராமேஸ்வரம் ரயில் நிலையத்தின் அருகில் நாங்கள் தங்கியிருந்த பிரயாணிகள் பங்களாவின் கூரைகள் பறந்துவிட்டன.
என்னைக் குலை நடுங்க வைத்த அந்த இரவின் பொழுது விடிந்ததும் பங்களாவை விட்டு வெளியே வந்தோம். வெளிப்புறம் எங்கும் ஒரே வெள்ளக்காடாக கிடந்தது. ‘என்னம்மா ரோட்டில் தண்ணீர் ஆறு போல ஓடுது’ என என் மகள் விஜயா ஆச்சரியமாக கேட்டாள். மீண்டும் கோயிலுக்குச் சென்ற போது வழியில் இருந்த மரங்கள் சாய்ந்தும், வீடுகள் இடிந்தும் கிடந்தன. இவ்வளவு கோரமாக புயல் அடித்திருக்கிறதே நாங்கள் திரும்பிச் செல்ல ரெயில் கிடைக்குமா என கோயில் அதிகாரியிடம் கேட்டோம். அவரோ ‘ரெயிலா? பாம்பன் பாலத்தையே கடல் அடித்துப் போய்விட்டதே. தனுஷ்கோடி மூழ்கி கிடக்கிறது. அங்கெல்லாம் பலத்த சேதம்’ என்றார். மேலும் தனது தம்பியும் கடலில் மூழ்கி இறந்து விட்டதாக சொல்லி கலங்கினார். புயலின் முழு பயங்கரத்தையும் அப்போதுதான் நாங்கள் உணர்ந்தோம்.
நாங்கள் வைத்திருந்த ஆயிரம் ரூபாயை கொண்டு புயலால் வீடு வாசல்களை இழந்தது தவித்தவர்களுக்கு பகிர்ந்து கொடுத்தோம். காயம்பட்டவர்களை ஆஸ்பத்திரியில் சேர்க்க எனது வீட்டுக்காரர் உதவினார். அன்று முழுவதும் ராமேஸ்வரத்திலேயே தங்கியிருந்தோம். மறுநாள் காலை ரயில் நிலையத்தில் ஒரு ரயில் என்ஜின் மட்டும் நின்று கொண்டு இருந்தது. அதில் ஒரு பெட்டியை மட்டுமாவது சேர்த்து எங்களை பாம்பன் வரை கொண்டு விடும்படி டிரைவரிடம் கேட்டோம். ‘ரயிலை இயக்க நிலக்கரி இல்லை.
பாம்பனில் இருந்து எடுத்து வருகிறேன்’ என கூறிச் சென்றவர் வெகு நேரமாகியும் திரும்பவில்லை. மாலை 4 மணியிருக்கும் ஒரு ரயில் வந்தது. அதில் மந்திரி கக்கன் வந்தார். புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு பொட்டலங்கள் கொடுத்தார். இது தவிர விமானம் மூலமும் உணவு பொட்டலங்கள் போட்டார்கள். 26-ம் தேதி காலை மந்திரி கக்கன் வந்த ரயிலில் நாங்களும் ஏறி பாம்பனை அடைந்தோம். அங்கிருந்த மோட்டார் படகில் ஏறி மண்டபத்தினை அடைந்தோம். அங்கு எங்களுக்காக தயாராக இருந்த கார் மூலம் மதுரை வந்து அங்கிருந்து விமானம் மூலம் சென்னையை வந்தடைந்தோம்’’ என ஆழிப்பேரலை ஏற்படுத்திய கோரத்தின் தாக்கத்தினை விவரித்துள்ளனர்.
சுமார் 53 ஆண்டுகளுக்கு முன் ஆழிப்பேரலையால் உருக்குலைந்த தனுஷ்கோடி நகரம் தற்போது வரை மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இன்றியே இருந்து வருகிறது. இதனை மாற்ற மத்திய அரசு முதல் கட்டமாக தனுஷ்கோடிக்கு நீண்ட சாலை அமைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
- இரா.மோகன்.
vikadan
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval