சென்னை மாநகராட்சி, நவீன மற்றும் கவர்ச்சிகரமான நடைபாதைகளையும், பூங்காக்களையும் உருவாக்கும் எண்ணத்தில், கூவம் மற்றும் அதையொட்டிய குடிசைப் பகுதிகளை அகற்றத் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
ஒன்பது பூங்காக்களையும், நடைபாதைகளையும் உருவாக்குவதற்காக, 35 குடிசைப்பகுதிகளில் இருக்கும் 14 ஆயிரத்து 257 வீடுகள் மற்றும் அனுமதி பெறாத வணிக வளாகங்கள் ஆகியவை அக்கறப்படும் என தெரிய வருகிறது.
சென்னை மாநகராட்சியோடு சென்னை குடிநீர் மறுசீரமைப்பு இயக்கம் மற்றும் கூவம் சூழல் மறுசீரமைப்பு அமைப்பு இணைந்து மேற்கொண்ட சந்திப்பில் சில கோரிக்கைகள் வைக்கப்பட்டன. கூவத்தையொட்டி வசிக்கும் மக்களை பெரும்பாக்கம் மற்றும் எழில்நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மாற்றுவதற்கு முன்னர், அவர்களுக்கு பயோமெட்ரிக் ஆய்வு மேற்கொள்ளும் திட்டத்தைக் கொண்டுவர வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.
23.9 கிலோ மீட்டர் தூரம் கொண்ட கூவம் நதியின் முகத்துவாரத்தில் தொடங்கி, மதுரவாயல் புறவழிச்சாலை வரையிலும் மாநகராட்சி, நீர்வள ஆதாரத்துறை மற்றும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் உதவியோடு, பயோமெட்ரிக் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில், அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் சூழல் மறுசீரமைப்புத் திட்டங்களைப் பற்றி அறிந்திருந்த மூத்த நிபுணர்களால் கூவம் – சூழல் மறுசீரமைப்புத் திட்டம் முன்மொழியப்பட்டது. இதனையடுத்து, முழுமையான திட்ட அறிக்கை தயாரிக்கப்படுவதற்கு முன்னாலேயே, ஆற்றுப் பகுதியோடு கூடிய லேங்க்ஸ் தோட்டச்சாலையின் சில குடிசைப் பகுதிகள் அகற்றப்பட்டன. முந்தைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே, அத்திட்டம் கைவிடப்படும் என அதிமுக குடிசைவாசிகளுக்கு உறுதி அளித்திருந்தது.
தேர்தலில் வெற்றிக்கனியைச் சுவைத்த பின்னர் அதிமுக அரசு, மதுரவாயல் துறைமுக, உயர்த்தப்பட்ட வளாகத் திட்டத்தைக் கிடப்பில் போட்டது. வீடுகளை இழந்தவர்களுக்கான இழப்பீட்டைத் தரவும் தாமதப்படுத்தியது.
குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பின்னர், குடிசைவாசிகளை மீள் குடியேற்றம் செய்யும் பணி திரும்பவும் தொடங்கியிருக்கிறது. மீள் குடியேற்றப் பகுதிகள், குடிசைப்பகுதிகளில் வசிப்பவர்களின் இடங்களைக் காட்டிலும் நீண்ட தொலைவில் இருக்கின்றன. அகற்றப்படும் குடிசைப் பகுதிகளில் பல்லவன் நகரும், நாவலர் நெடுஞ்செழியன் நகரும் அடங்கும் என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval