Sunday, August 9, 2015

எங்க ஊரு அதிரை - சிறப்பு-- 2

அதிரையினை அழகாக்கி
அணியணியாய் நெய்த கவி
அகிலமெல்லாம் பெயரெடுத்த
அதிரைச் சிறப்பை சொல்லும்கவி

அன்பொழுகப் பழகும் மக்கள்
அதிரையெங்கும் நிறைந்திருப்பர்
பண்புகளைக் கற்றுத்தர
பல நல்லோர் காத்திருப்பார்

சென்னைமுதல் சீமைவரை
செவிகேட்கும் அதிரையர் குரல்
செந்தமிழை அழகாய்ப் பேசி
செல்லுமிடம் சிறப்பு சேர்ப்பர்

மதுரையிலே கிடைக்காதது
அதிரையிலே கிடைத்திடுமே
மாமரத்து குயிலினோசை
மாறிமாறி ஒலித்திடுமே

ஆலிம்களும் உலமாக்களும்
ஆளும் ஊரு நம்ம ஊரு
ஆதிமுதல் இன்றுவரை
அறிவாளிகள் நிறைந்த ஊரு

சாதி மத பேதமின்றி
சமத்துவத்தை விரும்பும் ஊரு
நாதியில்லா அனாதைகளும்
நம்பிவந்து வாழும் ஊரு

பஞ்சம் பிழைக்க ஏத்த ஊரு
பாரிலோன்று இருக்குபாரு
பாமரனையும் பணக்காரனாக்கும்
பலதொழிலும் செய்யும் ஊரு

பள்ளி கல்வி பாடசாலை
பலதும் உண்டு அதிரையூரில்
பாங்குசப்தம் கேட்டு இங்கு
பாய்ந்து செல்லும் மக்கள்பாரு

கடலோரம் அமைந்த ஊராம்
கடல்மீனும் கிடைத்திடுமாம்
காசுபணம் பஞ்சமில்லா
கடும் உழைப்பில் உயர்ந்த ஊராம்

ஏரி குளம் நிறைந்த ஊரு
ஏகத்துக்கும் பசுமை பாரு
ஏகத்துவக் கொள்கையிலே
ஏற்றம்கண்டது எங்களூரு

உழைக்கும் மக்கள் நிறைந்த ஊரு
உண்மையாளர் வாழும் ஊரு
தானதர்மம் வழங்கும் ஊரு
தரணி போற்றும் நல்ல ஊரு

வந்தாரை வாழவைத்து
வனப்பாக்கி அழகு பார்க்கும்
வறியோரை வாரியணைத்து
வயித்துப்பசி போக்கச் செய்யும்

ஆங்காங்கே உள்ளகுறை
அதன் ஏக்கம் புரிந்ததப்பா
அவையனைத்தும் நிறைவாக்க
அனைவர் கையும் சேரனுமப்பா

எக்குறைகள் இருந்தபோதும்
ஏற்றமானது நம் அதிரை
ஏட்டினிலே எழுதவேண்டும்
எட்டுத்திசையும் புகழ்மணக்க

அடுக்கடுக்காய் குறையிருந்தும்
அதன் நிறைவு பல உண்டு
மார்தட்டிச் சொல்ல நாமும்
மாநகர்போல் வாழும் ஊரு
அதிரை மெய்சா

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval