Sunday, August 23, 2015

பிறந்த குழந்தைக்கு பாலூட்ட மட்டுமல்ல.., இறந்த குழந்தைக்கு உயிரூட்டவும் ஒரு தாயால்தான் முடியும்

maxresdefault
நவீனகால கண்டுபிடிப்புகளால் மருத்துவத் துறையில் சில ‘மிராக்கில்’ (அற்புதம்) ஏற்படுவதாக டாக்டர்கள் குறிப்பிடுவதுண்டு. ஆனால், டாக்டர்களே பிணம் என்று கைவிட்ட குழந்தையையும் உயிர் பிழைக்க வைக்கக்கூடிய அற்புதம் ஒரு பெண்ணின் பொறுமை மற்றும் தாயன்பால்தான் நிகழ முடியும் என்பதை நிரூபித்த ஒரு சம்பவத்தை மீண்டும் நினைவுப்படுத்திப் பார்ப்போம்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் கடந்த 2010-ம் ஆண்டு பிரசவத்திற்காக கேட் ஓக் டேவிட் என்ற பெண்மனி சிட்னி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கருத்தரித்து 27 வாரங்களே ஆனநிலையில். அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. குறைந்த எடையில் பிறந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரு குழந்தைகளையும் காக்க டாக்டர்கள் பெருமுயற்சி செய்தனர்.
ஆனால்.., பெண் குழந்தை உயிர்பிழைத்தது. கடைசிவரை விடாமுயற்சியுடன் சுமார் அரைமணி நேரம் டாக்டர்கள் போராடியும் ஆண் குழந்தையைக் காப்பாற்ற முடியவில்லை. அந்த குழந்தை இறந்துவிட்டதாக தாயிடம் தெரிவிக்கப்பட்டது.
அதைத் தாங்கிக் கொள்ள முடியாத கேட் ஓக், இறந்த குழந்தையை தூக்கி வரும்படி கண்ணீர் மல்கக் கூறினார். அதன் அழகைக் கண்டதும் தனது மார்போடு கட்டியணைத்தபடி, கதறிஅழ ஆரம்பித்து விட்டார்.
தொடர்ந்து இரண்டு மணிநேரம் தனது உடலுடன் சேர்த்து அணைத்துக் கொண்டு அழுதவாறே இருந்தார். அப்போது.., குழந்தை மெதுவாகமூச்சு விடுவதை அவர் உணர்ந்தார். உடன்இருந்த அவரது கணவர் மருத்துவர்களை அழைத்து குழந்தை மூச்சுவிட ஆரம்பித்ததைக் கூறினார்.
அவநம்பிக்கையுடன் கேட் ஓக் படுத்திருந்த கட்டிலின் அருகேவந்த ஒரு டாக்டர், அந்த ஆண் குழந்தையின் மார்பில் ஸ்டெத்தாஸ்கோப்பை வைத்துப் பார்த்துவிட்டு, ‘ஐ காண்ட் பிலிவ் திஸ்’ (என்னால் நம்பவே முடியவில்லை) என்றபடி பரசவப்பட்டுப் போனார். உடனடியாக பிற மருத்துவர்களை உற்சாகத்துடன் அழைத்தார்.
அந்த குழந்தைக்கு அவசரச் சிகிச்சை அளித்த டாக்டர்கள், அதை இன்குபேட்டரில் வைத்து, சகஜ நிலைக்குக்கொண்டு வந்தனர். சிறிது நேரத்தில் கண் விழித்த குழந்தை, தன்னைப் பார்த்து.. ஆனந்தக்கண்ணீர் விட்ட தாயின் விரல்களை பிடித்துக் கொண்டது.
பிறந்த குழந்தைக்கு பாலூட்ட மட்டுமல்ல.., இறந்த குழந்தைக்கு உயிரூட்டவும் ஒரு தாயால் முடியும். அதுதான் பொறுமை கலந்த தாயன்பின் தனி மகத்துவம் – தன்னிகரில்லாத அற்புதம் என்பது சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற இந்த சம்பவத்தின் மூலம் மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
‘என் குழந்தை சாகவில்லை என்ற உள்ளுணர்வின் உந்துததால் அவன் இறந்துப் போனதாக டாக்டர்கள் கூறியதை ஏற்றுக்கொள்ள என்னால் இயலவில்லை. எங்கள் நாட்டில் தாய் கங்காரூ குட்டிகளை எவ்வாறு பாதுகாக்கும்? என்ற கதைகளை நான் சிறு வயதில் கேட்டிருக்கிறேன்.
கங்காரூ குட்டி பிறந்தவுடன் தாயின் கதகதப்போ, வாசமோ, இதயத்துடிப்பின் ஓசையோ கேட்கவில்லை என்றால் அது துடிதுடித்து உயிரிழந்துவிடும் என கூறப்படுவதுண்டு. ஒரு தாய் கங்காரூ எப்படி தனது குட்டியை வயிற்றின் அடிப்பகுதியில் உள்ள பைக்குள் அரவணைத்து வைத்திருந்து கதகதப்பு ஏற்றுமோ..? அதேப்போல் எனது சருமத்தின் கதகதப்பில் பிரிந்துப்போன எனது குழந்தையின் உயிர் மீண்டும் உடலில் குடியேறும் என நான் முழுமையாக நம்பினேன்.
எனது நம்பிக்கை வீண் போகவில்லை. என் மகன் கண்விழித்து, வளர்ந்து தற்போது ஐந்து வயது சிறுவனாக அடிக்கும் லூட்டியை தாங்க முடியவில்லை’ என இச்சமபவம் நடந்து சுமார் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு தற்போது தனது மலரும் நினைவுகளை ‘யூடியூப்’ மூலம் வீடியோவாக பகிர்ந்துள்ள கேட் ஓக் டேவிட்டின் பேட்டியை இதுவரை பல கோடி பேர் பார்த்துள்ளனர்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval