Thursday, August 13, 2015

ஒரே நாளில் 20,000 வருவாய் ஈட்டும் ஹோட்டல்: அசத்தும் கோவை சிறைக்கைதிகள்!

maduraihotel_1காந்திபுரம் பேருந்து நிலையம் எதிரே உள்ள மத்திய சிறை வளாகத்தில் உள்ளது ‘ஃப்ரீடம் ஹோட்டல்’. இதில் வேலை செய்பவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறைக்கைதிகளாக இருந்து நன்னடத்தைச் சான்றிதழ் பெற்ற பத்து பேர். அதில் மூன்று பேர் சமையற்காரர்களாகவும், ஏழு பேர் உணவு பரிமாறுபவர்களாகவும் செயல்படுகிறார்கள்.
காலை ஆறு மணிக்கு வேலையை துவங்குகிறார்கள். 7.45 மணிக்கு சூடாக இட்லி, தோசை, பூரி, பொங்கல் ஆகியவை வாடிக்கையாளர்களுக்கு தயாராக இருக்கிறது. மதியம் நான்கு வகையான வெரைட்டி ரைஸ்களோடு சப்பாத்தி பரோட்டாவும் தயாராகிறது. மாலை ஆறு மணிக்கு வியாபாரம் நிறைவடைகிறது. எட்டு மணிக்கு பணியிடத்தை சுத்தம் செய்துவிட்டு தத்தமது அறை நோக்கி செல்கிறார்கள். மேற்கண்ட நேர அட்டவணை பத்து சிறைக்கைதிகளின் தினசரி வாழ்க்கை.
பதினோரு ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் பி.ராஜ் (59) என்பவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தலைமை சமையற்காரராக இருக்கிறார். பெரும்பாலான வாடிக்கையாளர்கள் நட்புடன் பழகுவதாகவும் கைதி தானே என்கிற அலட்சியமோ மிரட்சியோ காட்டுவதில்லை என்றும் குறிப்பிடுகிறார் ராஜ்.
தினமும் 300 முதல் 350 வாடிக்கையாளர்கள் வரை வருகிறார்கள். கல்லூரி மாணவர்கள், வாகன ஓட்டுநர்கள், அருகாமையிலுள்ள வணிக வளாகங்களில் வேலை செய்யும் ஊழியர்களில் பெரும்பாலானோர் இவர்களுடைய வாடிக்கையாளர்கள். ஒரு நாளில் 20 ஆயிரம் வரை வருமானம் ஈட்டுகிறது ’ஃப்ரீடம் ஹோட்டல்’. இவர்களுக்கு மாதத்திற்கு நான்கு பார்ட்டி ஆர்டர்களாவது வருகிறது. சிறை ஊழியர்களும் அதிகாரிகளும் இவர்களுக்கு பார்ட்டி ஆர்டர்களை வழங்குகிறார்கள். எல்லா நாட்களும் காலை 7.45 மணியிலிருந்து மாலை 6 மணி வரை இயங்குகிறது.
ஃப்ரீடம் ஹோட்டலுக்கு அருகிலேயே சிறிய அளவில் சலூன் ஒன்றும் இயங்குகிறது. அங்கு இரு கைதிகள் வேலை செய்கிறார்கள். அதில் ஒருவரான வெள்ளியங்கிரியிடம் பேசிய போது, பதினோரு வருடங்களாக சிறையில் இருக்கும் அவருக்கு இந்த பணி சற்று ஆசுவாசம் அளிப்பதாகக் கூறினார்.
ப்ரிஸன் பஜார்: “இவ்வாறு வெற்றிகரமாக இயங்கிவரும் உணவகத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் விதமாக 100 பேர் அமர்ந்து உணவருந்தக்கூடிய வகையிலும் சப்பாத்தி மேக்கர், ஓவன், பல்வெரைஸர் போன்ற நவீன சாதனங்களைக் கொண்ட பெரிய உணவகமாக சீரமைக்கப் போகிறார்கள். சைவ, அசைவ உணவகங்கள் மட்டுமின்றி பேக்கரி, தையல் நிலையம், பார்லர், வாட்டர் சர்வீஸ் கடை போன்ற பல கடைகள் கொண்ட காம்ப்ளக்ஸ் கட்டும் பணி தொடங்கி இருக்கிறது. இதற்கு ‘ப்ரிஸன் பஜார்’ என்று பெயரிட்டிருக்கிறார்கள். ”இந்த சீரமைப்புப் பணிகளையும் சிறைக்கைதிகளே செய்வார்கள். இந்த சீரமைப்பினால் மேலும் 60 கைதிகளுக்கு வேலை கிடைக்கும். இதற்கான கைதிகளை சிறை அதிகாரிகளே தேர்வு செய்வர்.
இதன்மூலம் பொதுமக்களும் சிறைக்கைதிகளும் நெருங்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இது கைதிகளைப் பற்றிய எதிர்மறையான பிம்பத்தை அழிக்கும். இவர்களில் பெரும்பாலானவர்கள் சந்தர்ப்ப சூழ்நிலையால் தவறிழைத்தவர்களே’ என்று சமூக அக்கறை காட்டினார் சிறை கண்காணிப்பாளர்.
சிறைக்கைதிகளைப் பற்றிய எண்ணத்தை மாற்றியமைக்கப் போகும் இவர்கள் பணி சிறக்க வாழ்த்துகளும், பாராட்டுகளும்!

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval