Saturday, August 1, 2015

முதியோர் விடுதியில் பெற்றோரை கொண்டு போய்த் தள்ளிவிடும் இளைஞர்கள் சிந்திப்பார்களா?


ஓர் இளைஞன் மிகுந்த கோபத்துடன்
அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்தான்.

“இறைத்தூதர் அவர்களே, 
அந்தக் ‘கிழவனின்’ தொல்லை தாங்க முடியவில்லை.
ரொம்பவும் படுத்துகிறார்” என்று
உதடுகள் துடிதுடிக்க முறையிட்டான்.

அண்ணல் நபிகளார்(ஸல்) அமைதியாக,
“நீ யாரைப் பற்றிச் சொல்கிறாய்?” என்று விசாரித்தார்,
.

“வேறு யார்? என் தந்தைதான்.
நான் சம்பாதித்து வரும் பொருளை எல்லாம்
அவர் எடுத்துக் கொள்கிறார். அடிக்கடிப் பணம் கேட்கிறார்.
என் சட்டைப் பையில் காசு இருந்தால்
ஒரு வார்த்தைக் கூடச் சொல்லாமல் எடுத்துக்கொள்கிறார்.”

இறைத்தூதர் இளைஞனின் தந்தையை
அழைத்துவர ஆள் அனுப்பினார்.

சற்றுநேரத்தில் வயதான மனிதர் ஒருவர்
தள்ளாடித் தள்ளாடி வந்தார்.
அவரால் சரியாக நடக்கக்கூட முடியவில்லை.
முகத்தில் வரிவரியாய் முதுமையின் முத்திரைகள்..!
பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தார்.

அண்ணல் நபிகளார் அந்த முதியவரை அமரச் சொன்னார்.
பிறகு கேட்டார்: “பெரியவரே, உங்களைப் பற்றி
உங்கள் மகன் சொன்னதெல்லாம் உண்மைதானா?”

இடுங்கிப் போன கண்களால் இறைத்தூதரை ஏறிட்டு நோக்கிய
அந்தப் பெரியவர் அமைதியான குரலில்,
ஆனால் உறுதியாகப் பேசத் தொடங்கினார்.

“நாயகம் அவர்களே, இவன் என் மகன்.
இவனை வளர்த்து ஆளாக்க
நான் பட்ட சிரமங்கள் ஒன்றா இரண்டா..!
இவன் நிம்மதியாகத் தூங்க வேண்டும் என்பதற்காக
நான் தூங்காமல் விழித்த இரவுகள் எத்தனை..! எத்தனை..!
இவனை என் மார்பிலும் தோளிலும் போட்டு
எப்படியெல்லாம் செல்லமாக வளர்த்தேன்.
இவன் பலவீனமாக இருந்தபோது
நான் பலசாலியாக இருந்தேன்.
இவன் ஒன்றுமில்லாதவனாய் இருந்தபோது
நான் பணக்காரனாய் இருந்தேன்.
அப்பொழுதெல்லாம் என் பொருள்களை
இவன் எடுத்துப் பயன்படுத்துவதை நான் தடுக்கவில்லை.
இவன் கேட்காமலேயே இவனுக்கு எவ்வளவோ செய்தேன்.
இன்று நான் பலவீனன் ஆகிவிட்டேன்.
இவன் பலசாலியாக இருக்கிறான்.
நான் ஒன்றுமில்லாதவனாய் ஆகிவிட்டேன்.
இவன் பணக்காரன் ஆகிவிட்டான்.
ஆனாலும் இவன் எனக்கு எதையும் தருவதில்லை.
நானாக எடுத்துக் கொண்டாலும் தடுக்கிறான்.
இது நியாயமா இறைத்தூதர் அவர்களே?”

முதியவர் பேசப் பேச அண்ணலாரின் கண்களில் இருந்து
கண்ணீர் வழிந்தோடியது.

இறைத்தூதர் அந்த இளைஞனை அழைத்து,
“நீயும் உன்னுடைய சம்பாத்தியம், பொருள்கள் அனைத்தும்
உன் தந்தைக்குரியவையே” என்று
அவனை எச்சரித்து அனுப்பினார்கள்.

பெற்று வளர்த்து ஆளாக்கிய தாய் தந்தையரை
கொஞ்சங் கூட மனதில் ஈரம் இல்லாமல்
முதியோர் விடுதியில் கொண்டு போய்த்
தள்ளிவிடும் இளைஞர்கள் சிந்திப்பார்களா?
-சிராஜுல்ஹஸன்
முகநூல் 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval