Monday, August 31, 2015

கொடைக்கானல் ஏரியில் ஓட்டை விழுந்த படகுகள் இயக்கம்

kodaikanal_2531312f
கொடைக்கானல் ஏரியில் துளை விழுந்த, முறையாக பராமரிக்கப் படாத படகுகள் இயக்கப்படு வதால், சுற்றுலாப் பயணிகள் ஆபத்தான சூழ்நிலையில் படகு சவாரி செய்யும் அவலம் உள்ளது.
கொடைக்கானல் சுற்றுலா வரும் சுற்றுலாப் பயணிகள், பிரையண்ட் பூங்கா, பசுமைப் பள்ளத்தாக்கு, பில்லர் ராக், பைன் மரக்காடுகள் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை கண்டு களித்துவிட்டு, கடைசியில் நகரின் மத்தியில் உள்ள நட்சத்திர வடிவ ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்கின்றனர்.
கொடைக்கானல் ஏரியில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், நகராட்சி மற்றும் இரு தனியார் போட் கிளப்கள் சார்பில் சுற்றுலாப் பயணிகள் சவாரி செய்ய 5 படகு துறைகள் செயல்படு கின்றன. இந்த படகு துறைகளில் 2 பேர், 4 பேர் மற்றும் 6 பேர் வரை அமர்ந்து செல்லக்கூடிய 300-க்கும் மேற்பட்ட படகுகள் இயக்கப் படுகின்றன. ஒரு நாளைக்கு சீசன் நேரத்தில் 3 ஆயிரம் பேரும், வார விடுமுறை நாட்களில் ஆயிரம் முதல் 2 ஆயிரம் பேரும், மற்ற நாட்களில் 600 பேரும் படகு சவாரி செய்கின்றனர்.
ஏரியில் படகு சவாரி செல்வது சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த பொழுதுபோக்கு என்பதால், ஆண்டு முழுவதும் ஏரியில் போதுமான தண்ணீர் இருக்கும்படி நகராட்சி மற்றும் சுற்றுலாத்துறை நடவடிக்கை மேற்கொள்கிறது. தண்ணீர் இன்றி வறண்டால் நகராட்சி மூலம் லாரிகளில் கொண்டு வந்து ஏரியில் தண்ணீர் நிரப்பப்படுகிறது.
இந்நிலையில், கொடைக்கானல் ஏரியில் இயக்கப்படும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக படகு கள், துளை விழுந்த நிலையில் இயக்கப்படுவதும், சுற்றுலாப் பயணிகள் அந்த படகுகளில் ஆபத்தான நிலையில் சவாரி செல்வதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஏரியில் படகு கவிழ்ந்தால் உயிர் தப்பிக்க வழங்கப்படும் ‘லைப் ஜாக்கெட்கள்’ கிழிந்து பராமரிப்பு இல்லாமல் அலங் கோலமாக உள்ளதால் அவற்றை சுற்றுலாப் பயணிகள் அணி வதில்லை. சுற்றுலாப் பயணி களிடம் ‘லைப் ஜாக்கெட்’ அணிய சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த வும், புதிய ‘லைப் ஜாக்கெட்’ வாங்க வும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் கூறப்படுகிறது.
இதுகுறித்து தர்மபுரி தனியார் கல்லூரி மாணவிகளை சுற்றுலா வுக்கு அழைத்து வந்த உதவி பேராசிரியர் விஜயகுமார் ‘தி இந்து’ விடம் கூறியதாவது: கொடைக் கானல் ஏரியில் இயக்கப்படும் ‘ரோயிங் போட்’ நகராட்சி துடுப்பு படகுகளில் லாப நோக்கில் அளவுக்கு அதிகமாக சுற்றுலாப் பயணிகளை ஏற்றுகின்றனர். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக படகுகள் பெரும்பாலும் பராமரிப்பின்றி துளை விழுந்து பழுதடைந்துள்ளன.
குழந்தைகள், மாணவிகள் படகு சவாரி செல்ல ஆர்வப்படுதால் பெற்றோர், ஆசிரியர்கள் வேறு வழியில்லாமல் அவர்களை பராமரிப்பில்லாத படகுகளில் சவாரிக்கு அழைத்து செல்கின்றனர். ஏரியின் மத்தியில் படகு ஒருபுறம் சாய்ந்தாலே படகில் விழுந்த துளை வழியாக தண்ணீர் உள்ளே சென்று படகு கவிழும் அபாயம் உள்ளது. தற்போது அதிர்ஷ்டவசமாக விபத்து எதுவும் ஏற்படாததால், விபத்து பற்றிய கவலையின்றி பழுதடைந்த படகுகளை இயக்குகின்றனர்.
அசம்பாவிதம் நிகழும் முன், படகுகளின் தரத்தை மேம்படுத்தி, புதிய ‘லைப் ஜாக்கெட்கள்’ வழங்குவதோடு, படகுகளில் செல்வோரின் எண்ணிக்கையைக் கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து கொடைக்கானல் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக படகு துறை மேலாளர் கருப்பையாவிடம் கேட்டபோது, “துளை விழுந்த படகுகள், தேவையான ‘லைப் ஜாக்கெட்களை’ கணக்கெடுத்து உயரதிகாரிகள் பார்வைக்கு அனுப்பியுள்ளேன். பழுதடைந்த படகுகளை பராமரிக்கவும், புதிய படகுகள், ‘லைப் ஜாக்கெட்கள்’ வாங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval