Sunday, August 23, 2015

ஆந்திரா லாரி – ரெயில் மோதல் 6 பேர் பலி

nandedஆந்திர மாநிலம், அனந்தப்பூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை லாரி மீது ரெயில் மோதிய விபத்தில் கர்நாடக மாநில எம்.எல்.ஏ. உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள பெனுகொண்டா மண்டலத்தில் இருக்கும் சாலை வழியாக இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் கிரானைட் கற்கள் ஏற்றப்பட்ட ஒரு லாரி வந்துகொண்டிருந்தது. மடகாசிரா என்ற இடத்தில் உள்ள ரெயில்வே கேட் அருகே வந்தபோது, அப்பகுதி வழியாக ரெயில் கடப்பதற்காக அந்த கேட் மூடப்பட்டிருந்தது.
கேட்டின் அருகே லாரியை நிறுத்த டிரைவர் முயன்றபோது, திடீரென பிரேக் பிடிக்காததால் ரெயில்வே கேட் மீது மோதிய லாரி, நேராக தண்டவாளத்தின் குறுக்கே சென்றது. அப்போது, அதே தண்டவாளத்தின் மீது வேகமாக வந்துகொண்டிருந்த பெங்களூர்- நான்டெட் எக்ஸ்பிரஸ் ரெயில், அந்த லாரியின் மீது பயங்கரமாக மோதியது.
மோதிய வேகத்தில் அந்த ரெயிலின் நான்கு பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி, கீழே கவிழ்ந்தன. பலத்த சப்தம் மற்றும் அதிர்வினால் ரெயிலின் உள்ளே உறங்கிக் கொண்டிருந்த பயணிகள் தூக்க கலக்கத்தில் விழித்தெழுந்து கூச்சலிட்டு, அலறினார்கள். கவிழ்ந்த ரெயில் பெட்டியில் இருந்து வெளியே வர முடியாமல் அவர்கள் தவித்தனர்.
இந்த விபத்தில் கர்நாடக மாநிலம், தேவதுர்க் தொகுதி எம்.எல்.ஏ.வான வெங்கடேஷ் நாயக், கிரானைட் கற்களை ஏற்றிவந்த லாரியின் டிரைவர், கிளீனர் மற்றும் 3 ரெயில் பயணிகள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விபத்து பற்றிய தகவல் அறிந்து விரைந்துவந்த மீட்புப் படையினர் கவிழ்ந்த பெட்டிகளில் சிக்கி உயிருக்குப் போராடியவர்களை மீட்டு வெளியே எடுத்தனர்.
படுகாயமடைந்த 8 பயணிகள் அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தால் அப்பகுதி வழியாக பெங்களூர் – குண்ட்டக்கல் மார்க்கத்தில் செல்லும் ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த விபத்து தொடர்பான தகவல்களை ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு உடனுக்குடன் கேட்டறிந்து வருவதாகவும், இதில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களும் உரிய இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்திருப்பதாகவும் ரெயில்வே துறையின் செய்தித் தொடர்பாளர் அனில் சக்சேனா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval