Sunday, August 23, 2015

ஹெல்மட் பிரச்னைக்கு புதிய தீர்வு : ஜனாதிபதி தட்டிக்கொடுத்த தமிழக மாணவிகள்

laila 550 111தமிழக மக்களுக்கு தலைவலியாய் இப்போது இருப்பது ஹெல்மட் பிரச்னை.
ஹெல்மட் உயிர்காக்கும் என எத்தனை ஆயிரம் முறை சொன்னாலும், பல்வேறு காரணங்களை கூறி வாகன ஓட்டிகள் பலர் அதனை தட்டிக்கழிக்கிறார்கள். இந்த நேரத்தில் ஹெல்மெட் போடாமல் வண்டியையே இயக்க முடியாதபடி புதிய சென்சார் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து இருக்கிறார்கள் தமிழகத்தை சேர்ந்த 3 கல்லுாரி மாணவிகள்
சமீபத்தில் டெல்லியில் National Innovation Foundation நடத்திய கண்காட்சியில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் தங்கள் கண்டுபிடிப்பை விளக்கி காண்பித்து, அதற்கும் பரிசும் பெற்றிருக்கின்றனர் இவர்கள்.
தமிழகத்து பெண்களின் இந்த கண்டுபிடிப்பை தேசிய அளவில் சிறந்ததாக அறிவித்ததோடு, அதற்கு பரிசும், பாராட்டும் அறிவித்ததோடு மட்டுமின்றி அவர்கள் கண்டுபிடித்த அறிவியல் உபகரணத்திற்கு பேடன்ட் உரிமையையும் பெற்றுத் தந்திருக்கிறது மத்திய அரசு.
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தைச் சேர்ந்த டி.லைலா பானு, எஸ்.எம்.ஆர்த்தி, எஸ்.வினோதா, ஆகியோர்தான் இந்த சாதனை மாணவிகள். தங்கள் கண்டுபிடிப்பால் தமிழ் மண்ணின் பெருமையை டெல்லியில் நிலை நாட்டிய மாணவிகளுக்கு தமிழகம் முழுவதிலிருந்தும் பாராட்டு குவிந்துகொண்டிருக்கிறது இப்போது.
“வளர்ந்து வரும் நம் இந்தியாவில், மக்கள் தொகையும் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போகிறது. அதே நேரம், சாலை விபத்துகளால் நடக்கும் உயிர் இழப்புகளும் அதிகரிக்கின்றன. இதனால் மனித வளம் தேவை இல்லாமால் குறைந்து நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாக விளங்குகிறது.
ஹெல்மெட்டின் முக்கியத்துவத்தைக் கூறும் விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகள் எவ்வளவு நடத்தினாலும், மக்கள் எதற்கும் செவிகொடுப்பது இல்லை. இதற்கு தீர்வாகத்தான் எங்கள் கண்டுபிடிப்பு உருவானது” என்கிறார்கள் ஒரே குரலில் இந்த பெண்கள்.
”விபத்துகள் நடக்க முக்கியக் காரணம், பாதுகாப்பற்ற பயணம்தான். பல விபத்துகளில் சம்பவ இடத்திலேயே இறந்துவிடுகின்றனர். அதற்குக் காரணம், ஹெல்மெட் அணியாததே. ஹெல்மெட் போட்டு இருந்தால் காயங்களுடன் உயிர்பிழைத்து இருப்பார்கள். சாலை விபத்தில் உயிரிழந்த எங்கள் ஆசிரியர், எங்கள் உறவினர் என நிறையப் பேருக்காக நாங்கள் வருத்தப்பட்டு இருக்கிறோம்” என்கிறார் லைலா பானு.
“ஒருமுறை, ஹோட்டலில் சாப்பிடச் சென்றபோது, அங்கு கை கழுவுவதற்காக அமைக்கப்பட்டு இருந்த அதிநவீன சென்சார் கருவியைக் கவனித்தேன். அப்போது ‘க்ளிக்’ ஆனதுதான், இந்த ஹெல்மெட் போடாமல் வண்டி இயங்காது என்ற ஐடியா” என்கிறார் வினோதா.
”அகமதாபாத்தை சேர்ந்த ‘நேஷனல் இன்னோவேஷன் ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பு, எதிர்கால இந்தியா வுக்குப் பயன்படும் பல ஐடியாக்களை கேட்டிருந்தனர். அப்போது நன்னிலம் அரசு பெண்கள் மேல்பள்ளி மாணவிகளான நாங்கள், அந்த குழுவினரிடம் எங்கள் யோசனையை எழுத்து வடிவமாக கொடுத்தோம். இந்தியா முழுவதிலிமிருந்து 12,800 பள்ளிகளில் கிடைத்த 8,000 ஐடியாக்களில் 21 ஐடியாக்கள் தேர்வு செய்யப்பட்டன.
இதில் 32 மாணவர்களை அகமதாபாத், ஜோத்பூரில் நடந்த விழாவுக்கு அழைத்து இருந்தார்கள். தமிழ் நாட்டில் இருந்து 11 பேர் தேர்வாகி இருந்தோம். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் எங்களுக்கு விருது வழங்கினார். இப்போது கல்லுாரியில் படிக்கும் நாங்கள் இந்த கண்டுபிடிப்பை மேலும் செழுமைப்படுத்தி இருக்கிறோம்.” என்கிற வினோதா குரலில் பெருமிதம் மிளிர்கிறது.
“சீக்கிரமாகவே ரெடி டூ மார்க்கெட் கொண்டு வந்துவிடுவோம். அதற்குத்தான் நாங்க நிறைய முயற்சிகள் எடுத்துக்கொண்டு வர்றோம். அகமதாபாத் விழாவோடு எங்கள் பங்களிப்பு முடியவில்லை, அதற்கும் மேல் டெக்னாலஜி இம்ப்ரூவ்மென்ட் கொடுத்ததால் திரும்பவும் இப்போது டெல்லியில் நடந்த தேசிய அளவிலான 8 வது கிராஸ் ரூட்ஸ் அறிவியல் கண்டுபிடிப்புகளில் இடம் பெற முடிந்தது.
மீண்டும் நாங்கள் சென்றுவர அரசாங்கம் ஏற்பாடு செய்தது. இந்த விழாவில் ஜனாதிபதி முன் தங்கள் கண்டுபிடிப்பை விளக்க ஒவ்வொருவருக்கும் 1.30 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. அவர் எங்களிடம் உபகரணம் இயங்கும் முறை, தேவையான என்னென்ன உப பொருட்கள், மற்றும் பிற தேவைகள் பற்றியெல்லாம் ஆர்வமாக கேட்டறிந்தது பெருமிதமாக இருந்தது. எங்கள் கண்டுபிடிப்பு இன்வென்ஷன் கேட்டகரியில் பங்கு கொண்டு பரிசை வென்றது ” என்கிறார் ஆர்த்தி உற்சாகமாக.
”எல்லாம் சரி, நீங்கள் கண்டுபிடித்து இருக்கிற இந்த ஹெல்மெட் எப்படி இயங்குது? பைக்கை ஓட்ட முடியாமல் எப்படித் தடுக்குது?” என்றோம்.
”அது இன்னும் கொஞ்ச நாளைக்கு ரகசியம். இப்போ ஐடியா அளவில்தான் பரிசு வாங்கி இருக்கோம். இதை பயன்பாட்டுக்கு கொண்டு வந்ததும் உங்களுக்கே புரியும். இந்த ஹெல்மெட் முழுமை அடைந்து, சந்தைக்கு வரும் போது, இதை மேலும் சராசரி மனிதனும் பயன்படுத்தும் அளவிற்கு கொண்டு செல்வோம் ” என்கிறார்கள் மூவரும் ஒரே குரலில்.
ஆர்த்தி மட்டும் திருச்சியில் உள்ள எம்.ஐ.டி பொறியியல் கல்லூரியில் சிவில் என்ஜினியரிங் படிக்கிறார். வினோதா திருவாரூர் திருவிக அரசு கலை கல்லூரியில் கணிதமும், லைலாபானு திருவாரூரில் உள்ள ராபியம்மாள் மகளிர் கல்லூரியில் பிஎஸ்சி தகவல் தொழில்நுட்பமும் படித்து வருகின்றனர்.
பள்ளி விட்டு பிரிந்தாலும், பிரியாமல் தொடருகிற நட்பில் சாதனை புரிந்து பரிசுகள் விருதுகள் வாங்கி சேர்த்திருக்கும் இவர்கள் அறிவியல் துறையில் மேலும் பல சாதனைகள் நிகழ்த்துவார்கள் என்பதில் சந்தேகமில்லை. அவர்களை நாமும் வாழ்த்துவோம்!

வோம்!

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval