Monday, August 24, 2015

பெண்கள் பாதுகாப்புக்கு சில அறிவுரைகள்…!

fashion-183679_1280
சமீபத்தில் அனைவரையும் உலுக்கிய சம்பவம், சென்னை மருத்துவர் சத்யா கொலை.
கணவர், 2 குழந்தைகள் என்று அழகான குடும்பம். மருத்துவம் படித்த இவர், தொடர்ந்து பட்ட மேற்படிப்பு படிக்க வேண்டும் என்று கணவரையும், குழந்தைகளையும் சொந்த ஊரிலேயே விட்டுவிட்டு, இவர் மட்டும், மருத்துவ பட்டமேற்படிப்பு படிக்கும் தன் தோழியுடன் சென்னையில் தங்கி படித்து வந்திருக்கிறார்.
இவர் தங்கியிருக்கும் அறையின் பக்கத்து அறையில், பிரபல மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றும் திரிபுரா மாநிலத்தைச் சார்ந்த சிரஞ்சித் தேப்நாத் மற்றும் அவரது தம்பி அரிந்தம் தேப்நாத் தங்கியிருக்கிறார்கள்.
பக்கத்து வீட்டில் இருந்த அரிந்தம்தான் சத்யாவை கொலை செய்திருக்கிறார் என்பது அதிர்ச்சியாக இருந்தாலும், அவர் அளித்துள்ள வாக்குமூலம் பல கேள்விகளை எழ வைத்துள்ளது.
கொலை செய்தவர் ஒன்றும் படிக்காத பாமரன் கிடையாது, இருவருக்குமிடையில் ஜென்ம பகையும் கிடையாது. போலீஸ் விசாரணையின் போது கொலையாளி அளித்துள்ள வாக்குமூலத்தில், “என்ஜினியரிங் படித்தும் வேலையில்லாமல் இருந்தேன். அண்ணன் சாப்பாடு மட்டும் வாங்கித் தருவார். ஆனால், செலவுக்கு பணம் தரமாட்டார். பெற்றோர்கள் அனுப்பும் பணமும் நான் ஆடம்பரமாக செலவு செய்ய போதவில்லை. அதனால் எங்கள் அறையின் பக்கத்து அறையில் தங்கியிருக்கும் இரண்டு பெண் மருத்துவர்களிடம் சகஜமாக பேசி, பழகி பணத்தை கறக்கலாம் என்று முடிவு செய்தேன். சம்பவத்தன்று சத்யாவிடம் 2000 ரூபாய் கேட்டேன். அவர் தர மறுத்ததுடன் கண்டபடி திட்டினார். இதனால் கோபமடைந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று, சத்யாவை கொலை செய்தேன்” என்றிருக்கிறார்.
இந்நிகழ்விலிருந்து இனி வரும் நாட்களில் பெண்கள் எப்படி பாதுகாப்புடன் இருக்க வேண்டும்? என்று சொல்கிறார் சீஃப் செக்கியூரிட்டி ஆபீஸர் பவானி ஸ்ரீ.
”பெரும்பாலும் பெண்கள் வீட்டில் தனியாக இருக்கும் போது, நமக்கு மிகவும் தெரிந்த நபர்கள் என்ற அறிமுகம் கொண்டவர்கள் மூலமாகத்தான் ஆபத்து வருகிறது. இதற்கு பெண்கள் விழிப்புடன் இருந்தாலே 90 சதவீத பிரச்னைகளை தவிர்த்துவிடலாம். யாருக்கோ நடக்கிறது என்று அசால்ட்டாக இருக்கிறார்கள். இதே பிரச்னை நாளை நம் வீட்டிலும், நமக்கும் நடக்கலாம் என்ற அச்சம் இருப்பதில்லை. இதுபோன்று அசம்பாவிதம் நடந்தால் அதனை எப்படி நான் எதிர்க்கொள்ள வேண்டும் என்று மனதளவில் நாம் ஒவ்வொருவரும் தயாராக இருந்தாலே தப்பித்துக்கொள்ளலாம்.
நம் வீட்டில் ஒவ்வொரு பொருளும் எங்கேயிருக்கிறது. கதவைத் திறந்து ஒருவர் உள்ளே வருகிறார். அவர் மூலமாக எதாவது ஒரு அசம்பாவிதம் நிகழ்ப்போகிறது என்று உங்களால் யூகிக்க முடிந்தால், கைக்கு எட்டிய தூரத்தில் மிளகாய்த் தூள் வைத்துக் கொள்ளுங்கள். சட்டென்று அவரது கவனத்தை திசை திருப்பி விட்டு நீங்கள் அங்கிருந்து வெளியேறலாம்.
இப்போது அனைவரது வீட்டிலும் மொபைல் போன் இருக்கிறது. அதில், ஸ்பீட் டயல் ஆப்ஸன் மூலமாக பக்கத்து வீட்டினர், கணவர், போலீஸ் ஆகியவர்களுக்கு உடனடியாக கால் செல்லும் வண்ணம் செய்து கொள்ளுங்கள். யார் வந்து கதவைத்தட்டினாலும் உடனே கதவை திறந்து விடாமல், யோசித்து முடிவெடுங்கள். கதவைத் திறக்கும் போது உங்களது போன் உங்கள் கைகளிலேயே இருக்கட்டும். ஆபத்தான சமயங்களில் உங்களால் எதுவுமே செய்ய முடியவில்லை என்றாலும், கையில் இருக்கும் போன் மூலமாக ஸ்பீட் டயல் மூலமாக மற்றவர்களை தொடர்பு கொள்ளலாம்.
ஒருவர் வீட்டிற்குள் வந்தால் எங்கே நிற்பார்?, எங்கே உட்கார வைக்க வேண்டும், நாம் எந்த இடத்தில் நின்று பேச வேண்டும், ஆபத்து என்று வரும்போது கையில் சட்டென்று கிடைக்கும் பொருள் என்ன, அவற்றை வைத்து எப்படி தப்பிக்கலாம் என்று மனதளவில் தயாராக இருத்தல் அவசியம்.
வெளியிடங்களில் நடக்கும் போது மொபைல் போன் பேசிக் கொண்டோ, சாட் செய்து கொண்டோ செல்லாதீர்கள். யாராவது உங்களை தாக்க வந்தால் சட்டென்று உங்களால் ரியாக்ட் செய்ய முடியாது. நமக்கு என்ன நடக்கிறது என்பதை நீங்கள் யூகிக்கவே சிறிது நேரம் ஆகும். அந்த நேரத்தை திருடன் சாதகமாக்கி விடுவான். அதற்கு ஒரு போதும் நீங்கள் இடம் கொடுக்கவே கூடாது.
உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்று ஒவ்வொரு நிமிடமும் விழிப்புடன் இருக்கவேண்டும். வெளியில் செல்லும் போது யாராவது நம்மை நோட்டம் விடுகிறார்களா, தினமும் நம்மை பின்தொடர்ந்து நம் இருப்பிடத்தை தெரிந்து கொள்ள முயற்சிக்கிறார்களா என்பதை கவனிக்க வேண்டும்.
ரோட்டில் நடந்து செல்லும் போது யாரவது ஒரு திருடன் உங்களது நகை, பணத்தை பறிக்க முயற்சி செய்தால், அவன் கைக்கு கிடைக்க கூடாது என்று போராடாமல், நகையை ஒரு திசையில் தூக்கி வீசிவிட்டு, கத்திக் கொண்டே நீங்கள் வேறு திசையில் ஓடுங்கள். ஆபத்து என்று உணர்ந்ததும் கத்துங்கள். நமக்கு அதெல்லாம் நடக்காது என்று அசால்ட்டாக இருக்காமல், நடந்தால் என்ன செய்யவேண்டும்? எப்படி தப்பிக்கலாம்? என்று மனதளவில் தயாராக இருந்தாலே பெரும்பாலான பிரச்னைகளிலிருந்து தப்பித்துவிடலாம்” என்றார்.
மனநல மருத்துவர் சுபா சார்லஸ் கூறும் போது, ”கூட்டமாக, குடும்பமாக இருக்கும் பெண்களை விட தனியாக இருக்கும் பெண்கள் எளிதாக இலக்காகிறாள். அதனால், பெரும்பாலும் தனியாக வீடு எடுத்து தங்கும் பெண்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பது அவசியம்.
இந்த சமுதாயத்தில் நமக்கான அந்தஸ்த்தை நிலைநாட்ட என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைமை வந்துவிட்டது. இன்றைய இளைஞர்கள் சமுதாயத்தில், மொபைல் போன் மிகவும் அத்யாவசியமான பொருளாக மாறிவிட்டது. நமக்கு என்ன தேவை அந்தப் பொருள் நமக்கு அத்தியாவசியமா? அந்த பொருளுக்காக நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதைத் தாண்டி, நம் தேடலுக்கான அளவுகோல் என்ன என்ற ஒரு வரையறை இருக்க வேண்டும்.
பெரும்பாலும் வீட்டில் திருடன் நுழைந்து விட்டான் என்பதை அறிந்தால் அதனை பார்க்காத மாதிரி தவிர்த்துவிடுங்கள். இது போன்று செயல்பட்டால் பொருளோடு முடிந்திருக்கும். குறிப்பாக எதிராளியிடம் சவால் விடுவதோ, அவர்களை கோபமூட்டும் விதமாக பேசுவதையோ தவிர்த்துவிடுங்கள்.
உங்களது பணபலத்தை வெளியில் காட்டிக் கொள்ளாதீர்கள். இப்படிச் செய்வதால் நம்மகிட்ட இல்லை எனும் போது, ஏன் எடுத்துக் கொள்ளக்கூடாது என்கிற எண்ணம் வருகிறது. அப்படிப்பட்ட எண்ணத்திற்கு நாமே ஒரு காரணமாய், அடித்தளமாய் இருக்க வேண்டாம்.
இன்றைய இளம் தலைமுறையினர் பெரும்பாலானோர் தனது படிப்புக்கேற்ற வேலை கிடைக்க வேண்டும் என்றே இருக்கின்றனர். நாலு சுவற்றுக்குள் தனிமையில் இருப்பது மன அழுத்தத்தையே கொடுக்கும். இப்படி இருக்காதீர்கள். படிப்புக்கேற்ற வேலை கிடைக்கும் வரை ஏதாவது ஒரு வேலைக்குச் செல்லுங்கள். கூடுதலாக எதாவது கோர்ஸ் செய்யலாம்” என்றார்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval