Sunday, August 2, 2015

உங்கள் லைசென்சின் செல்வாக்கு என்ன? அடையாளம் காட்டும் இணையதளம்!


identity documents including passport driving license and ID card birth certificate. Image shot 2005. Exact date unknown.உங்கள் வாகன ஓட்டுனர் உரிமம் (லைசன்ஸ்) எந்த அளவுக்கு செல்வாக்கு மிக்கது என்பது உங்களுக்கு தெரியுமா? அதாவது அந்த உரிமம் உள்ளூரில் செல்லுபடி ஆவது தவிர, உலக நாடுகளில் வேறு எங்கெல்லாம் ஏற்றுக்கொள்ளப்படும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
இது சுவாரஸ்யமான கேள்வி மட்டுமல்ல; அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு அந்த நாடுகளில் தங்கள் வாகன ஓட்டுனர் உரிமம் செல்லுபடியாகுமா? என தெரிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும். இந்த விவரங்களை எல்லாம் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும்? கேப்டன்கம்பேர்.காம் இணையதளம் இதை அழகாக செய்கிறது.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த கார் இன்சூரன்ஸ் இணையதளமான இது, உலக நாடுகளின் வாகன உரிமத்தின் செல்வாக்கை தொடர்பான விவரங்களை அளிக்கிறது. இந்த விவரங்களின் அடிப்படையில் பல்வேறு நாடுகளின் வாகன ஓட்டுனர் உரிமம் எந்த அளவுக்கு சக்தி மிக்கது என்பதை பட்டியலிட்டுள்ளது. அதன்படி பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் தான் சக்திவாய்ந்த வாகன ஓட்டுனர் உரிமங்களை பெற்றுள்ளன. இந்நாடுகளின் வாகன ஓட்டுனர் உரிமம் அநேகமாக முக்கிய நாடுகள் எல்லாவற்றிலும் செல்லுபடியாகிறது. இந்த இரு நாடுகளுக்கும் 97 புள்ளிகள் கொடுக்கப்பட்டுள்ளன. 96 புள்ளிகளுடன் ஜெர்மனி 2வது இடத்திலும், ஸ்வீடன் 93 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளது. இந்தியாவின் வாகன ஓட்டுனர் உரிமத்திற்கு 70 புள்ளிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த புள்ளிகள் எப்படி கணக்கிடப்படுகின்றன? ஒரு நாட்டின் வாகன ஓட்டுனர் உரிமம் எந்த எந்த நாடுகளில் எல்லாம், எந்த அளவு செல்லுபடியாகின்றன என்பதன் அடிப்படையில் புள்ளிகள் கொடுக்கப்பட்டு, அவற்றின் கூட்டுத்தொகையே இப்படி செல்வாக்காக சுட்டிக்காட்டப்படுகிறது.
இதன்படி பார்த்தால் இந்திய வாகன ஓட்டுனர் உரிமம் சீனாவில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. அங்கு புதிதாக தான் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், ரஷ்யாவில் ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும். அதன் பிறகு சோதனையில் பங்கேற்காமல் அந்நாட்டு உரிமைத்தை பெற்றுக்கொள்ளலாம். அதேபோல கனடாவில் ஆறு மாதங்களுக்கு செல்லும். அமெரிக்காவில் கொஞ்சம் கட்டுப்பாடுகளுடன் செல்லுபடியாகும். பிரேசில் நாட்டிலும் ஆறு மாதங்களுக்கு ஏற்றுக்கொள்ளப்படும். ஜெர்மனியிலும் இதே போல ஏற்றுக்கொள்ளப்படும்.
இப்படி இந்திய உரிமம் மற்ற நாடுகளில் எந்த அளவுக்கு செல்வாக்கு மிக்கது என்பதை தெரிந்து கொள்ளலாம். இதே போலவே மற்ற நாடுகளின் உரிமங்களின் செல்வாக்கையும் தெரிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு பிரான்ஸ் நாட்டு உரிமத்திற்கு இந்தியா 12 மாத காலம் அனுமதி அளிக்கிறது. உலக வரைபடத்தின் மீது இந்த விவரங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. ஆனால், எல்லா உலக நாடுகள் பற்றிய தகவல்களும் கிடையாது. 36 முக்கிய நாடுகளின் விவரங்கள் மட்டுமே தொகுக்கப்பட்டுள்ளன.
இந்த இணையதளத்தில் கூடுதல் சுவாரஸ்யம் என்ன என்றால் ஒவ்வொரு நாட்டின் போக்குவரத்து தொடர்பான சுவையான தகவல்களும் இடம்பெற்றுள்ளன.
உதாரணத்திற்கு, சீனாவில் பகலில் ஹெட்லைட் எரிந்தால் அபராதம் உண்டு. ஆஸ்திரேலியாவில் காரோட்டி சென்றால் பெட்ரோல் இருப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் அங்கு பெட்ரோல் பங்குககளை பலமைல் இடைவெளியில் தான் பார்க்க முடியும். அதேபோல சராசரியாக ஆஸ்திரேலிய காரோட்டிகள் ஆண்டுக்கு 13,000 கி.மீ பயணம் செய்கின்றனர். இப்படி பல சுவாரஸ்யமான விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இணையதள முகவரி: http://www.captaincompare.com.au/power-driving-licence/
பாஸ்போர்ட்
இதே போலவே உலக நாடுகளின் பாஸ்போர்ட்டின் செல்வாக்கை பாஸ்போர்ட் இண்டெக்ஸ் இணையதளம் அடையாளம் காட்டுகிறது. பாஸ்போர்ட்டின் செல்வாக்கு, குறிப்பிட்ட நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் எந்த நாடுகளுக்கு எல்லாம் விசா இல்லாமல் செல்லலாம் அல்லது அங்கு போய் இறங்கியவுடன் விசா பெற்றுக்கொள்ளலாம் என்பதன் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
இந்த பட்டியலின் படி பிரிட்டனுக்கு தான் முதலிடம். அந்நாட்டு பாஸ்போர்ட் வைத்திருந்தால் உலகில் 147 நாடுகளில் விசா வேண்டாம். அமெரிக்காவும் இதே செல்வாக்கை பெற்றிருக்கிறது. இந்த பட்டியலில் இந்தியாவுக்கு 59வது இடம். 59 நாடுகளில் இந்தியர்கள் விசா பெறாமல் செல்லலாம்.
பாஸ்போர்ட் செல்வாக்கு பட்டியல் தனியே கொடுக்கப்பட்டுள்ளதுடன் உலக வரைபடத்தின் மீது கிளி செய்தும் இந்த விவரங்களை தெரிந்து கொள்ள வழி இருக்கிறது. மேலும் முகப்பு பக்கத்தில் வரிசையாக எல்லா நாடுகளின் பாஸ்போர்ட்டும் இடம்பெற்றுள்ளன. அவற்றிலும் கிளிக் செய்து பார்க்கலாம்.
இணையதள முகவரி: http://www.passportindex.org/index.php

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval