Friday, August 14, 2015

மிரட்ட வரும் பேய் !? [ 6 ] பயமுறுத்தல் தொடர்கிறது..!


அமைதியும்,மரியாதையும் அடுத்தவர்களுக்கு உதவி செய்வதிலும் நல்லுள்ளம் கொண்ட அந்த இளைஞன் கொஞ்சம் பயந்த சுபாவமுடையவன். ஊருக்கு ஒதுங்குப் புறமாக சற்றே வனப் பகுதியை தொடும் தூரத்தில் தனியாக அமைந்திருக்கும் ஒரு தொழிற்ச்சாலையில் ஹெல்ப்பராக வேலை செய்து வருகிறான்.ப்ளஸ் டூ வரை படித்துவிட்டு மேற்ப்படிப்பு படிக்க வசதியில்லாமல் தான் இந்த தொழிற்ச்சாலையில் வேலைக்குச் சேர்ந்தான்.

அன்று தொழிற்ச்சாலையில் வேலை அதிகமாக இருந்ததால்.....தம்பிங்களா நாளக்கி டெலிவரி கொடுக்க வேண்டியது இருக்கு அதுனாலே இன்னக்கி எல்லாரும் ஓவர் டைம் பண்ணிட்டு போங்க என்று மேனேஜர் உத்தரவிட்டார். அனைவரும் சரிங்க ஐயா.. என்று பதிலுரைத்தபடி ஓவர் டைம் வேலைக்கு ஆயத்தமானார்கள்.
பிறகு அவரவருக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் இடத்திற்க்குச் சென்று வேலைகளை மும்முரமாக முடித்து விட்டு பணிக்கு வந்து செல்வதை பதிவு செய்யும் வருகைபதிவு இயந்திரத்தில் விரல் பதித்து விட்டு தொழிற்ச்சாலையிலிருந்து அனைவரும் கிளம்பி வெளியே வந்தனர்.அனைவரும் கிழக்கு, மேற்கு தெற்குயென பல கிராமங்களிலிருந்து பணிக்கு வருபவர்கள். [ மாலை 5 மணிக்கெல்லாம் வேலை முடிந்து வீடு திரும்பி விடுவார்கள். எப்போதாவது ஓவர் டைம் வேலை இருந்தால் பார்த்துக் கொடுத்து விட்டு இரவு 8 மணிக்கெல்லாம் கிளம்பி விடுவார்கள். அன்று வேலை அதிகமாக இருந்ததால் இரவு 12மணியாகி விட்டது.]
டேய் மணி பன்னெண்டாவுதெடா இந்த நடுராத்திரிலெ இருட்லெ எப்புடி போறதாம். எனக்கு பயமா இருக்கு நா இங்கே இந்த கார் செட்லெ படுத்துக் கெடந்துட்டு காலைல தான் போவனும் என்று ஒருத்தன் சொன்னதும் அனைவரும் ஒருமித்து சரிடா அதுவும் நல்ல யோசன தாண்டா என்று மற்ற அனைவரும் சொல்ல.... இவன் மட்டும் அப்போ.. சரி நா சைக்கிள்ளே கிளம்புரேன்டா.. என்று சொன்னான். இவனிடம் ஒரு பழைய சைக்கிள் ஒன்று உள்ளது அதில்தான் வேலைக்கு வந்து போய்க் கொண்டு இருக்கிறான்.
டேய் மணி பன்னெண்டாவுதெடா நீயே ஒரு பயந்தாங்கோலிப்பய. இங்கேருந்து 3 கிலோமீட்டர்க்கு இந்த கருமுருண்ட இருட்லெ எப்புட்றா போவே.? உங்க கிராமத்துக்கு போற ரோடுன்சரி இல்லே காத்து கருப்பு வந்து அடிச்சிடும்டா...சொன்னாக் கேளுடா....என்று அவர்கள் சொல்லியும் சொல்லைக் கேட்காமல்.........
இல்லடா எங்க அம்மா மட்டுந் தனியா இருப்பாங்க..நா வீட்டுக்கு போகலேண்டா அப்புறம் கவலைப்பட்டுகிட்டு தூங்க மாட்டாங்க...நா போறேண்டா..என்று சொன்னபடி சைக்கிளை மிதிக்கத் தொடங்கினான்.
சற்று தூரத்தைக் கடந்த நிலையில்...ஆள் அரவாரமற்ற அந்த கும்மிருட்டில் அமைதியும் சேர்ந்து அந்த இருட்டோடு இருட்டாக தூங்கிக் கொண்டு இருந்தன. மின்னட்டாம் பூச்சுகள் முகத்தருகே வந்து மின்னி மறைந்து கொண்டு போயின. அவ்வப் போது ஒரு இனம் தெரியாத ஒரு குருவியின் கேக்...கேக்..கே..என்ற கேவல் சப்தம் செவிக்குள் வந்து பயமுறுத்தின. அப்போது இவனையும் அறியாது தேகம் கனத்து ரோமங்கள் தடித்து எழுந்து நின்றபடி ஒரு வித அச்சம் மனத்தைக் கவ்வின. பயத்தில் அவன் சைக்கிள் கூட அவன் சொல்கேட்காமல் பாய்ந்து பள்ளம் மேடுபார்க்காமல் வளைந்து ஏறி இறங்கி தன் இஷ்டத்திற்க்குச் சென்றன. பயத்தை போக்க இவன் தனது மொபைல் போனில் உள்ள FM-ரேடியோவை ஆன் செய்தான்.
இப்போது நீங்கள் இந்த நடுஇரவு வேளையில் கேட்டு ரசித்துக் கொண்டிருப்பது MAKKAL FM-வழங்கும் திகில் பட பாடல்கள். திகில் பட பாடலில் அடுத்து வருவது துணிவே துணை எனும் படத்திலிருந்து..............ஆகா...யத்தில்.. தொட்டில் கட்டும்... மங்கை உன்னைக் கண்டா...ன்...குக்கூ... ஆசை தேடி ஏறிக்கொண்டு நேரில் இங்கு வந்தான்...இந்நேரத்தில் வந்தே..னென்று ஏ..தும் என்ன வே...ண்டா...ம்... பெண்ணா..கத்தான் வந்தே...ன் இங்கு கண்ணா உந்தன் எண்ணம் கொண்டு....... என்ற பாட்டைக் கேட்டதும் மேலும் பயம் அதிகமாகி கைகால்கள் அவனையும் அறியாமல் நடுங்கி அக்குளிர்ந்த காற்றிலும் உடல்வியர்த்து கொப்பளிக்க ஆரம்பித்து விட்டன. உடனே FM-ரேடியோவை ஆஃப் செய்து விட்டான்.
அப்படியே பயத்தை மனதில் சுமந்தபடி சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து தனிமையில் இருட்டை இமயமலையை கடப்பது போல கடந்து வந்து கொண்டிருக்கும் போது.....இவன் போய்க் கொண்டிருக்கும் அந்த கரடுமுரடு சாலையில் அந்தரத்தில் தொங்கி ஆடிக்கொண்டும் அரைகுறை வெளிச்சம் கொடுத்துக் கொண்டும் இவனை நோக்கி அந்த வெளிச்சம் வந்து கொண்டிருந்தன. நெருங்கி வர...நெருங்கி வர வெளிச்சம் ஒன்று இரண்டாகி இரண்டு மூன்றாக தெரிந்தன. கூடவே..ஜல்..ஜல்..ஜல்.. என்ற சலங்கை சப்தமும் கேட்க ஆரம்பித்தன.....மீண்டும் அந்த வெளிச்சம் அருகாமையில் நெருங்கிவர..நெருங்கிவர சலங்கை சப்தம் அந்த நிசப்த இரவில் ஜல்..ஜல்...லங்.லங்கென தனியாக அங்காலாய்த்தது. இதைப் பார்த்ததும் செய்வதறியாது திகைத்து மறத்துப்போய் சைக்கிளுடன் மயங்கி விழுந்து விட்டான்.
சிறிது நேரத்திற்க்கெல்லாம் அந்த வெளிச்சங்கள் அவனருகில் வந்து நின்றன. சலங்கை சப்தமும் அடங்கிப்போயின. அடே தம்பீங்களா யாரோ சைக்கிளோட விழுந்து கேடக்குறாங்கடா போய்த் தூக்குங்கடா என்று ஒரு பெரியவர் குரல் கொடுத்தார். இரண்டு வாலிபர்கள் இறங்கி அவனருகில் போய் தூக்கியமர்த்தி முகத்தில் தண்ணீர் தெளித்து அவனை மயக்கத்திலிருந்து விடுபட வைத்தார்கள். அவன் கண் விழித்ததும் அந்த வெளிச்சத்தில் முகத்தைப் பார்த்து விட்டு... அட இது நம்ம ஊரு தம்பிய்யா...பக்கத்து பேக்டரிலெ வேல பாக்குது.என்று பெரியவரிடம் சொன்னார்கள்.என்னதம்பி ஏன் கீழே விழுந்து கெடந்தீங்க எதையும் பாத்து பயந்துட்டீங்களா.? என்று கேட்டதும் நடந்த சம்பவத்தை விபரமாக சொல்லிக் காட்டினான். அது சரி...அப்புடியா தம்பி இது கருதறுப்பு சீசன்ல அதான் நெல்லு மூட்டய வண்டிலே ஏத்திக் கிட்டு டவுனுக்கு போய்க் கிட்டு இருக்கோம். இப்போ கெலம்புனாத்தானெ தம்பி விடிகாலைல போய் சேரலாம். இருட்டுல பள்ளம் மேடு பாத்து போவனும்ல அதான் அரிக்கன் வெளக்க வண்டிக்கடிலெ கட்டித்தொங்க விட்டுடுவோம். மாடுங்க களப்புத் தெரியாம போவனும்ல அதான் பெரிய சலங்கைய கழுத்துல போட்டு வச்சோமென்று கிராமத்துப் பாணியிலேயே விபரத்தைச் சொல்லி விட்டு..... பேய் என்னா பேய் தம்பி நாமதான் பேய்ங்க... நாங்க இத்துன வருசமா இந்த வயக்காட்ல தான் கெடக்கிறோம். இதுவரெ அப்புடி ஒண்ணுன் நாங்க பாக்கல தம்பி.. எல்லாம் மனசுதாங் காரணம் தம்பி. என்று சொல்லி அவனது பயத்தைக் காற்றில் பறக்க வைத்தார் பெரியவர். சரி தம்பி இவங்கள கூட அனுப்பி வீட்ல வந்து விடச்சொல்லவா? என்று பெரியவர் கேட்டார்.. இல்லே அய்யா அதான் எல்லாத்தையும் விபரமா சொல்லிட்டீங்களே ! இப்போ நா போய்டுவேங்கய்யா என்று தைரியமாகச் சொன்னான்.
இப்பதிவின் மூலம் அறியத்தருவது யாதெனில்....
பயந்த சுபாவம் உள்ளவர்கள், மனவலிமை குன்றியவர்கள், இரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதயம் பலகீனமானவர்கள் இருட்டிலோ தனிமையிலோ செல்வதை தவிர்த்துக் கொள்வது நல்லது. காரணம் பயம் மனதைக் கவ்விக் கொள்வதால் மனதில் உதிக்கும் கண்டதையும் கற்பனை செய்து பயந்து அதனால் நோய் வாய்ப்பட்டு மன நோயாளியாக போய் விட நேரிடும்.. அல்லது பயத்தின் உச்சநிலையை அடையும் போது உடலில் இரத்த அழுத்தம் கூடி இதயம் வெடித்து இறக்கவும் நேரிடும்படியாகிறது. அதைத்தான் பேயடித்து விட்டதாக பொய்யான தகவலை பரப்பி விடுவார்கள் 
உஷார் !

அடுத்த பதிவில் சிந்திப்போம்.
பயமுறுத்தல் தொடரும்...
அதிரை மெய்சா


No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval