சென்னை மாநகரத்திற்கு சென்னை என்ற பெயர் எப்படி வந்தது. ஒரு வரலாறே இருக்கிறது. பலர் பலவிதமான கருத்துகளைச் சொல்கிறார்கள். ஆனால், வரலாறு என்ன சொல்கிறது. ஒரு நல்ல சுவையான வரலாற்றுக் கதை. தொடர்ந்து படியுங்கள். சென்னைக்கு ஆரம்ப காலத்தில் மயதராஸ் பட்டினம் என்று பெயர். தொண்டை மண்டலம் எனும் மாவட்டத்தில் இருந்தது. இதன் தலைப்பட்டினமாக காஞ்சிபுரம் விளங்கியது. சோழ பரம்பரையைச் சேர்ந்த தொண்டைமான் இளம் திரையன் எனும் அரசன் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தொண்டை மண்டலத்தை ஆண்டு வந்தான்.
தொண்டைமான் என்ற மூலப்பெயரில் இருந்துதான் தொண்டை மண்டலம் எனும் பெயர் வந்தது. அந்தக் காலக்கட்டத்தில் குரும்பர்கள் எனும் ஒரு வகை பூர்வீகக் குடிமக்கள் அந்தப் பகுதியில் நிறைய பேர் வாழ்ந்திருக்கிறார்கள்.
இளம் திரையனுக்குப் பிறகு இளங்கிள்ளி என்பவர் வந்தார். சில ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவர் ஆட்சி செய்யும் போது வடக்கே ஆந்திராவிலிருந்து சாதவாகன சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த புலுமாயி எனும் அரசன் காஞ்சிபுரத்தின் மேல் படையெடுத்தான். பயங்கரமான போர். சோழர்கள் தோற்றுப் போனார்கள்.
சோழர்களின் முதற்கால ஆட்சி அத்துடன் ஒரு முடிவுக்கு வந்தது. சாதவாகன அரசர்களின் சார்பில் காஞ்சிபுரத்தை நிர்வாகம் செய்ய பாப்பாசுவாமி என்பவர் அனுப்பி வைக்கப்பட்டார். இந்த பாப்பாசுவாமி தான் தமிழ்நாட்டின் முதல் பல்லவர். வரலாற்றில் சற்று ஆழமாகப் போய்ப் பார்ப்போம். சரிதானே சரி! இந்தக் கட்டத்தில்தான் சென்னை நகரத்திற்கு சென்னை எனும் பெயர் கிடைத்தது. எப்படி. வெங்கடபதி நாயக்கர் 1639ல் சென்னையைச் சுற்றியுள்ள நிலத்தை ஆங்கிலேயர்களுக்கு பட்டா எழுதிக் கொடுத்தார். எக்மோர் ஆற்றுக்கும் கூவம் ஆற்றுக்கும் இடையில் இருந்த நிலம்தான் அவர் பட்டா எழுதிக் கொடுத்த நிலம்.
அப்படி அந்த நிலத்தை ஆங்கிலேயரிடம் கொடுக்கும் போது, தன்னுடைய தந்தையாரின் பெயரான சென்னப்பன் நாயக்கர் எனும் பெயரில் அந்த இடம் அழைக்கப்பட வேண்டும் என்று எழுதிக் கொடுத்தார்.
வெங்கடபதி நாயக்கரின் தந்தையார் பெயர் சென்னப்பன் நாயக்கர். இந்தச் சென்னப்பன் எனும் பெயரை வைத்து சென்னப்ப பட்டினம் என்று அந்த இடத்திற்கு பெயர் வந்தது. இந்தச் சென்னப்ப பட்டினம்தான் கடைசியில் சென்னப் பட்டினமாக மாறியது. அப்புறம் சென்னப்பட்டினம் சென்னையாக மாறியது. அந்தச் சமயத்தில்தான் சென்னைப் பட்டினத்திற்கு வடக்கே மதராஸ் பட்டினம் இருந்தது.
சிங்காரச் சென்னை
ஓர் இடைச் செருகல் வருகிறது. ஆற்காடு நவாப்புகள் மதராஸ் பட்டினத்தில் இருந்த மதராஸா எனும் சமயப் பள்ளிகளுக்கு பல தலைமுறைகளுக்கு காப்பாளர்களாக இருந்து வந்திருக்கிறார்கள். ஒழுக்க முறைகள் பேணப்படுவதற்காக நிறைய பொருள் உதவிகளையும் செய்திருக்கிறார்கள்.
மதராஸா என்றால் சமயப்பள்ளி. நல் பண்புகள், நல் ஒழுக்கங்கள், நல் நெறி முறைகள் போன்றவை இப்பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கப்பட்டன. அதனால் மதராஸா என்ற சொல்லிலிருந்துதான் மதராஸ் எனும் பெயர் வந்ததாகச் சொல்கிறார்கள்.
ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனி கால் பதித்த சமயத்தில், மதராஸ் பட்டினம் வடக்கிலும் சென்னைப் பட்டினம் தெற்கிலும் இருந்தன. நாளடைவில் இரண்டும் ஒன்றாகி மதராஸ் என்று ஒரே நகரமானது. 1996ல் மதராஸ் அதிராப்பூர்வமாக சென்னை என்று புதுப்பொலிவு பெற்றது.
ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்டு மாதம் 22ஆம் தேதி சென்னை தினம் கொண்டாடப் படுகிறது. தமிழ்நாட்டின் தலைப்பட்டினம் சென்னை. இந்தியக் கண்டத்தின் நான்காவது பெரிய நகரம். உலகத்தில் 28வது இடத்தில் இருக்கிறது. ஆங்கிலேய ஆட்சியில் 368 ஆண்டுகள் பழமையான சரித்திரம் கொண்டது சிங்காரச் சென்னை.
சரி! சென்னைக்கு எப்படி பெயர் கிடைத்தது என்பது தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். நமக்குத் தெரிந்த விவரங்களைச் சொல்லியிருக்கிறோம். தெரியாமல் பல செய்திகள் இருக்கலாம். இது தொடர்பான வேறு விதமான கருத்துகள் இருந்தால் சொல்லுங்கள். தெரிந்து கொள்வோம். வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில்தான் இந்தக் கட்டுரையை எழுதியிருக்கிறேன்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval