Thursday, July 7, 2016

90 நாள் போராடி உயிர்விட்ட பெண் எஸ்.ஐ. ! செயின்பறிப்பு அட்டூழியம்

வேலூர் மாவட்டத்தின் வேகமான பெண் காவல் அதிகாரிகளுள் ஒருவர் செல்வாம்பாள். இந்த நிமிடம் அவர் உயிரோடு இல்லை. உடல் நலமில்லாமல் பல வாரங்களாக மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்த செல்வாம்பாள், நேற்று காலை உயிரிழந்தார்.

செல்வாம்பாள் மரணம் குறித்து, 'திருடனுக்குத் தேள் கொட்டியது போல்' என்பார்களே, அப்படி கிடக்கிறார்கள் வேலூர் மாவட்ட போலீஸ் அதிகாரிகள். "அந்தம்மா (செல்வாம்பாள்) சாவுக்கு காரணமானவங்களையே இன்னும் போலீஸ் பிடிக்கலை, இவங்க  எப்படி பொதுமக்களைப் பாதுகாக்க முடியும்" என்கின்றனர் வேலூர், கோட்டைப் பகுதி பொதுமக்கள்.
வேலூர் கஸ்பாவை சேர்ந்த செல்வாம்பாளுக்கு, ஆற்காடு டவுன் போலீஸில் சப்–இன்ஸ்பெக்டராக பணி. வேலூர், கோட்டையில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளியில், காவலர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளித்து வந்த பிரிவிலும் இருந்தவர்.

2016, ஏப்ரல் 10- ம் தேதி, வேலூரில் இருந்து அணைக் கட்டிற்கு செல்வாம்பாள் பைக்கில் சென்றபோது, அவரை பைக்கில் பின் தொடர்ந்து சென்ற மர்ம ஆசாமிகள், ஆட்கள் நடமாட்டம் குறைந்த வல்லண்ட ராமம் என்ற பகுதியில் வரும்போது, செல்வாம்பாள் பைக் மீது தங்களின் பைக்கை மோதி, அவரைக் கீழே சாய்த்தனர்.
நிலைதடுமாறி செல்வாம்பாள் கீழே விழ, பைக்கில் வந்த இருவரில் ஒருவன் கீழே இறங்கி, அவரது கழுத்தில் இருந்த 10 சவரன் தங்கச் சங்கிலியை பறிக்க முயல, உடலில் காயத்துடன் கிடந்த செல்வாம்பாள் அவர்களை எதிர்த்துப் போராட முடியாமல், உதவிக் கேட்டு அலறியுள்ளார்.

பெரும் போராட்டத்திற்குப் பின்னர், செல்வாம்பாள் கழுத்திலிருந்த 10 சவரன் சங்கிலியில், பைக் கொள்ளையர்கள் கைக்கு 2½ சவரன் சங்கிலித் துண்டு மட்டும் போனது. அதற்குள் பொதுமக்கள் ஓடிவர, பைக் கொள்ளையர்கள் அந்த செயினுடன் தப்பிச் சென்று விட்டனர்.

பைக் கொள்ளையர்கள் இடித்துக் கீழே தள்ளியதில் ஏற்பட்ட காயம் ஒரு பக்கம் இருக்க, பைக் கொள்ளையர்கள் இழுத்த இழுப்பில் கழுத்துப் பகுதி நரம்புகள் துண்டிக்கப்பட்ட நிலையிலேயே, பெண் எஸ்.ஐ. செல்வாம்மாள் பள்ளி கொண்டா போலீசில் நேரில் போய் புகார் செய்தார். போலீசாரும் வழக்குப் பதிவு செய்து விசாரித்துக் கொண்டே இருக்கின்றனர்.
இதோ, கழுத்து நரம்புகள் அறுந்து, அதனால் நுரையீரல் பழுதாகி, கோமா நிலைக்கே போய் விட்ட செல்வாம்பாள் இன்று உயிரிழந்துவிட்டார். ஏப்ரல் 10-ல் அவர் கொடுத்த சங்கிலிப் பறிப்புக் கொள்ளையர்கள் மீதான புகாருக்கான நடவடிக்கையை ஜூலை- 5 வரை எதிர்பார்த்து விட்டுத்தான் அவர் கண்ணை மூடி இருக்க வேண்டும். 

தாலியைக் காப்பாற்றிக் கொள்ள, கடந்த ஆண்டு கத்திக் குத்துப்பட்டார் காயத்ரி. இந்த ஆண்டு, (நேற்று முன்தினம்) சென்னை பட்டினப்பாக்கத்தில் இளம் பெண் நந்தினி, தனது உயிரையே இழந்துவிட்டார். 
சமூக விரோதிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது, பெண்களின் தாலிச் சங்கிலிகளுக்கு போதிய பாதுகாப்பில்லை, அவர்களது உயிர்களுக்கும் உத்திரவாதம் இல்லை. ஆனாலும், சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது, தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது,  நம்புவோம்!

ந.பா.சேதுராமன்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval