Tuesday, July 12, 2016

வெட்டப்பட்ட வழக்கறிஞர்...கேள்விக்குறியான சென்னை ஹைகோர்ட் பாதுகாப்பு !

சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட் வழக்கறிஞராக இருப்பவர் மணிமாறன். இன்று (12.7.2016) பகல் 1.30 மணியளவில் வழக்கறிஞர்கள் சேம்பரில் சீனியர் வழக்கறிஞர் ஒருவரை பார்த்து விட்டு வர சென்ற போது, அங்கே சேம்பரில் வைத்தே சரமாரியாக வெட்டப்பட்டார்.
படுகாயமடைந்த அவரை நோக்கி, அங்கிருந்த சக வழக்கறிஞர்கள், கொலை முயற்சி ஆசாமியை நோக்கி குரல் கொடுத்தபடி ஓடிவரவே, அந்த இளைஞர் வழக்கறிஞர்களிடம் சிக்கிக் கொண்டார். அதன் பின் அவசர உதவிக்காக 108- ஐயும், போலீஸ் உதவிக்காக 100-ஐயும் வழக்கறிஞர்கள் தொடர்பு கொண்டனர்.ரத்தப் போக்கில் துடித்துக் கொண்டிருந்த வழக்கறிஞர் மணிமாறனை காப்பாற்ற ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையின்   தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்துள்ளனர்.

சென்னை ஹைகோர்ட்டில் போலீஸ்- வழக்கறிஞர்கள் மோதல் சம்பவத்திற்கு பிறகு கூடுதல் பாதுகாப்பு கொடுப்பது தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கோர்ட்டில் நீதிபதிகளின் சேம்பர், வழக்காடும் பகுதி உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு சி.ஐ.எஸ்.எஃப் (மத்திய தொழிற் பாதுகாப்புப் படை) படையினர் ஆயுதம் ஏந்திய நிலையில், 24 மணி நேர பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டனர்.
சி.ஐ.எஸ்.எஃப் படையினர் நிற்கும்  பிரதானப் பகுதியைத் தவிர, மற்ற பகுதிகள் மாநில போலீசின் வழக்கமான பாதுகாப்பில் கொண்டு வரப்பட்டது. ஆவின் கேட், ஃபயர் சர்வீஸ் கேட் என்றழைக்கப்படும் பகுதிகளில் சென்னை சிட்டி போலீஸ் பாதுகாப்புப் பணியை மேற் கொண்டு வருகிறது.
ஃபயர் சர்வீஸ் கேட் எனப்படும் சென்னை போலீஸ் கண்காணிப்பில் உள்ள பகுதியில்தான் வழக்கறிஞர்கள் சங்க ஐந்துமாடி (சேம்பர்) கூடுதல் கட்டடம் இயங்கி வருகிறது. இந்த கட்டடத்தில் தான் மதிய உணவருந்திக் கொண்டிருந்த நிலையிலேயே வழக்கறிஞர் மணிமாறன்,  வெட்டப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில், " கொலைமுயற்சியில் ஈடுபட்டவர், வழக்கறிஞரின் மகன் ராஜேஷ் என்று தெரியவந்துள்ளது. குடும்பப் பிரச்னை காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது" என்கிறார்கள்.
பட்டப் பகலில் கோர்ட்டிலேயே நடந்துள்ள இந்த சம்பவம், கோர்ட்டுக்கு வந்து போகும் அனைத்துத் தரப்பினரின் பாதுகாப்பை மேலும் கேள்விக் குறியாக்கியுள்ளது.

-ந.பா.சே
courtesy,viktan

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval