தன் தந்தைக்கு ஆறாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சொத்து இருந்தும் பேக்கரி ஒன்றில் கூலிவேலை செய்து, நெகிழ வைத்துள்ளார் இளைஞர் ஒருவர். சமூக வலைத்தளங்களில் அவருக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன
.
குஜராத் மாநிலத்தின் முன்னணி வைர வியாபாரி சாவ்ஜி தொலாக்கியா. 54 வயதான சாவ்ஜி, ஹரே கிருஷ்ணா என்ற பெயரில் வைரம் மற்றும் ஆபரணப் பொருட்கள் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். சூரத் நகரில் பெரிய கம்பெனி வைத்து நிர்வகித்து வரும் சாவ்ஜி, உலகின் 71 நாடுகளில் வைர வியாபாரம் செய்து குஜராத் மாநிலத்தின் முன்னணி செல்வந்தராக வளம் வருகிறார். கடந்த 2011ம் ஆண்டு சிறந்த ஏற்றுமதியாளர் என்ற வகையில் அதற்கான குஜராத் மாநில அரசின் விருதையும் பெற்றுள்ளார். இவரது சொத்து மதிப்பு 6 ஆயிரம் கோடி.
இந்நிலையில் இவரின் மகன் ட்ராவ்யா தொலாக்கியா அமெரிக்காவில் எம்.பி.ஏ. படித்துவிட்டு சொந்த ஊர் திரும்பியுள்ளார். 21 வயதே நிரம்பிய ட்ராவ்யா தொலாக்கியாவுக்கு பணம் மற்றும் சமூக அந்தஸ்து, எல்லாவற்றுக்கும் மேலாக உழைப்பின் அருமையைப் புரிய வைக்கவேண்டும் என்று சாவ்ஜி விரும்பியுள்ளார். இதனை மகனிடமும் கூறியுள்ளார். அவரும் தந்தைப் பேச்சிற்கு மதிப்புக்குக் கொடுத்து தந்தையின் சொல்படி நடந்து கொண்டுள்ளார்.இது குறித்து சாவ்ஜி தொலாக்கியா கூறுகையில், "என்மகனிடம் நான் சொன்னது ஒன்றுதான். வேலை தேடுவதும் அந்த வேலையைத் தக்கவைத்துக் கொள்ள படும் சிரமங்களையும், சம்பாதிக்கும் பணத்தின் முக்கியத்துவத்தையும் உணர வேண்டும். அதனால் நமது மாநிலம் அல்லாத ஊருக்குச் சென்று உன்னுடைய திறனால் வேலை தேடி சம்பாதித்து ஒருமாதம் வாழ்ந்து காட்டு. எதற்கும் என்னுடைய பெயரை செல்வாக்கை எந்த இடத்திலும் பயன்படுத்தக் கூடாது என்றேன். அவரும் அதே போல வாழ்ந்து காட்டியுள்ளார்." என்கிறார் நெகிழ்வாக.
தந்தையின் சவாலை வெற்றிகொண்ட ட்ராவ்யா தொலாக்கியா தெரிவிக்கையில், 'அப்பாவின் சொல்படி வேலை தேட நான் தேர்ந்தெடுத்த மாநிலம் கேரளா. எனக்கு மலையாளம் தெரியாது. அங்கு அதிகம் இந்தி மொழி தெரிந்தவர்களும் இல்லை.ஆனாலும் பல இடங்களில் வேலை தேடினேன். கொச்சி முழுக்க 60 நிறுவனங்களில் வேலை தேடினேன். கிடைக்கவில்லை. ஆனாலும் மனம் தளரவில்லை. இறுதியாக பேக்கரி ஒன்றில் வேலை கிடைத்தது. அடுத்துஅழைப்பு மையம் ஒன்றிலும், மெக் டொனால்ட் கடையிலும் வேலை பார்த்தேன். எல்லாமே சிறு சிறு வேலைகள்தான். ஒரு மாதத்தில் ரூ.4000 மட்டுமே சம்பாதிக்க முடிந்தது. வேலை இல்லாமல் இருப்பதும் அதைத் தேடி அலைவதும் எவ்வளவு கொடுமையானது என்பதை உணர்ந்து கொண்டேன்.
இந்தச் சமயத்தில்தான், நான் வேலை செய்யும் பேக்கரிக்கு வந்த ஒருவர் எனது வேலையைப் பார்த்து 'இம்ப்ரஸ்' ஆகியுள்ளார். அவர் தான் பணிபுரியும் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அழைத்தார். ஆனால் அப்போது அவருடன் இருந்த நபர்கள் 'இவரைப் பற்றி ஒன்றும் தெரியாத நிலையில் அவருக்கு வேலை வாங்கித் தரவேண்டாம்' என்று கூறினர். இருப்பினும் எனது வேலைத்திறன் அவருக்குப் பிடித்துப் போகவே புதிய வேலைக்குப் பரிந்துரைத்தார். இதற்கிடையே எனது தந்தை நிறுவனத்தில் இருந்து போன் அழைப்பு வந்துள்ளது.
என் மீது நம்பிக்கை வைத்து வேலைக்கு ஏற்பாடு செய்த அவருக்கு நன்றி தெரிவித்து, நான் யார் என்றும் என்ன நிலையில் வேலைக்கு வந்துள்ளேன் என்பதை அவரிடம் விளக்கிக் கூறியுள்ளார்கள். இதனால் இன்ப அதிர்ச்சிக்கு ஆளான அவர் என்னை மனமார வாழ்த்தினார். விரைவில் எனது சொந்த ஊருக்குச் செல்கிறேன். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றிய மனதோடு குஜராத் பயணமாகிறேன். இந்த இடைப்பட்ட காலத்தில் நான் கற்றுக் கொண்ட ஒரு முக்கிய விஷயம், சக மனிதனுடன் அன்பும் கரிசனமும் கொண்டு பழக வேண்டும் என்பதுதான்" என்றார் வாழ்வின் புரிதலோடு.
courtesy;vikadan
courtesy;vikadan
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval