Thursday, July 21, 2016

எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்தும் பணம் இல்லாமல் தவிக்கும் மாணவி: முதல்வர் கரை சேர்ப்பார் என நம்பிக்கை

தாய் வெள்ளையம்மாள், தந்தை குமரேசனுடன் மாணவி சாந்தினி. மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும், பணம் இல்லாமல் பரி தவிக்கும் கூலித் தொழிலாளியின் மகள் சாந்தினி, “எல்லோருக்கும் உதவி செய்யும் தமிழக முதல்வர், என்னையும் கரை சேர்ப்பார்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஆஸ்பத்திரி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சி.குமரேசன். செங்கொல்லை பகுதியில் ஒரு வீட்டின் பக்கவாட்டில் கழிப்பறை வசதிகூட இல்லாத வாடகை குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இவரது மகள் சாந்தினி. சிலரின் வழிகாட்டுதலில், பட்டுக்கோட்டை அலிவலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், 11 மற்றும் 12-ம் வகுப்பை இலவசமாகப் படித்தார். நிகழாண்டு 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 1,165 மதிப்பெண் பெற்ற சாந்தினியின் மருத்துவ கட் ஆப் மதிப்பெண் 196.25.
ஜூன் 23-ம் தேதி சென்னையில் நடந்த மருத்துவ சேர்க்கை கலந் தாய்வில், சாந்தினிக்கு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. உடனடியாக 25-ம் தேதி கல்லூரியில் சேர வேண்டிய நிர்ப்பந்தம். கல்லூரிக் கட்டணமாக உடனே செலுத்த வேண் டிய பணம் சுமார் ரூ.25 ஆயிரத்தை உறவினரிடம் கடனாகப் பெற்று கல்லூரியில் செலுத்தி சேர்க் கையை உறுதி செய்தார்.
ஆனால், புத்தகம், பருவக் கட்டணம் (Semester Fees), விடுதிக் கட்டணம் என ஆண்டுக்கு ரூ.80 ஆயிரம் கட்ட வேண்டும் என்பதால், என்ன செய்வதென்றே தெரிய வில்லை என இயலாமையில் கண் கலங்கி நிற்கிறார் சாந்தினி.
சாந்தினியின் தந்தை குமரேசன் கூறும்போது, “எனக்கு 51 வய தாகிறது. லாரி டிரைவராக வேலை செய்தேன். கடந்த 3 வருடங்க ளுக்கு முன்பு பக்கவாதம் தாக்கி யது. மனைவியும் நானும் ஒரு குளிர்பான கடையில் வேலை செய்கிறோம்.
பள்ளியில் நன்றாகப் படித்த மகளுக்கு, மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும், பணம் இல்லாததால், அந்த வாய்ப்பு பறிபோய்விடும் போல உள்ளது. மகள் தவிப்பதைக் காண வேதனையாக உள்ளது.
போதிய வருமானம் இன்றி சிரமப் படும் நான், எனது சூழ்நிலையை விளக்கி, கடந்த ஜூன் 16-ல் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு, மனு அனுப்பினேன். எனது கோரிக்கை, தமிழக முதல்வரின் கவனத்துக்குச் சென்றால், நிச்சயம் நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.
சாந்தினி கூறும்போது, “10-ம் வகுப்பில் அரசுப் பள்ளியில் படித்து, பொதுத்தேர்வில் 491 மதிப்பெண் பெற்றதால், பிளஸ் 1, பிளஸ் 2-வில் எனக்கு கல்விக் கட்டணம், சீருடை, உணவு ஆகியவற்றை பள்ளித் தாளாளர் இலவசமாகத் தந்து உதவினார். மருத்துவம் படிக்க வேண்டும் என்பது சிறுவயது முதல் உள்ள கனவு. இப்போது அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும், பணம் இல்லாததால், தவிக்கிறேன். எல்லோருக்கும் உதவும் தமிழக முதல்வர், எனக்கும் உதவுவார் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.
courtesy;The hindu

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval