சேலம் மாவட்டம் மேட்டூரைச் சுற்றியுள்ள ஜலகண்டாபுரம், வனவாசி, ஓமலூர், மேச்சேரி போன்ற பகுதிகளில் உள்ள முதியவர்கள் 23 பேர், கண்களில் புரை எடுப்பதற்காகவும், கண் பார்வை நன்றாக தெரிவதற்காகவும் மேட்டூர் அரசு மருத்துவமனையில் கடந்த 14, 15, 16 ஆகிய 3 நாட்களில் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்கள்.
அப்போது கிருமி தொற்றின் காரணமாக கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு கண்களில் கடுமையான வலியும், கண் திறக்க முடியாமலும், கண் அழுகியும் 23 பேருக்கு கண் பார்வை பாதிப்பு ஏற்பட்டது. அதையடுத்து தமிழக அரசு, அவர்களுக்கான மேல் சிகிச்சைக்கான செலவுகளை ஏற்றுக் கொண்டு, அவர்களை சேலம் அரவிந்த் கண் மருத்துவமனை, சேலம் அகர்வால் கண் மருத்துவமனை, கோவை அரவிந்த் கண் மருத்துவமனைகளில் சேர்த்தது.
ஆனால் 23 பேருக்கும் முழுமையாக கண் பாதிக்கப்பட்டதால் கண் பார்வையை இழந்துள்ளனர். இதனையடுத்து கண் பார்வை இழந்தவர்கள் சேலம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதுபற்றி கண் பார்வை இழந்த ஒண்டியம்மாள், ‘‘சாமி என் வீட்டுக்காரர் பெயர் சின்னேரி. எனக்கு வயசு 57
நானும் எங்க வீட்டுக்காரரும் கூலி வேலைக்கு போய்தான் வயிற்றை கழுவிட்டு இருந்தோம். இப்ப சுத்தமா கண்ணு தெரியவில்லை. எனக்கு கண் வலி தாங்க முடியல. மேட்டூரில் கண் ஆப்ரேஷன் செய்து கண் தெரியாமல் போனதால் எனக்கு செத்துப் போனவங்க கண்ணை எடுத்து வச்சுட்டாங்க. கண்ணு நற நறங்கது. இனி நான் வீட்டுக்குப் போய் எப்படி
பிழைப்பேன். வாடகை வீட்டில்தான் இருக்கிறோம். எந்த வேலைக்குப் போய் வாடகை கொடுக்க முடியும். இந்த அரசாங்கம் ஏதாவது எங்களுக்கு உதவி செய்யணும். கண் இழந்த எங்களுக்கு கருணை காட்ட வேண்டும். இல்லைன்னா சாகும் வரைக்கும் இந்த கலெக்டர் ஆபிஸிலியே கிடப்பேன். ’’ என்றார்.
கண் பார்வை இழந்த சின்னதம்பி, ‘‘ எனக்கு வயசு 65 ஆகிறது. என் மனைவி பெயர் பாப்பாத்தி. நான் எடப்பாடி அருகே உள்ள செட்டிமாங்குறிச்சி. என் மனைவி ஏரி வேலைக்கு போகிறாள். நான் குழி வெட்ட, மரம் அறுக்க என கிடைக்கின்ற கூலி வேலைக்குப் போவேன். எங்களுக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு. இரண்டு பேருக்கும் திருமணம் ஆயிடுச்சு. அவங்க தனித்தனியா இருக்காங்க.
கண் பார்வை இழந்த மும்தாஜ், ‘‘ கலெக்டர் ஆபீஸூக்கு மதியம் 1:30 மணிக்கு வந்து நுழைவு வாயிலில் அம்ர்ந்துட்டோம். ஆனால் மணி 5:30 ஆகிறது இன்னும் கலெக்டர் எங்களை வந்து பார்க்க வரவில்லை. அவர் வராமல் நாங்க இந்த இடத்தை விட்டு போக மாட்டோம். அது எத்தனை நாட்கள் ஆனாலும் பரவாயில்லை. எங்களுக்கு ஒரு நியாயம் கிடைக்காமல் இந்த இடத்தை விட்டு போக மாட்டோம்’’ என்று குமுறினார்.
இறுதியாக மாலை 6:00 மணிக்கு சேலம் கலெக்டர் சம்பத், தன் சேம்பரை விட்டு கீழே வந்து கண்பாதிக்கப்பட்டவர்களோடு தரையில் அமர்ந்து, ‘‘நான் சாப்பிடுவதற்காக மதியமே கிளம்பி போனதால்தான் உங்களை பார்க்க முடியவில்லை. மன்னித்துக் கொள்ளுங்கள். கண் இழந்த உங்கள் ஒவ்வொருவருக்கும் என்னுடைய நிதியில் இருந்து 2 சென்ட் நிலமும், வீடு இல்லாதவர்களுக்கு வீடும் கட்டி கொடுக்கிறேன். கண் இழந்த 23 பேருக்கும் மாதம் 1000 ரூபாய் உதவித் தொகையும் வழங்குகிறேன்’’ என்று உறுதியளித்தவர், மேற்கொண்டு அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று அரசு மூலமாக உங்களுக்கு நிவாரணத் தொகையும் வாங்கி தர முயற்சி செய்து தருகிறேன்’’ என்றார்.
அதையடுத்து கலெக்டர் தங்களை கைவிடமாட்டார் என அவர் மீது நம்பிக்கை வைத்து அவர்கள் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்கள்.
-வீ.கே.ரமேஷ்
படங்கள்: எம். விஜயகுமார்
courtesy;vikadan
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval