வங்கதேசத் தலைநகர் டாக்காவில் ஒரு கஃபேயில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் காவல்துறை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். வெளிநாட்டவர் உள்ளிட்ட பலர் பணயக்கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (01-07-2016) வெள்ளிக்கிழமை இரவு டாகா நகரின் புறநகரான குல்ஷானிலுள்ள பிரபல கஃபேவைத் தாக்கிய தீவிரவாதிகள் பலரை பணயக்கைதிகளாக சிறைபிடித்துவைத்திருப்பதாக வங்கதேச சிறப்பு காவல்துறைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
சிவிலியன்களை சிறைபிடித்திருக்கும் ஆட்களிடம் தொடர்பை ஏற்படுத்த தாங்கள் முயன்று வருவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
பலர் சிறைபிடிக்கப்பட்டிருப்பதாகவும் அதில் குறைந்தது இருபதுக்கும் மேற்பட்டவர்கள் வெளிநாட்டவர் என்றும் உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. தீவிரவாதிகளின் எண்ணிக்கை குறித்து காவல்துறை சார்பில் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. எட்டு அல்லது ஒன்பது ஆண் தீவிரவாதிகள் இதில் ஈடுபட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில் ஈடுபட்டிருப்பவர்கள் யார் என்பது இன்னமும் உறுதியாகவில்லை எனினும் இவர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகளாக இருக்கலாம் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விடுதிக்கு அடுத்த கட்டிடத்தில் இருக்கும் பெண்மணி ரஷிலா ரஹிம் தொடர் துப்பாக்கிச்சுடும் சத்தங்களையும் கிரெனெடுகள் உள்ளிட்ட வெடிப்புக்களையும் தான் கேட்டதாகவும் சக்திவாய்ந்த வெடிப்பு காரணமாக தன் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கி விழுந்ததாகவும் பிபிசியிடம் தெரிவித்தார்.
தீவிரவாதிகளுக்கும் காவல்துறையினருக்கும் நீடித்த துப்பாக்கிச்சூட்டில் காவல்துறை அதிகாரி முஹம்மத் சலாவுதீன் என்பவர் கொல்லப்பட்டதாகவும் குறைந்தது ஐந்து பேர் காயம்பட்டிருப்பதாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாகிதாரிகள் கண்மண் தெரியாமல் சுட்டதாக தெரிவிக்கும் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் "அல்லாஹூ அக்பர்" என்று கோஷம் எழுப்பியதை தாங்கள் கேட்டதாக உள்ளூர்வாசிகளை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டாகாவின் செல்வச்செழிப்பான பகுதியில் அமைந்திருக்கும் ஹோலி ஆர்டிசான் பேக்கரி எனப்படும் இந்த கஃபேவுக்கு வெளிநாட்டவரும் மேல் மத்திய தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களும் அதிகம் வருவது வாடிக்கை.
கடுமையான துப்பாக்கி சண்டை ஒலியை தாம் கேட்டதாக உள்ளூர் மக்களை ஆதாரம் காட்டி உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கிரனெடுகள் எறியப்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுவருகின்றன.
காவல்துறையினர் அந்தப் பகுதியை சுற்றிவளைத்து, தடுத்துள்ளதோடு அந்த பகுதி முழுமையையும் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது மூன்று பேராவது அதில் காயமடைந்துள்ளதாகவும், அதில் இருவர் காவலர்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தின் மையமாக கருதப்படுகின்ற அந்த விடுதி, புலம்பெயர்ந்த மக்கள், இராஜ்ஜிய அதிகாரிகள், மற்றும் மத்திய தரவர்க்க மக்கள் மத்தியில் பிரபலமான ஒன்றாகும்.
வங்கதேசத்தில் பெரும் துப்பாக்கி சூட்டு மோதல்கள் மிக அபூர்வமாகும். ஆனால், இஸ்லாமியவாதிகள் மீது குற்றஞ்சாட்டப்படும் தொடர் கொலைகளை அடுத்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval