Friday, July 1, 2016

43 லட்ச ரூபாய் பைக்!


Image result for indian roadmaster bike imagesஅமெரிக்கப் பேச்சு வழக்கில், திடகாத்திரமான டூரிங் பைக்குகளை ‘Full Dresser’ என்று அழைப்பார்கள். அதற்கேற்ப, இந்தியன் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகமான ரோடுமாஸ்டர் பைக் இதற்குப் பொருத்தமாகவே இருக்கிறது.
வசதியான இருக்கைகள், காற்று முகத்தில் அறைவதைத் தடுக்கும் விண்ட் ஷீல்டு, பொருட்களை வைக்க இடம், டார்க் கொப்புளிக்கும் இன்ஜின் என ஒரு பக்கா டூரிங் பைக்குக்குத் தேவையான அனைத்து அம்சங்கள் கொண்ட ரோடுமாஸ்டர், நெரிசலான நம் சாலைகளில் ஓட்டுவதற்கு ஏற்றதாக இருக்காது. ஆனால், இந்த வகை பைக்குகள் தரும் ஓட்டுதல் அனுபவத்திற்கு ஈடு இணை எதுவும் இல்லை. 

டிஸைன்

அமெரிக்க நெடுஞ்சாலைகளுக்கான டூரர் பைக்குகளின் முகமாக இருக்கிறது இந்தியன் ரோடுமாஸ்டர். ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் டூரரான எலெக்ட்ரா கிளைடு பைக்கில் இருக்கும் அத்தனை வசதிகளும் இதில் இருக்கின்றன.

ஓட்டுதல் அனுபவம்

ரோடுமாஸ்டரை ஓட்டத் துவங்கும்போது, பைக்கின் எடை குறைவதுபோலத் தோன்றுகிறது. இதற்கு பைக்கின் அற்புதமான சேஸி அமைப்பும், சஸ்பென்ஷன் செட்-அப்பும்  ஒரு காரணம். இதன் கையாளுமை நம்பிக்கையளிக்கும் விதத்தில் இருப்பதால், நெரிசல் மிக்க டிராஃபிக் அல்லது வேகமான திருப்பங்களில் எளிதாக பைக்கைச் செலுத்த முடிகிறது. முன்பக்கம் 46 மிமீ ஃபோர்க்கும், பின்பக்கம் ஏர் அட்ஜஸ்டபிள் மோனோஷாக்கும் உள்ளன. நிலையற்ற சாலைகளை எளிதாகச் சமாளிக்கும் சஸ்பென்ஷன், பெரிய மேடு பள்ளங்களில் இறங்கி ஏறும்போது, ஓட்டுநருக்கு அசெளகரியத்தை ஏற்படுத்துகிறது.
இன்ஜின் பெர்ஃபாமென்ஸ்

ரோடுமாஸ்டரின் நல்ல ஓட்டுதல் அனுபவத்துக்கு, அதில் இருக்கும் ஏர் கூல்டு, V-ட்வின், 1,811 சிசி Thunder Stroke III இன்ஜின் துணை நிற்கிறது. இது 13.89kgm டார்க்கை, ஸ்மூத்தாகவும் சீராகவும் வெளிப்படுத்துகிறது. இரட்டை எக்ஸாஸ்ட்கள் வெளிப்படுத்தும் சத்தம், காதுகளுக்குச் சங்கீதம்தான். 6 ஸ்பீடு கியர்பாக்ஸில், ஒவ்வொரு முறை கியர் மாற்றுவதற்கும் கூடுதல் அழுத்தம் கொடுக்க வேண்டியிருந்தாலும், ஃபால்ஸ் நியூட்ரல் ஆகவில்லை.

முதல் தீர்ப்பு

முழுக்க முழுக்க ஓட்டுதல் அனுபவத்தை மனதில் வைத்துத் தயாரிக்கப்பட்டிருக்கும் ரோடுமாஸ்டர் பைக்கில், லக்ஸூரி கார்களே தோற்கும் அளவுக்கு, சிறப்பம்சங்களை வாரி இறைக்கபட்டிருக்கிறது. பைக்கில் பயணிக்கும் இருவரையும் சொகுசாக எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் அழைத்துச் செல்ல முடியும் என்ற நம்பிக்கையை அளிக்கும் ரோடுமாஸ்டரின் சென்னை ஆன் ரோடு விலை, 43.22 லட்சம். இது ஒரு லக்ஸூரி காருக்கு இணையான விலையாக இருக்கிறது. ஆனால், பைக்கை ஒருமுறை ஓட்டிப் பார்த்தால், தடைக் கற்களாக இருக்கும் அத்தனை விஷயங்களும் மறந்துவிடும்.
courtesy;vikatan

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval