Tuesday, January 13, 2015

சில்லரையில் சிகரெட் விற்பனை செய்ய தடை-பொது இடங்களில் புகை பிடித்தால் இனி ஆயிரம் ரூபாய் அபராதம்


சில்லரையில் சிகரெட் விற்பனை செய்ய தடை-பொது இடங்களில் புகை பிடித்தால் இனி ஆயிரம் ரூபாய் அபராதம்சில்லரையாக சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்கவும் பொது இடங்களில் புகை பிடிப்போருக்கான அபராதத் தொகையை இருநூறு ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தவும் மத்திய சுகாதார அமைச்சகம் இன்று முடிவு செய்துள்ளது. 

பொது இடங்களில் புகை பிடிப்போரை தடுக்கும் வகையிலும், புகையிலை பழக்கங்களை சார்ந்த புற்று நோய் மரணங்களை தவிர்க்கும் வகையிலும் புதிய புகையிலை (பயன்பாடு மற்றும் தடுப்பு) சட்டத்தை இயற்ற மத்திய அரசு முடிவு செய்தது. 

புகையிலை உற்பத்தியாளர்கள் மற்றும் புகையிலைப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களின் கடும் எதிர்ப்புக்கிடையில் இது தொடர்பாக அரசுக்கு பரிந்துரைகளை முன்வைக்க குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. இந்த குழு அளித்த பரிந்துரைகள் மத்திய சுகாதாரத் துறை மந்திரி ஜே.பி. நட்டாவிடம் இன்று சமர்ப்பிக்கப்பட்டது. 

சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களை வாங்குவோர் மற்றும் உபயோகிப்பவர்களின் வயது உச்சவரம்பை தற்போதைய 18-லிருந்து 21 ஆக உயர்த்துவது, முழு பாக்கெட்டாக அன்றி சில்லரையில் சிகரெட் விற்பனை செய்வதை தடை செய்வது போன்ற கடுமையான பரிந்துரைகளை அப்படியே அமல்படுத்த மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது. 

மேலும், தற்போது பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு விதிக்கப்படும் 200 ரூபாய் அபராதத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரபல ஓட்டல்கள் மற்றும் உணவகங்களில் புகை பிடிப்போருக்காக ஒதுக்கப்பட்டுள்ள தனிப்பகுதிகளுக்கு தடை செய்யவும் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. 

இது தொடர்பான திருத்தச் சட்ட மசோதா வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது தாக்கல் செய்யப்படும். இது சட்டமாக ஒப்புதல் பெற்று நடைமுறைக்கு வரும்பட்சத்தில் இந்த சட்டங்களை மீறுவோர் மீது தற்போது விதிக்கப்படும் அபராத தொகையை 10 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது. 

இந்த புதிய சட்டத்தை இயற்றுவதற்கு முன்னர் பொதுமக்களின் கருத்துகளை அறியவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
courtesy;malaimalar

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval