Tuesday, January 27, 2015

மதரீதியாக பிளவு படாமல் இருக்கும் வரை இந்தியா தொடர்ந்து முன்னேறும்: ஒபாமா

OBAMA-AP PHOTO_8மதரீதியாக பிளவுபடாமல் இருக்கும் வரை இந்தியா தொடர்ந்து முன்னேறும்’’ என அமெரிக்க அதிபர் ஒபாமா வலியுறுத்தினார். மூன்று நாள் பயணத்தை முடிக்கும் முன்பு நிறைவுரையில் அவர் இப்படி பேசியுள்ளார். மூன்று நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று இறுதி நிகழ்ச்சியாக டெல்லி சிரி போர்ட் ஆடிட்டோரியத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: இந்தியாவிலும், அமெரிக்காவில் பலதரப்பட்ட மக்கள் வசிக்கின்றனர். வேற்றுமைதான் நமது பலம். வேற்றுமைக்கு உதாரணம் அமெரிக்கா. எல்லோரும் இணைந்து பொதுவான முயற்சி மற்றும் நோக்கத்துக்காக பணியாற்றுகிறோம். அதேபோல் இந்தியாவும் பலதரப்பட்ட வேறுபாடுகளை கொண்ட ஜனநாயக நாடு. அதனால்தான் உலகுக்கே உதாரணமாக இந்தியா இருக்கிறது. அதுதான் நம்மை உலக தலைவர்களாக ஆக்குகிறது. பொருளாதாரத்தை வைத்தோ அல்லது நாம் வைத்திருக்கும் ஆயுதங்களை வைத்தோ உலக தலைவர்களாக முடியாது. ஒன்றாக இணைந்து பணியாற்றும் வழியை காண்பிப்பதில் உள்ள திறமைதான் உலக தலைவர்களாக்குகிறது.
அதனால் மதரீதியாகவோ அல்லது வேறு எந்த வழியிலோ நம்மை பிரிக்கும் முயற்சிக்கு எதிராக இந்தியாவும், அமெரிக்காவும் செயல்பட வேண்டும்.
எந்த வற்புறுத்தலும், அச்சமும் இன்றி ஒவ்வொரும் அவர்கள் விரும்பும் மத நம்பிக்கையை பின்பற்ற உரிமை உண்டு. மதரீதியாக பிளவுபடாமல் இருக்கும்வரை இந்தியா தொடர்ந்து வெற்றியடையும். எல்லா மக்களும் தாங்கள் விரும்பும் மதத்தை பின்பற்ற, பரப்ப முழு உரிமை உள்ளது என இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 25வது பிரிவு கூறுகிறது. எல்லா நாடுகளிலும் மத சுதந்திரத்தை காப்பது அரசின் கடமை, தனிமனிதனின் கடமை. ஆனால் மதநம்பிக்கையை காக்கும் பெயரில், சிலர் வன்முறையில், தீவிரவாதத்திலும் ஈடுபடுவதை உலகின் பல இடங்களில் நாம் பார்க்கிறோம். மதத்தின் பெயரால் நம்மை பிரிக்கும் முயற்சியை நாம் அனுமதிக்க கூடாது.
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குருதுவராவில் புகுந்து மர்ம நபர் தாக்குதல் நடத்தினார். அதில் அமெரிக்கர்கள் மற்றும் இந்தியர்கள் உட்பட 6 அப்பாவிகள் பலியாயினர். நாம் கடவுளை வழிபடும் விதத்தை விட, நமது தோலின் நிறத்தை விட, நமது குணநலன்கள்தான் முக்கியம் என்றார் டாக்டர் மார்டின் லூதர் கிங். அமெரிக்காவில் சிறுபான்மையினராக நான் பல மோசமான அனுபவங்களை சந்தித்திருக்கிறேன். எனது நிறம் காரணமாக நான் வேறுவிதமாக நடத்தப்பட்டுள்ளேன். என்னைப் பற்றி தெரியாதவர்கள், நான் வேறு மதத்தை சேர்ந்தவன் என்று கூட கூறியிருக்கிறார்கள். உலகில் நாம் தேடும் அமைதி, நமது மனதில்தான் இருக்கிறது. இந்தியாவும், அமெரிக்காவும், சாதாரண தோழமை நாடுகள் அல்ல. அமெரிக்கா இந்தியாவின் மிகச் சிறந்த நட்பு நாடாக இருக்க முடியும் என நான் நம்புகிறேன். உலகில் இந்தியாவின் பங்கை இந்தியர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
நமது இரு நாட்டு மக்களுக்கும் ஏராளமான பணிகள் மற்றும் வாய்ப்புகள் உள்ளது. நமது இரு ஜனநாயக நாடுகளும் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் நமது நாடுகளும் பாதுகாப்பாக இருக்கும். உலகமும் பாதுகாப்பாக இருக்கும். ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அமெரிக்கா ஆதரவளித்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார். இந்திய பிரபலங்கள் நடிகர் ஷாருக்கான், விளையாட்டு வீரர்கள் மில்கா சிங், மேரி கோம், நோபல் பரிசு வென்ற கைலாஷ் சத்யார்த்தி ஆகியோரின் பெருமைகள் பற்றியும் ஒபாமா குறிப்பிட்டார். தில்வாலே துல்ஹனியா லேஜாயேங்கே என்ற இந்தி படத்தில் சாருக்கான், கஜோலிடம் கூறும் பிரபல வசனம் ‘செனோரிடா, படே படே தேஷோ மே… என்ற வரியை ஒபாமா கூறியபோது, இளைஞர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
குடியரசு தின அணிவகுப்பில் எல்லை பாதுகாப்பு படையினரின் பைக் சாகசத்தை பெருமையாக கூறிய ஒபாமா, ‘‘தனக்கும் அவர்களுடன் பைக்கில் சாகசம் செய்ய ஆசைதான். ஆனால், என் தலை மேல் மற்றவர் ஏறி நிற்க, எனது சீக்ரெட் சர்வீஸ் பாதுகாப்பு படையினர் அனுமதிக்கமாட்டார்கள்’’ என ஜோக் அடித்தார்.
பெண்கள் முன்னேறினால் நாடு வெற்றியடையும்
பெண்களை பற்றி குறிப்பிட்ட ஒபாமா, ‘‘இந்தியா ராணுவத்தில் பெண்கள் இடம் பெற்றுள்ளது, அதுவும் ஜனாதிபதி மாளிகையில் எனக்கு அளிக்கப்பட்ட ராணுவ அணிவகுப்பு மரியாதைக்கு பெண் ஒருவர் தலைமை தாங்கியது என்னை வியக்க வைத்தது. இது குறிப்பிடத்தக்க ஒன்று. இங்கு அனைத்து துறையிலும் பெண்களை பார்க்கிறேன். சிறந்த பலம் மற்றும் முன்னேற்றத்தின் அடையாளம் இது. பெண்கள் முன்னேறும்போது நாடு வெற்றியடையும். எனது மனைவி மிச்செல் மிகவும் திறமையான பெண். நான் தவறாக செயல்பட்டால், அதை எடுத்துச் சொல்ல அவர் பயப்படமாட்டார். இது அடிக்கடி நடக்கும். எனக்கு இரு அழகான பெண் குழந்தைகள் உள்ளனர். என்னைச் சுற்றி வலுவான, அழகான பெண்களே உள்ளனர். சமூகத்தில் பெண்கள் மதிக்கப்பட வேண்டும். கவுரவமாக நடத்தப்பட வேண்டும். பெண்கள் சம உரிமையுடன், சுதந்திராகவும், பாதுகாப்பாக தங்கள் அன்றாட பணிகளை மேற்கொள்வதை ஒவ்வொரு கணவர்களும், தந்தைகளும், சகோதரர்களும் உறுதி செய்ய வேண்டும்’’ என்றார்.
சகோதர, சகோதரிகளே


இந்திய-அமெரிக்க உறவை குறிப்பிட்ட ஒபாமா, ‘‘100 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவின் தவப்புதல்வன் சுவாமி விவேகானந்தரை அமெரிக்கா வரவேற்றது. அமெரிக்காவுக்கு யோகாவை கொண்டு வந்தவர் விவேகானந்தர். அவர் பேசுகையில் அமெரிக்காவின் சகோதர, சகோதரிகளே என கூறி எங்கள் மனதை கவர்ந்தார். அதேபோல் தான் நானும் உங்களை இந்தியாவின் சகோதர, சகோதரிகளாக கருதுகிறேன்.’’ என்றார்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval