அரசியல் சாசன முகப்பிலிருந்து மதச்சார்பற்ற என்ற வார்த்தையை நீக்குவதற்கு தேசிய அளவில் விவாதம் தேவை என மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறிய கருத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த நமது நாட்டின் குடியரசு தின கொண்டாட்டங்களையொட்டி மத்திய அரசு வெளியிட்ட விளம்பரங்களில், நமது அரசியல் சாசன சட்டத்தின் முகப்பு இடம்பெற்றிருந்தது.
ஆனால் அதில், ‘சோஷலிச’, ‘மதச்சார்பற்ற’ என்ற 2 முக்கிய வார்த்தைகள் இடம் பெறவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சிவசேனா கருத்து
சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவுத், அந்த 2 வார்த்தைகள் விடுபட்டிருந்ததை தனது கட்சி வரவேற்பதாக நேற்று கருத்து தெரிவித்தார்.
அது மட்டுமின்றி அவர், ‘‘இந்தியா ஒருபோதும் மதச்சார்பற்ற நாடாக இருந்தது கிடையாது. சிவசேனா தலைவர் பால் தாக்கரேயும் சரி, அவருக்கு முன்னதாக வீர சாவர்க்கரும் சரி, தேசப்பிரிவினையின்போது, குறிப்பிட்ட மதத்தினருக்காக பாகிஸ்தான் பிரிந்து சென்றது என்றால், எஞ்சிய நாடு இந்து ராஜ்யம்தான் என எப்போதும் கூறி வந்துள்ளனர். சிவசேனா எப்போதும் இதில் நம்பிக்கை கொண்டுள்ளது’’ என கூறினார்.
ரவிசங்கர் பிரசாத் கருத்து
மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை ராஜாங்க மந்திரி ராஜ்யவர்தன் ரத்தோர், ‘‘இத்தகைய சர்ச்சை விரும்பத்தக்கதல்ல, இந்த முகப்பு, ஏற்கனவே அரசின் விளம்பரங்களில் இடம் பெற்றிருக்கிறது’’ என கூறினார்.
இது தொடர்பாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை கேபினட் மந்திரி ரவிசங்கர் பிரசாத், டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
நாம் மதச்சார்பற்ற ஒரு நாடாக இருப்பதற்கு, அந்த 2 வார்த்தைகளும் தேவையில்லை. அந்த வார்த்தைகள் இல்லாமலேகூட நாம் மதச்சார்பற்ற நாடாக இருக்க முடியும்.
நாடளாவிய விவாதம்
இந்த 2 வார்த்தைகளும், 1976–ம் ஆண்டு, (இந்திரா காந்தி ஆட்சியில்) நெருக்கடி நிலை அமலில் இருந்தபோதுதான், அரசியல் சாசன சட்ட முகப்பில் சேர்க்கப்பட்டன. இந்த 2 வார்த்தைகளையும் (அரசியல் சாசன சட்ட முகப்பில் இருந்து நீக்குவது) பற்றி, நாடளாவிய ஒரு விவாதம் நடத்தினால் அதில் என்ன தவறு இருக்கிறது? இந்த நாடு என்ன விரும்புகிறது என்று பார்ப்போம்.
இந்த 2 வார்த்தைகளும் சேர்க்கப்படுவதற்கு முந்தைய அசல் அரசியல் சாசன முகப்பினைத்தான் மத்திய அரசு தொடர்ந்து பயன்படுத்தப்போகிறதா என்று கேட்கிறீர்கள். ஆமாம். அதுதான் எங்கள் திட்டம்.
பிதாமகன்கள் சேர்க்கவில்லை
நமது அரசியல் சாசன சட்டத்தை உருவாக்கிய பிதாமகன்கள் அந்த 2 வார்த்தைகளையும் முகப்பில் சேர்க்கவில்லை.
மதச்சார்பின்மையில் இன்றைய காங்கிரஸ் கட்சி தலைவர்களின் புரிந்துகொள்ளுதலைவிட, ஜவகர்லால் நேருவின் புரிந்துகொள்ளுதல் குறைவானதா?
இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரஸ் கருத்து
இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கருத்து தெரிவிக்கையில், ‘‘பாரதீய ஜனதா கட்சி போன்று வேறு எந்தவொரு கட்சிக்கும் மதச்சார்பின்மை தொடர்பாக இத்தகைய சந்தேக கருத்துகள் கிடையாது. எனவேதான் இது பிரச்சினை ஆகி இருக்கிறது. (இந்த 2 வார்த்தைகளையும் சேர்த்து செய்யப்பட்ட) அரசியல் சாசன சட்டத்தின் 42–வது திருத்தம், முன்தேதியிட்டுதான் அமலுக்கு வந்துள்ளது’’ என கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், ‘‘இந்த 2 வார்த்தைகளும் இல்லாத அரசியல் சாசன முகப்பினை அரசு விளம்பரங்களில் இடம் பெறச்செய்வது என்பது, அரசியல் சாசனத்தின் பண்புநலன்களையே அவமதிப்பதாகும். இந்த விஷயத்தில் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும். அத்துடன் பிரதமர் நரேந்திர மோடி மதச்சார்பின்மையையும், சோஷலிசத்தையும் புரிந்துகொண்டிருப்பதில் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.
பிற தலைவர்கள் கருத்து
பீகார் முதல்–மந்திரியும், ஐக்கிய ஜனதாதள தலைவர்களில் ஒருவருமான ஜித்தன்ராம் மஞ்சி கருத்து தெரிவிக்கையில், ‘‘சிலர் மதச்சார்பின்மை தேவையில்லை; இந்தியா அதை மறந்து விட வேண்டும் என்கிறார்கள். இது கவலை அளிக்கிறது. காந்தி அவ்விரண்டும் இருக்க வேண்டும் என்று கூறி உள்ளார். ஆனால் மதச்சார்ப்பின்மை தேவையில்லை என்று கூறக்கூடிய நிலைக்கு நாம் சொரணையற்று போய்விட்டோமோ?’’ என கேள்வி எழுப்பினார்.
மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி (காந்தியின் 2–வது மகன் மணிலால் காந்தியின் பேரன்), ‘‘ மதச்சார்பற்ற, சோஷலிச என்ற வார்த்தைகளை அரசியல் சாசன முகப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று கூறுவது கண்டிக்கத்தக்கது. அறியாமையினாலும், மதவெறியினாலும் கூறப்படுகிற இறுமாப்பான வார்த்தைகள் இவை’’ என கூறினார்.
சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் சிவபால் யாதவ் கருத்து தெரிவிக்கையில், ‘‘இது கவலை அளிக்கிறது. துரதிர்ஷ்டவசமானது. இந்தியா சோஷலிச நாடாக திகழ வேண்டும் என்று எண்ணிய சுதந்திரப்போராட்ட வீரர்களுக்கு அவமதிப்பு’’ என கூறினார்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval