Saturday, January 24, 2015

உங்கள் திறமையின் மீது சந்தேகப்படாதீர்கள்: அப்துல் கலாம்


உங்கள் திறமையின் மீது சந்தேகப்படாதீர்கள்: அப்துல் கலாம்ஜெய்ப்பூரில் நடந்து வரும் லிட்ரேச்சர் திருவிழாவில் முன்னாள் ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான டாக்டர்.அப்துல்கலாம் இளைஞர்களுக்கு தன் வாழ்க்கையில் இருந்து அனுபவங்களை தொகுத்து வழங்கிய அறிவுரைகள் பின்வருமாறு:-
இளைஞர்களே! ஒருபோதும் உங்கள் திறமையின் மீது சந்தேகப்படாதீர்கள்.
இஸ்ரோ தலைவர் சதீஷ் தவான் என்னிடம் 7 ஆண்டுகளுக்குள் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் செயற்கைகோளை நிறுத்த ராக்கெட் சிஸ்டம் ஒன்றை வடிவமைக்குமாறு கேட்டார். என்னால் முடியுமா? என எனக்கு அப்போது சந்தேகமாகவும், குழப்பமாகவும் இருந்தது. அதை உருவாக்க என்ன செலவானாலும் பரவாயில்லை. அதை உருவாக்க எத்தனை பேர் உங்களுக்கு வேண்டும். அதை செய்ய உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் கூறுங்கள். அதை மத்திய அரசிடமிருந்து பெற்று தருகிறேன். ஆனால், நீங்கள் அதை செய்து முடிக்க வேண்டும்.' என்றார்.

எனக்கு ஆச்சர்யமாகவும், குழப்பமாகவும் இருந்தது. என்னை விட எத்தனையோ சீனியர்கள் இருக்கிறார்கள். ஆனால், என்னை ஏன் இதற்கு தேர்ந்தெடுத்தார்கள் என யோசித்தேன். என்னால் இதை செய்ய முடியுமா? எனக்கு சந்தேகமாக இருந்தது. ஆனால், அந்த சந்தேகத்தை என் மனதிலிருந்து நீக்கிய பிறகே நான் அதை செய்ய முடிந்தது.

நான் பைலட்டாக வேண்டும் என ஆசைப்பட்டேன். அதனால்தான் ஏரோனாட்டிக்கல் என்ஜினியரிங் படிப்பை தேர்வு செய்து படித்தேன். பைலட்டாக வருவதற்கு செலன்சன் பேனலுக்கு போன போது அங்கே 10 பேர் இருந்தனர். ஆனால், 9 சீ்ட்டுகளே இருந்தது. இறுதியில் நான்தான் வெளியேற்றப்பட்டேன். எனக்கு அப்போது மனமே உடைந்து விட்டது போலிருந்தது. ஆனால், என்னால் பைலட்டாக வரமுடியாமல் போனாலும், இந்த நாட்டுக்கே ஜனாதிபதியாக பின்னாளில் வந்துவிட்டேன்.

நான் ஜனாதிபதியானதும் விமானப்படை தளபதியிடம் எனக்கு விமானத்தில் பறக்க கற்றுக் கொடுங்கள் என கேட்டேன். அவர் எனக்கு 6 மாத காலம் பயிற்சியளித்தார். என்னால் பைலட்டாக முடியவில்லை என்றாலும் இன்று வரை என்னுடைய பறக்கும் கனவை நினைவாக்கி கொண்டுதான் இருக்கிறேன். இது எப்படி நடந்தது? நான் கனவு கண்டதால் நடந்தது. நான் பறக்க வேண்டும் என கனவு கண்டேன். அதனால் நடந்தது. என்னுடைய கனவுகள் எண்ணங்களானது. என் எண்ணங்கள் செயலாக மாறியது.

உங்கள் கனவுகள் நனவாக உங்களுக்கு நான் ஒரு மந்திரத்தை தருகிறேன். 'உங்கள் திறமையின் மீது ஒருபோதும் சந்தேகப்படாதீர்கள்'. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்தாலும் நான் கொடுத்த இந்த மந்திரத்தை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். எனக்கு என்ன கிடைக்கும் என்று எப்போதும் நினைக்காதீர்கள். அங்குதான் பிரச்சனைகள் ஆரம்பமாகின்றன. இந்தியாவை உலகிலேயே வாழ்வதற்கு சிறந்த நாடாக மாற்றுவோம் என உறுதியெடுத்துக் கொள்ளுங்கள்!

இவ்வாறு டாக்டர்.அப்துல் கலாம் இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கினார்

courtesy;Malaimalar

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval