Thursday, January 29, 2015

சமூக வலைத்தளங்களின் மூலம் பரவும் பொய்யான செய்திகள் – புலம்பும் மருத்துவர்கள்

indruவாட்ஸ்-அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில், ரத்தம் கேட்டோ, காணாமல் போன சிறுவனை கண்டுபிடிக்க கோரியோ உதவிகோரும் குறுஞ்செய்திகள் அடிக்கடி வருவது வழக்கம்.
அதுபோன்ற தகவல்களின் உண்மைதன்மையை அறியாமல் பலரும் அதனை தங்கள் நண்பர்களுக்கு பரப்புகின்றனர்.
தற்போது பெங்களூருவிலும் அதேபோன்ற ஒரு வாட்ஸ்அப் போலி செய்தியால், ஒரு பிரபல மருத்துவமனையையே ஸ்தம்பித்துள்ளது.
சாம்ராஜ்பேட்டை பகுதியிலுள்ள கெம்பேகவுடா இன்ஸ்ட்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் (கிம்ஸ்) என்ற அரசு மருத்துவமனையில், தலையில் காயங்களுடன் 17 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர், சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரை பற்றி தெரிந்தவர்கள் மருத்துவமனையை அணுகலாம் என்றும் ஒரு தகவல் வாட்ஸ் அப்பில் பரவியது.
இந்நிலையில் தியாகராஜா நகர் பகுதியை சேர்ந்த தேங்காய் டீலர் சித்தராஜு என்பவருக்கும் இந்த தகவல் நண்பர் மூலம் கிடைத்துள்ளது.
இவரது மகன் ஹேமந்த் யோகா வகுப்புக்கு சென்றுவிட்டு வீடு திரும்பாத நிலையில், தனது மகன் தான் கிம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்று நினைத்து மருத்துவமனைக்கு ஓடியுள்ளார்.
அங்கு வாட்ஸ்அப் தகவல் பற்றி கூறியதும், ஓட்டுமொத்த மருத்துவமனையும் அனைத்து வார்டுகளிலும் தீவிரமாக தேடியுள்ளனர்.
ஆனால், பல மணி நேரம் தேடிய பிறகும் அதுபோன்ற எந்த நபரும் மருத்துவமனையில் சேர்க்கப்படவில்லை என்பது தெரியவந்தது.
மருத்துவர் ஒருவர் இதுகுறித்து கூறுகையில் :
வாட்ஸ் அப் செய்தியை வைத்து 2 மணிநேரம் தேடினோம். ஆனால், இறுதியாக அந்த சிறுவன் மும்பையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
கிம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் கூறுகையில் :
சில நேரங்களில், கிம்ஸ் மருத்துவமனையிலுள்ள நோயாளி ஒருவருக்கு குறிப்பிட்ட வகை ரத்தம் தேவை என்று செய்தி பரப்பிவிடப்படுகிறது.
இதை நம்பி சிலர் ரத்தம் தருவதற்காக மருத்துவமனைக்கு வந்து திரும்பி சென்ற சம்பவங்களும் நடந்துள்ளன.ஊடகங்களில் வெளியாகும் செய்திக்கு நம்பகத்தன்மை அதிகம். தவறு நடந்தால், பொறுப்பாளியாக வேண்டி வரும் என்பதால் ஊடகங்கள் செய்திகளை கவனத்தோடு வெளியிடும்.
ஆனால், சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்களின் உண்மை தன்மையை நன்கறிந்த பின் செயல்படுவதே சிறந்தது என்று தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval