இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் வரும் மதவாரி கணக்கெடுப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளி வருவதற்கு முன்பே, எக்கச்சக்க கதைகள் பேசப்படும். அவை உண்மையான முடிவுகள் வெளிவரும் பொழுதுதான் எத்தனை அபத்தமானது என்றே நமக்கு புலப்பட்டு இருக்கிறது.
எடுத்துக்காட்டாக இந்தியாவின் இந்து – முஸ்லீம்களின் எண்ணிக்கையை எடுத்துக்கொள்வோம். 1991 மக்கள் தொகை கணக்கெடுப்பு 10.67 கோடி இஸ்லாமியர்கள், 69.01 கோடி இந்துக்கள் இருப்பதாக சொன்னது. பத்து வருடங்கள் கழித்து இந்த எண்ணிக்கை முறையே 13.82 கோடி, 82.76 கோடி என்று உயர்ந்துள்ளது. இதை வேறு வகையில் சொல்வது என்றால் வருடத்துக்கு 2.62% என்கிற அளவில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 29.5% அதிகரித்து உள்ளது. இந்துக்களின் எண்ணிக்கை வருடத்துக்கு 1.83% என்கிற அளவில் 19.9%, மொத்தமாக அதிகரித்துள்ளது.
மக்கள் தொகை (மில்லியன்)
இந்துக்கள் முஸ்லீம்கள்
இந்துக்கள் முஸ்லீம்கள்
கடந்த பத்து வருடங்களில் முஸ்லீம்களின் மக்கள்தொகை, இந்துக்களின் எண்ணிக்கையை விட கண்டிப்பாக அதிகமாக அதிகரித்து உள்ளது. அதற்கான காரணங்கள் தனியான ஒரு கட்டுரைக்கு உரிய விஷயங்கள் கொண்டது. இதே வேகத்தில் மக்கள் தொகை வளர்வதாக கணக்கிட்டுக்கொண்டால் இஸ்லாமியர்களின் மக்கள் தொகை இந்துக்களின் மக்கள் தொகையை எட்டிப்பிடிக்க கிட்டத்தட்ட 220 வருடங்கள் ஆகும்.
துல்லியமாக சொல்வது என்றால் 2233 கி.பி.யில்தான் அந்த எட்டிப் பிடிப்பது நிகழும். இருநூறு வருடங்கள் கழித்து நடக்கக் கூடிய ஒரு சம்பவத்துக்காகத்தான் நம்முடைய அரசியல் தலைவர்களும், மதத்தலைவர்களும் கூப்பாடு போடுகிறார்களா?
அதைவிடுங்கள். நம்மை 1520 களில் கட்டப்பட்ட ஒரு மசூதியைப் பற்றி, ஐநூறு வருடங்கள் கழித்து கவலைகொள்ள வைத்தவர்கள் இல்லையா அவர்கள்.
1990 களின் அதே வேகத்தில் மக்கள் தொகை வளர்வதாக எண்ணிக்கொண்டால், 2233 ல் இந்திய முஸ்லீம்கள், இந்துக்கள் இருவரும் சமமாக 5600 கோடியை தொட்டிருப்பார்கள். தற்போதைய உலக மக்கள் தொகையைப் போல பதினாறு மடங்கு எண்ணிக்கையை ஒரு தேசத்தில் அடைக்கிற கொடுமை அது. இதை இப்படி யோசிக்கலாம்…நீங்கள் உட்கார்ந்து இருக்கும் இடத்தில் நூறு பேர் இருப்பார்கள். அதை சமமாக இந்துக்களும், இஸ்லாமியர்களும் பிரித்துக்கொள்வார்கள். இன்றைக்கு இருப்பதை போல நூறு மடங்கு அதிகமான மக்கள் தொகை.
கிறிஸ்தவர்கள், சமணர்கள், சீக்கியர்கள், பார்சிக்கள், பௌத்தர்கள் ஆகியோர் மக்கள் தொகையில் எவ்வளவு பங்களிப்பு தருகிறார்கள் என்பதை இந்த கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.
இந்திய மக்கள் தொகையில் இந்து முஸ்லீம் சதவிகிதம்… 1961-2001 வரை
நம்மை பயமுறுத்தும் நபர்களின் வார்த்தைகளை நம்புவது என்றால், இந்தியாவில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 1991-ல் 1.9 கோடியில் இருந்து , 2.4 கோடியாக பத்து வருடங்களில் உயர்ந்துள்ளது. இதே 2.36% வேகத்தில் இந்துக்களை எட்டிப்பிடிக்க, இந்திய கிறிஸ்தவர்களுக்கு 670 வருடங்கள் ஆகும். அப்பொழுது மக்கள் தொகை சமமாக 195 நூறாயிரம் கோடி இந்துக்கள், அதே அளவு கிறிஸ்தவர்களை கொண்டிருக்கும். அதாவது தற்போதைய உலக மக்கள்தொகையைப்போல 60,000 மடங்கு ஒரே நாட்டில் வாழ்வது என்கிற நிலைமை. இப்பொழுது வாழும் ஒவ்வொரு இந்தியனைப் போல நான்கு லட்சம் மடங்கு அதிகமான மக்கள்!
220 அல்லது 670 வருடங்கள் கழித்து நடக்கக்கூடிய ஒன்றை பற்றி இப்பொழுது நம்மை கவலைப்பட சொல்கிறார்கள். நாம் அதுவரை உயிரோடு இருப்போமா?
ஆனால், உண்மை வேறு ஒன்றாக இருக்கிறது. வளர்ச்சி விகிதங்கள் குறையவே செய்கின்றன. மக்கள் தொகை வீழ்வது வருங்காலத்தில் நிகழவே செய்யும். எந்த முன்முடிவும் இல்லாமல் பார்த்தால் நீங்கள் இந்த வீழ்ச்சி இப்பொழுதே தென்படுவதை காண முடியும்.
ஆக, உண்மையில் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் எப்பொழுதும் இந்துக்களை எட்ட முடியாது என்பதே நிதர்சனம். இஸ்லாமியர்கள் மக்கள் தொகையில் 20%க்கு குறைவாகவும், கிறிஸ்துவர்கள் 2.5%. க்கு குறைவாகவுமே இருப்பார்கள். ஒவ்வொரு இந்திய முஸ்லீமுக்கும் ஐந்து இந்திய இந்துக்கள் இருப்பார்கள். ஒவ்வொரு இந்திய கிறிஸ்துவருக்கும் 35 இந்துக்கள் இருப்பார்கள்.
பின்னர் ஏன் இந்த அச்சமும், விஷம பிரசாரமும்?
இந்த சூழலில்தான் ‘முஸ்லீம்கள் மக்கள்தொகை 24 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது’ என்ற தகவல் கசியவிடப்பட்டு, அவை ஊடகங்களில் வெளியானவுடன் சில குய்யோ…முறையோ குரல்கள் கேட்கத் தொடங்கின.
இது தொடர்பாக வெளியான சென்சஸ் அறிக்கையில், இந்திய மக்கள்தொகையில் 13.4% மாக இருந்த அவர்களின் பங்கு தற்போது 14.2% மாக ஏறியுள்ளது என்றும்,.8 சதவிகிதம் என்கிற அளவில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்றும், மொத்த வளர்ச்சி வேகம் 24 % என்றும் கூறப்பட்டுள்ளது.
இது பெரிய வளர்ச்சியாக தோன்றினாலும், நாட்டின் சராசரி மக்கள் தொகை வளர்ச்சி 18 % என்கிற புள்ளி விவரம் தெரியவரும்போது, இது அவ்வளவு பெரிய வளர்ச்சி இல்லை என்பதை உணரமுடியும்.
கடந்த சென்சஸில் இந்துக்கள் மொத்தம் 80.5% மாக இந்திய மக்கள் தொகையில் இருந்தார்கள். தற்பொழுது வெறும் இஸ்லாமியர்களின் சதவிகிதம் மட்டுமே வெளியிடப்பட்டு உள்ளது. அரசு இந்துக்களின் சதவிகிதத்தையும் வெளியிடும் பொழுதே உண்மையில் இந்துக்களின் எண்ணிக்கையை விழுங்கிவிட்டுதான் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை பெருகியதா? என்பதை அறியமுடியும்.
டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றிக்கனியை பறிக்க கடுமையான போட்டி ஏற்பட்டுள்ள சூழலில், அங்கே ஓட்டுக்களை அள்ள அரசு மேற்கொண்ட காய் நகர்த்தலாகவே இதை அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள்.
அரைகுறை உண்மை ஆபத்தானது இல்லையா?
- பூ.கொ. சரவணன்
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval