Friday, January 16, 2015

ஜான் பென்னி குக்

John Pennycuick (British engineer)ஜான் பென்னி குக் எனும் அற்புத மனிதர் பிறந்த நாள். எத்தியோப்பியாவில் ஆங்கிலேய அரசுக்கு பணி செய்துவிட்டு பொதுப்பணி துறை பொறியியல் வல்லுனராக மதுரையில் பணியாற்றினார். பசியும், வறுமையும் தென்பகுதி மக்களை வாட்டுவதை கண்டார். பலபேர் கொள்ளையடிப்பில் ஈடுபடுவதையும் கண்டார். வெறுமனே வைகை நதியை மட்டும் நம்பி வானம் பார்த்த பூமியாக இருந்த இவற்றை எப்படி பசுமையாக்குவது என யோசித்தார்.
அப்பொழுது தான் அவர் கண்களில் முல்லைப்பெரியார் நதிபட்டது. மேற்கு நோக்கி பாய்ந்து அரபிக்கடலில் வீணாக கலக்கும் அந்நதியை திசை திருப்பி கிழக்கு நோக்கி பாயவிட்டால் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை முதலிய பகுதிகளை பசுமை போர்த்திய பூமியாக மாற்றிவிடலாம் என உணர்ந்து களத்தில் இறங்கினார் பென்னி குக். ஏற்கனவே ராமநாதபுரம் ராஜா தன்னுடைய தளபதி முத்து அருளப்ப பிள்ளையிடம் கேட்டு முடியாது என்று
ஒதுக்கப்பட்ட யோசனை அது.
பென்னிகுக் மனம் தளராமல் திட்டம் தீட்டினார். ஜான் ரைவ் என்கிற பொறியியல் வல்லுனருடன் விவாதித்தார். அறுபத்தி இரண்டு லட்சம் அணை கட்ட செலவாகும் என்று அறிக்கை தயாரித்து ஆங்கிலேய அரசிடம் கொடுத்தார்.
. "இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் இந்தப்பகுதி முழுக்க செழிப்படையும் ; திட்டம் நிறைவேறினால் உலகத்திலேயே மிக அழகான மகிழ்ச்சி தரும் சுற்றுலா மையமாக இது மாறும் சாத்தியமும் உள்ளது. இதுவே என் கனவு !" என்று அறிக்கையில் குறிக்கிற அளவுக்கு அவர் மனதெல்லாம் இந்த திட்டம் பொங்கிக்கொண்டு இருந்தது. பல லட்சம் ஏக்கர் நிலம் பாசனம் பெறும்; வரி வசூல் செய்யலாம் அவர் சொன்னதும் அனுமதி கொடுத்தது அரசு.
பணிகள் தொடங்கி வேகவேகமாக நடந்து பாதி பணிகள் முடிந்த பொழுது காட்டாற்று வெள்ளம் எல்லாவற்றையும் அடித்துக்கொண்டு போயிற்று. ஆனால், பென்னி குக்கின் நம்பிக்கையை அது அசைக்கவில்லை. அரசிடம் உதவி கேட்டார். அரசு மறுத்தது.
கப்பலேறி ஊருக்கு போனார். இருக்கிற சொத்துக்களை எல்லாமும் விற்றார். மனைவியின் நகைகள், வீடு எல்லாமும் விற்கப்பட்டது. எந்த அளவுக்கு வறுமை அவரை ஆட்க்கொண்டது என்றால், எப்படி தமிழர்களுக்கு தாலியோ அதுபோல ஆங்கிலேயர்களுக்கு அவர்கள் படுக்கும் கட்டில்... அதையே விற்று செலவுச் செய்கிற அளவுக்கு எதுவுமே இல்லாத நிலைக்கு வந்தார். ஆனாலும் முல்லைப்பெரியாறு அணையை கட்டினார். தொன்னூறு அடி நீளமுள்ள தேக்கு மரங்களை வெட்டிப்போட்டு ரோப்வேக்களை அமைத்தார். பல நூறு பேரின் இறப்பு, காலரா, மலேரியா என்று எத்தனையோ சிக்கல்கள் துரத்திய பொழுதும் மனம்தளராமல் செயல்பட்டார் அவர். அவ்வப்பொழுது சாதி ஒழிப்பை வலியுறுத்தி கலப்பு திருமணங்களும் செய்து வைத்தார். எட்டு வருட உழைப்பில் உருவானது முல்லை பெரியாறு அணை. பென்னி குக்கின் நிலை அப்பொழுது எப்படி இருந்திருக்கும் என சொல்லவேண்டாம் - அவரே சொல்கிற வரிகள் இவை...
"இந்த உலகத்தில் இருக்கப்போவது ஒரே முறை; எனக்கு செய்ய கிடைத்த நல்ல
செயலை நான் அலட்சியப்படுத்தவோ, தள்ளிப்போடவோ கூடாது!"என்றார்.
2.23 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பை இன்றைக்கு காத்து நிற்கும் முல்லைப்பெரியாறு அணையை கட்டிய அவருக்கு சிலை வைத்து தெய்வமாகவே வழிபடுகின்றனர் அப்பகுதி மக்கள். எத்தனையோ பிள்ளைகள் இங்கிலாந்தில் பிறந்த அவரின் பெயர் தாங்கி அப்பகுதிகளில் வளர்கிறார்கள். அறுபத்தைந்து லட்சம் மக்களின் குடிநீர் தேவை தீர்த்த வள்ளல் அல்லவா அவர்
 Mohamed Rabeek
BY;  Mohamed Rabeek
   New york,  U.S.A




No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval